Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

மாண்புமிகு மனிதநேய மணிமகுடம் மக்கள் திலகம் எம் ஜி ஆர் பிறந்தநாள் . (17-01-1917 – 17-01-2013)

அலைகள் அடங்குவதில்லை அடித்துக்கொண்டே இருக்கும் எம்ஜிஆர் புகழலை அடித்துக்கொண்டே இருக்கின்றது.

( பிறந்தநாள் சிறப்பு பார்வை)

ஓராயிரம் ஆண்டுகள் போனாலும் எம் ஜி ஆர் புகழ் மங்காது..!

உள்ளமதில் ஈழவரைச் சுமந்தவரை அள்ளித்தந்த நல்லவரை விண்ணுலகம் அழைத்ததனால்
மண்ணுலகில் ஈழவர்கள் வேதனையில் விழுந்தனரே..!

ஓராயிரம் ஆண்டுகள் ஆகட்டுமே நம் பொறுமையின் பொருள் மட்டும் விளங்கட்டுமே நம் பரம்பரைகள் நாம் அடிமையில்லை என முழங்கட்டுமே..! என்று தீர்க்க தரிசனமாக சொன்னவர் கருணைவாரிதி புன்னகை மன்னன் பொன்மனசெம்மல் எம் ஜி ஆர்.

வள்ளுவன் இளங்கோ கம்பனைப்போல் விரியும் புகழுக்கு ஆளாகி, விரிந்து செல்லும் புகழுக்கு மனிதராகி, மக்களால் மறக்க முடியா அன்புக்கு சொந்தமாய் திகழ்பவர் அமரர் எம் ஜி ஆர்.
ஆறுகள் அடங்குவதில்லை ஓடிக்கொண்டே இருக்கும் அதுபோலவே எம் ஜி ஆரின் புகழாறும் ஓடிக்கொண்டே
இருக்கின்றது.

அலைகள் அடங்குவதில்லை அடித்துக்கொண்டே இருக்கும் அதுபோல் அவரின் புகழலை அடித்துக்கொண்டே இருக்கின்றது.

சத்திய தாயின் உத்தம மகனாய் பிறந்து தமிழர்கள் வீடுகளில் தெய்வமகனாகி விட்டார் அமரர் எம் ஜி ஆர் என்றால் மிகையில்லை.

சிறு வயதில் தான் பட்ட துன்பங்களை வசதிகள் வந்த பின்பு மறந்து விடாது தன்னைப்போல் சிறு பராயத்தில் கஷ்டங்களை சிறு பிள்ளைகள் படக்கூடாது என்றெண்ணி அவர்களுக்கு உணவு வழங்கி காத்து வந்தார்.
 

அவரின் மனித நேயமே அவரை எல்லோரும் மதிக்கும்படி செய்தது, அஞ்சா நெஞ்சமும் சோம்பல் இல்லா சுறுசுறுப்பும் அவரை மேலே மேலே உந்தித்தள்ளியது வெற்றிமேல் வெற்றிகள் மலர்களாய் விரிந்து அவருக்கு மணம் பரப்பியது.

தப்பு என்றால் அவர் எவராயினும் தட்டிக்கேட்க்க தயங்கியதில்லை மனதில் பக்குவம் நல்லவர்கள் கூட்டு செய்கையில் நேர்மை ஆற்றல் உள்ளவர்களை மதிக்கும் பண்பு கண்ணீர் சிந்தியோரை சிரிக்க செய்தார்.

சிரித்தவர்களை சிந்திக்க செய்தார் அரசு பார்க்கட்டும் அது நம்ம வேலையில்லை என்று ஒதுங்கி வாழவில்லை.

ஆபத்து காலங்களில் மக்கள் துயர் துடைக்க அலையாய் எழுந்து அல்லலுற்றோரை அணைத்தார் ஆறுதல் சொன்னார் அன்னமிட்டார், வாத்தியார் வந்துவிட்டார் என்று அறிந்தவுடன் பசியால் மெலிந்தவர்கள் முகங்களில் புன்னகை பூத்தது பொன்மனம் அவர்கள் பசியை ஆற்றியது.

“ஆற்றுவார் ஆற்றல் பசியாற்றல் அப்பசியை மாற்றுவார் ஆற்றலின் பின்னே” என்ற அய்யன் திருவள்ளுவன் குறளுக்கு தக்கபடி வாழ்ந்து காட்டினார்.

பசியை பொறுத்து தவமிருக்கும் வலிமை மிகுந்த முனிவர்களை காட்டிலும் பசித்தவர்கள் பசியை போக்குபவரே மிகவும் சிறந்தவர் என்பது அக்குறளின் பொருளாகும்.

பணத்துக்கும் பதவிக்கும் யாரையும் பின்பற்றியதில்லை அவரின் செயல்த்திறன் கண்டு பட்டங்களும் பதவிகளும் தேடி வந்தன.
நாடி வந்தோருக்கு நல்விருந்தளித்து நல்மனதுடன் கோடி நன்மைகள் செய்தார் கொண்டோர் கொண்டாடினர் கோலமகன் கொடையுள்ளம் கண்டு.

தனது நாடகக்குழுவில் நடித்த நலிவுற்ற கலைஞர்களுக்கு சுமார் 35 ஆண்டுகள் ஒவ்வொரு மாதமும் சம்பளம் அனுப்பிக்கொண்டிருந்தார்.

தன் கலைக்குழுவினர் நிலையுணர்ந்து, அதிசய மனிதராக அற்புத மனிதராக உலகத்துக்கு தன் செயலால் உணர்த்தினார் .

இன்னல்பட்ட ஈழமக்களுக்கும் உதவிகள் செய்தார் அவர்கள் விடிவுக்கு பல வழிகளிலும் கைகொடுத்தார்.

தமிழர்கள் எல்லோரும் இன்று அவர் புகழை அறிவார்கள் அவரை கேலி செய்தோர் கிண்டல் செய்தோர் எல்லோரும் இன்று அவரை சொந்தங்கொண்டாடுகின்றார்கள் என்றால் தர்மத்தின் வலிமை எத்தகையது என்பதனை அறியலாம்.

அவரைப்போல் கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளான நடிகன் முன்புமில்லை இன்றளவுமில்லை ஆனால் புகழில் அவருக்கு இணையாக எவரும் நெருங்க முடியவில்லை இன்றளவும் இனியும் வரப்போவது இல்லை.

தொழில்களை நேசித்தார் தொழிலாளிகளை போற்றினார் அவர்கள் பெருமைகளை நாட்டு மக்களுக்கு தனது நடிப்பாலும் பாட்டாலும் எடுத்துரைத்து விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.
வானத்து நிலவாய் சிலர் இருப்பார் அந்த வரிசையில் முதல்வன் தொழிலாளி..

என்ற அவரின் பாட்டை கேட்டு உற்சாகம் கொண்ட தொழிலாளிகள் ஓடியோடி உழைத்தனர்..

உழைப்பால் பிழைப்போர் தாழ்ந்திருந்தாலும் உயர்ந்தவர் ஆவார் குணத்தாலே என்றொரு பாட்டினால் பொருளாதாரத்தால் நொந்த ஏழைத்தொழிலாளிகள் இதயத்துக்கு ஒத்தடம் கொடுத்தார்.

பாடுபட்ட கை இது பாட்டாளிக்கை என்று தொழிலாளி பெருமையினை எழுச்சியுடன் பறைசாற்றினார்.

தனது நடிப்பால் அவர் கைவீசி புன்னகைத்து எழுச்சி கூட்டி நடிக்கும் அழகு பொலிவு அவருக்கு மட்டுமே வரும் கலை.
என்றும் அவர் இரசிகர்கள் அவர் நினைவாகவே வாழ்கின்றார்கள் அவர் சொன்ன நல்ல பாதையில் அனைவரும் நடத்தலே உண்மையில் அவரின் ஆன்மாவுக்கு மேலும் மேலும் மகிழ்வைத்தரும்

எம் ஜி ஆர் நாமம் வாழ்க.

ஆக்கம்
இரசிகன்
ம .இரமேசு

0 Responses to மக்கள் திலகம் எம் ஜி ஆர் பிறந்தநாள் (17-01-1917 – 17-01-2013)

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com