பிரான்ஸில் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் Viparis -Villepinte Hall 8 - Parc des Expositions
இல் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற மாவீரர் நாள் நிகழ்வில் 10 ஆயிரம் வரையிலான மக்கள் மிகவும் உணர்வு எழுச்சியோடு கலந்துகொண்டு மாவீரத் தெய்வங்களுக்குத் தமது அஞ்சலியைத் தெரிவித்தனர்.
ஆரம்ப நிகழ்வுகள் Cimetiere à Pantin 164 av Jean Jaurès 93500 PANTIN என்ற முகவரியில் அமைந்துள்ள லெப்.கேணல் நாதன், கப்டன் கஜன், கேணல் பரிதி ஆகியோரின் நினைவுக் கல்லறைகள் அமைந்துள்ள துயிலுமில்லத்தில் இடம்பெற்றன.
நண்பகல் 12.00 மணி முதல் மக்கள் அலையெனத் திரண்டு மாவீரர் நாள் மண்டபத்திற்கு வருகை தந்தவண்ணம் இருந்தனர்.
பிற்பகல் 1.05 மணிக்கு தமிழீழத் தேசியத் தலைவரின் சிந்தனை மகுடத்துடன் ஆரம்பமான இந்நிகழ்வில் பொதுச் சுடரினை பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் திரு.யோசெப் அவர்கள் ஏற்றிவைக்க தமிழீழத் தேசியக் கொடியினை தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் பொறுப்பாளர் திரு. பார்த்தீபன் ஏற்றி வைத்தார்.
ஈகைச்சுடரினை கேணல் பரிதி அவர்களின் பெற்றோர் ஏற்றிவைத்த அதேவேளை அங்கு அமைக்கப்பட்டிருந்த மாவீரர் துயிலுமில்லத்தில் வைக்கப்பட்டிருந்த மாவீரர் திரு உருவப்படங்களுக்கான சுடர்களை மாவீரர்களின் பெற்றோர் மற்றும் உரித்துடையோர் ஏற்றிவைத்தனர். இந்தவேளையில் துயிலும் இல்லப்பாடல் ஒலிக்க அனைவரின் கண்களும் கண்ணீரால் நிறைந்தன.
தொடர்ந்து மாவீரர் கேணல் பரிதி அவர்களின் திரு உருவப்படத்திற்கு கேணல் பரிதி அவர்களின் துணைவியார் மற்றும் புதல்வியார் மலர்வணக்கம் செலுத்தினர்.
மாவீரர்களின் திரு உருவப்படங்களுக்கு பெற்றோர் உரித்துடையோர் மலர் வணக்கம் செலுத்தியதைத் தொடர்ந்து மிக நீண்ட வரிசையில் மக்கள் நின்று மாவீரர்களுக்கான தமது வணக்கத்தைத் தெரிவித்தனர்.
அங்கு முள்ளிவாய்க்காலில் உயிரிழந்த மக்களை நினைவுகொள்ளும் நினைவுத் தூபி ஒன்றும் விசேடமாக அமைக்கப்பட்டிருந்தது.
தொடர்ந்து அரங்க நிகழ்வுகள் இடம்பெற்றன. பிரான்சு தமிழர் கலைபண்பாட்டுக்கழக இசைக்குழுவின் எழுச்சிகானங்கள் மக்களை மாவீரர்களிடம் அழைத்துச்சென்றன.
மாவீரர் தினப்பேச்சுப்போட்டியில் வெற்றிபெற்ற மாணவர்களின் பேச்சுக்களும் இடம்பெற்றன.
தொடர்ந்து தமிழ்நாட்டில் இருந்து மதிமுக பொதுச்செயலர் வைகோ அவர்களின் உரை திரையில் காண்பிக்கப்பட்டது.
தொடர்ந்து பிரான்சு நாடாளுமன்ற உறுப்பினர் மெரியோசேப் புப்பெ அவர்கள் உரைநிகழ்த்தினார். நிகழ்வில் இடம்பெற்ற மாணவ மாணவியரின் எழுச்சி நடனங்கள் காலத்தின் தேவையாக அமைந்தன. மாவீரர் நினைவு சுமந்த கலைத்திறன் போட்டிகளில் வெற்றி பெற்ற போட்டியாளர்களில் 1ம் இடத்தை பெற்றவர்களுக்கு புலி இலட்சனை பெறிக்கப்பட்ட தங்கப்பதக்கமும், ஏனையோருக்கு பரிசில்களும் வழங்கி மதிப்பளிக்கப்பட்டது.
பிரான்சு தமிழர் கலைபண்பாட்டுக் கழகத்தின் உருவாக்கத்தில் தேனீக்கள் என்ற நாடகம் அனைவரையும் ஈர்த்தது.
நிகழ்வின் நிறைவில் பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு செயற்பாட்டாளர் திரு. சத்தியதாசன் அவர்கள் சிறப்புரை நிகழ்த்தினார்.
தமிழீழத் தேசியக்கொடி இறக்கலைத் தொடர்ந்து நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் பாடல் ஒலிக்க தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் என்ற தாரக மந்திரத்துடன் 2012 மாவீர்நாள் நிறைவுபெற்றது.
இந்நிகழ்வில் தமிழீழ மக்கள் பேரவையினரின் ஏற்பாட்டில் சிறிலங்காவின் இனப்படுகொலைக்கு நியாயம் கிடைக்கவேண்டும் என்பதை வலியுறுத்தி ஐக்கிய நாடுகள் சபை உட்பட சர்வதேச மனித உரிமைகளுக்கான அமைப்புக்களுக்கு கையளிப்பதற்கென ஒரு கோடி கையெழுத்துக்கள் பெறும் திட்டத்தின் கீழ் தமிழீழ மக்கள் பேரவையினரின் ஏற்பாட்டில் கையெழுத்துப் பெறப்பட்டன. நேற்றுவரை முப்பது ஆயிரத்துக்கும் மேற்பட்ட கையெழுத்துக்கள் பெறப்பட்டன.
இதேவேளை பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் உபகட்டமைப்புக்கள் அனைத்தும் இணைந்து திறம்பட இந்த மாவீரர் தின நிகழ்வை நிகழ்த்தியிருந்தன.
0 Responses to பிரான்ஸ் பாரிஸில் தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் ஏற்பாட்டில் உணர்வுபூர்வமாக இடம்பெற்ற மாவீரர் நாள் (படங்கள் இணைப்பு)