Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

மனித உரிமை என்பது மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவருக்கும் உரித்தானது. என்றும், இவை அனைத்துலகத்திலும் கடைப்பிடிக்கப்படும் சர்வதேச சாசனம் என்றும், யாவரும் சட்டத்தின் முன் சமம் என்றும் கூறப்பட்ட போதிலும் ஈழத்தமிழனின் இன்றைய நிலை என்ன?

தனது சொந்த தேசத்திலேயே அகதிகளாக்கப்பட்டு, உரிமைகள் பறிக்கப்பட்டு அநாதரவாக்கப்பட்டுள்ளான் ஈழத்தமிழன்.

அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்ட நிலையில் தனது உயிருக்கு உத்தரவாதம் இல்லாத நிலையில் உலகின் பல நாடுகளில் தஞ்சம் புகும் பொழுது அங்கும் அதீத கொடுமைகளை அனுபவிக்கும் நிலைதான் இன்றுள்ளது.

இந்தியாவில் அகதி முகாம்களிலும் அவுஸ்திரேலிய தீவுகளிலும் தவிக்கும் ஈழத்தமிழ் அகதிகளின் வாழ்க்கை மிகவும் அபாயகரமான நிலையில் இருக்கிறது. அதைவிட மலேசியா முதல் ஆபிரிக்கா வரை இடை நடுவில் தவிக்கும் உறவுகள் ஆயிரம் ஆயிரம்.

எதிர்வரும் 10ம் திகதி திங்கட்கிழமை பிரித்தானிய வெளிவிவகார அமைச்சிற்கு முன்னால் பாரிய கவன ஈர்ப்பு போராட்டம் ஓன்றை பிரித்தானிய் தமிழர் பேரவை ஒழுங்கு செய்துள்ளது. முள்ளிவாய்க்கால் அவலங்களை முன்னதாகவே அறிந்திருந்தும் ஐ நா சபை தமிழ் மக்களை பாதுகாக்கத் தவறியதை கண்டித்தும், இலங்கைத்தீவில் ஈழத்தமிழ் மக்கள் மீது தொடர்ச்சியாக நடைபெற்று வரும் இன அழிப்பினை தடுத்து நிறுத்துமாறும் கோரி உலக மனித உரிமைகள் தினமான 10/12/2012 அன்று இந்தப் போராட்டம் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இலங்கைத் தீவில் ஈழத் தமிழ் மக்களுக்கு இன்னமும் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படாத நிலையில் சர்வதேச நாடுகளில், குறிப்பாக பிரித்தானியாவிலிருந்து தமிழ் மக்களை இலங்கைக்குத் திருப்பி அனுப்பப்படக்கூடாது என்றும் சர்வதேச மனித உரிமைகள் தினமன்று வலியுறுத்தபடவுள்ளது.

அகதிகள் திருப்பி அனுப்புதல் தொடர்பாக ஒரு அரசியல் முடிவு எடுக்கப்படவிருக்கும் இக் காலப்பகுதியில், மிகவும் அவசியமான இந்தப்போராட்டத்தில் கலந்து கொள்ளும் படி பிரித்தானிய தமிழர் பேரவை உங்களிடம் அழைப்பு விடுக்கிறது.

சர்வதேச சமூகம் தவறு விட்டதை ஒப்புக் கொள்ளத் தொடங்கியுள்ள இன்றைய சூழ்நிலையில் அதற்கு அப்பால் சென்று தொடரும் இன அழிப்பை தடுத்து நிறுத்த வலியுறுத்தும் ஆற்றல் புலம் பெயர் மக்களிடமேயுள்ளது.

இதேவேளை, தோல்வி மனப்பான்மையை ஏற்படுத்தி போராட்ட சக்திகளிடம் இருந்து மக்களை அந்நியப்படுத்தி எம்மை பூரணமாக தோற்க்கடிப்பதற்கு எதிரி பெரும் முயற்சி செய்து வருகிறான் . ஆனால் , இதை அறியாது எம்மில் சிலர் அவனது சூழ்ச்சிகளுக்கு பலியாடுகளாகிறோம்.

எப்போது நாம் செயற்படாமல் விடுகிறோமோ, அப்பொழுதே நாம் தோற்று விடுகிறோம். எம்மிடம் எத்தகைய பலமும் சக்தியும் இருக்கிறது என்பதை அறியாமல் நாம் என்ன செய்து விட முடியும் என்று எம்மில் சிலர் ஒதுங்கியுள்ளனர். இதனை விடுத்து இன்றே செயற்படப் புறப்படுங்கள்.

அடிமேல் அடியடித்தால் அம்மியும் நகரும் என்பார்கள். ஆயிரம் ஆயிரம் பேர் இணைந்தால் அதிசயங்கள் பலவற்றை நாம் நிகழ்த்தலாம். எமது பலத்தை ஒன்றாக்கி எமது மக்களின் விடிவுக்காக போராடுவோம்.

பிரித்தானிய தமிழர் பேரவை

0 Responses to தவறிழைத்த ஐ.நா.வே! தமிழின அழிப்பினை தடுத்து நிறுத்து!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com