Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தமிழராய் எழுவோம்! தமிழர் நாடு வெல்வோம்! என்ற தாரக மந்திரத்துடன் மலேசியா - கோலாலம்பூர் நகரில் 2வது உலக தமிழர் பாதுகாப்பு மகாநாடு 2012 28ஆம் திகதி நடைபெற்றது.
பினாங்கு மாநில துணை முதலவர் பேராசிரியர் ராமசாமி இந்த மகாநாட்டை திறந்து வைக்க, மகாநாட்டை சிறப்பிக்கும் முகமாக மலேசியாவின் எதிர்க்கட்சி தலைவர் டத்தோஸ்ரீ அன்வர் இப்ராஹீம் இலங்கையில் நடந்த இனப்படுகொலையை ஆதரிக்க முடியாது, இலங்கையில் நடந்தது உள்நாட்டு விவகாரம் அல்ல அது அனைத்துலக மனிதவுரிமை மீறல் என கருத்துரைத்தார் .
 
முதல் முதலாக 2010யில் இந்த மகாநாட்டை நடாத்திய தமிழ்நாட்டை சேர்ந்த புதிய தமிழகம் கட்சி தலைவர் கலாநிதி  கிருஷ்ணசாமி அவர்கள் இந்த இரண்டாவது மகாநாட்டை கோலாலம்பூரில் மலேசியா தமிழ் உணர்வாளர் சாமுவேல்ராஜ் மற்றும் மலேசியா உலக தமிழர் பாதுகாப்பு அமைப்பினருடன் ஒன்று சேர்ந்து  உயர்ந்த நோக்கத்துடன் ஒழுங்கு செய்திருந்தார்கள்.
 
உலகம் முழுதும் இருந்து தமிழ் அறிவாளர்கள், பேராளர்கள் இந்த மகாநாட்டில் கலந்து கொண்டனர். தமிழ் நாடு, பர்மா, சிங்கப்பூர், அவுஸ்திரேலியா, மற்றும் தாயகத்தில் இருந்தும் அத்தோடு  கனடா, நோர்வே,டென்மார்க், ஹோல்லாந்து, பெல்ஜியம், ஜெர்மனி, பிரான்சு, சுவிட்சர்லாந்து, இத்தாலி, பின்லாந்து, நியூ சிலாந்து ஆகிய மக்கள் அவைகள் இணைந்த அனைத்துலக ஈழத்தமிழர்  மக்கள் அவை,  பிரித்தானியா தமிழர் பேரவை அத்தோடு ஏனைய புலம்பெயர் அமைப்புகள் உள்டங்க 100க்கும்  மேலான பேராளர்களும், அறிஜர்களும் , மக்கள் பிரதிநிதிகள் இந்த மகாநாட்டில் கலந்து கொண்டனர்.
 
இந்த மாகாநாட்டை ஆரம்பித்து வைத்து உரையாற்றிய  கலாநிதி கிருஷ்ணசாமி அவர்கள் பேசும் போது உலகத் தமிழினத்  தலைவர்கள் எனக் கூறிக்கொண்டு தமிழை வைத்து ஆட்சி நடத்திக் கொண்டிருப்பவர்கள் இலங்கையில் இனப்படுகொலையைத் தடுத்து நிறுத்த முன்வராமல் பின்வாங்கி இருந்தது ஏன் ? திராவிடர் பெயரை வைத்துக் கொண்டு அரசியல் நடத்தியவர்கள் தங்கள் ஆட்சி நிலைக்க வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தார்களே தவிர தமிழ் மக்களை காப்பாற்ற முன்வரவில்லை. எழு கோடி தமிழர்கள் பொங்கி எழுந்திருந்தால் இலங்கையில் இனப்படுகொலையை தடுத்து நிறுத்தி இருக்கலாம்.ஆனால் தமிழின தலைவர்கள் என்று கூறிக்கொண்டிருப்பவர்கள் தமிழ் மக்களை காப்பாற்ற முன்வரவில்லை. ஈழத் தமிழர்களுக்கு தமிழீழம்  அமைய வேண்டும் அத்துடன் உலகத் தமிழர்களுக்குரிய   அடையாளம்  பாதுகாக்கப்பட வேண்டும் என்ற நோக்கமே இந்த உலகத் தமிழர் பாதுகாப்பு மகாநாடு என்றார். இந்த மகாநாட்டிற்கு  சர்வதேச ரீதியாக  வந்திருக்கும் பேராளர்களை கண்டு இன்று இந்த மகாநாட்டின் முக்கியத்துவத்தை எல்லோரும் அறிந்திருப்பதாக அவர் கூறினார்.
 
தமிழரின் வாழ்வாதார உரிமை நிலைநாட்டப்பட வேண்டும், உலகத் தமிழர்களின் பாதுகாப்பு மேம்படுத்தப்படவேண்டும், அரசியல், சமூகம் , பொருளாதாரம், கலை கலாச்சார உரிமைகளைப் பாதுகாக்கக் கூடிய வல்லமையை தமிழர்கள் பெற்றிருக்க வேண்டும். அந்த உரிமையை நாம் இழந்தோமேயானால் தமிழர்களின் வாழ்வாதார உரிமைகள் சீர்கெட்டு விடும் என்பதால் நாம் எச்சரிகையாக இருக்க வேண்டும். முதலில் நாம் யார் என்பதை தெளிவு படுத்திக்கொள்ள வேண்டிய காலகட்டத்தில் நாம் இருக்கின்றோம். திராவிடர் என்றும், இந்தியர் என்றும், தமிழர் என்றும் கூறிக்கொண்டிருக்கிறோம், எமது  அடையாளம் தான் என்ன என்பதை நாம் சிந்திக்க வேண்டும். இந்தியர் என்று கூறிக்கொண்டு அர்த்தமற்ற வார்த்தைகளை பேசிக்கொண்டு இருப்பதை நாம் நிறுத்திக்கொள்ள வேண்டும். தமிழன் என்ற உணர்வோடு நாம் செயல்பட்டால் தான் உலகெங்கும் வாழுகின்ற தமிழர்களுக்கு நாம் அரணாக இருக்க முடியும் என்று பேராசிரியர் ராமசாமி கூறினார்.
 
பேராசிரியர் ராமசாமி அவர்கள் தனது  உரையில் தொடர்ந்து கூறுகையில் , தமிழ் பாதுகாப்பு மகாநாடு ஒரு வலிமை பெற்ற மாநாடாக  உலகெங்கும் வாழ்கின்ற தமிழர்களுக்கு பாதுகாப்பை அளிக்கும் மாநாடாகத் திகழ வேண்டும். 1970-1980-1990 ஆம் ஆண்டுகளில் தான் தமிழன் என்ற பெருமையை உலகெங்கும் பறை சாற்றிய  பெருமை தமிழீழத் தலைவர் பிரபாகரனையே சாரும். இனப்படுகொலைக்கு எதிராக அவர் ஆயுதம் தாங்கி போராட்டம் நடாத்தி  உலகத் தமிழர்களை பாதுகாக்கும் அரணாக திகழ்ந்தார். ஈழத்தமிழர்களை மட்டுமல்ல உலகத் தமிழர்களையும் ஒற்றுமையில் ஒன்றுபடுத்திய பெருமைக்குரியவர் பிரபாகரன் ஆவார். கடந்த 30 வருடங்களாக உலகெங்கும் வாழ்கின்ற தமிழர்கள் ஒற்றுமையாக இருப்பதற்கு பிரபாகரன் ஒரு தூண்டுகோலாக இருந்தார்.
 
தொடர்ந்து அந்த ஒற்றுமைக்கு பலம் சேர்க்கும் வகையில் அனைத்து  தமிழர்களும் அயராது உழைக்க வேண்டும்  , தமிழர் நாடு வெல்வோம், தமிழீழம்  அமைப்போம் என்று உறுதியுடன் கூறினார் பேராசிரியர்.
 மாநாட்டில் பாராளுமன்ற உறுப்பினர் திரு மாவை சேனாதிராஜா அவர்கள் பேசுகையில்  தமிழர்களின் சுதந்திரத்துக்காக   அதிக விலையை கொடுத்திருக்கிறோம், ஈழத்தமிழர்களுக்கு ஏற்பட்ட இன்னல்கள் எந்த நாட்டிலும் தமிழர்களுக்கு ஏற்ப கூடாது. ஈழத்தில் தமிழர்களின் விடுதலைக்காக  மலேசிய தமிழர்களின் போராட்டமும், இந்தியாவில் வாழும் தமிழர்களின் போராட்டத்தையும்  நாம் மதிக்கிறோம். ஈழத்தமிழர்களின் விடுதலை   என்பதே எமது தணியாத தாகம். காரணம், இந்த உயரிய லெட்சியத்துக்காக எத்தனையோ உயிர்கள் தம்மை அர்ப்பணித்திருக்கின்றார்கள் . அத்துடன் இலங்கையில் நடந்த, நடந்து கொண்டிருக்கும் இனவழிப்பின் ,  விபரங்களை அவர் தெரிவித்து தமிழினம் பாதுகாத்துப்பட தனி நாடு வேண்டும்  என்று வலியுறுத்தினார் .
 
தமிழீழத்தை ஆதரித்து அங்கு வந்திருந்த அனைவரும் உரையாற்றினார்கள் .தமிழீழத்தின் அவசியம், உலகத் தமிழர்களின் முதன்மை கோரிக்கை தமிழீழ தனிநாடு அமைய மக்கள் கூட்டணி முழுமையாக செயல்பட வேண்டும் எனவும் ,உலகில் தமிழர்கள் பரந்து சிதறி வாழ்ந்தாலும்  ஆனால் தமிழருக்கான நாடு இல்லாத காரணத்தால் நமது வரலாற்று குறிப்புகள் அழிக்கப்பட்டு வருவதை பார்க்க கூடியதாக இருக்கின்றதை  பலர் தமது பேச்சுக்களில் சுட்டிக்காட்டி  அதன் பாதுகாப்பின் முக்கியதுவத்தை எல்லோரும் வலியுறுத்தினார்கள்.
 
இந்த மகாநாட்டின் தீர்மானத்தை அனைத்துலக தமிழீழ மக்கள் அவையின் பிரதிநிதி  திரு திருச்சோதி அவர்கள் வாசித்த போது, தமிழர் ஒரு தேசிய இனம், உலகெங்கும் பரந்து  வாழும் 12 கோடி தமிழர்கள் இறைமை அற்ற இனமாக, நாடற்ற இனமாக வாழ்வதாலேயே இன்றும் பாதுகாப்பு அற்ற இனமாக, உலகத்தில் அழிக்கப்படும் இனமாக வாழ்வதை நாம் பார்க்க கூடியதாக இருப்பதால், 12 கோடி தமிழர்கள் நாம் எமது விடுதலைக்காக போராட வேண்டும், எங்கள் அடையாளம் ஐக்கிய நாடுகள் சபையில் அங்கீகரிக்க நாம் போராட வேண்டும், அந்த அதிகாரமே எங்கள் பாதுகாப்பை உறுதிபடுத்தும் என்றார்.
 
தொடர்ந்து திரு திருச்சோதி அவர்கள் உரையாற்றுகையில் ஐக்கிய நாடுகள் சபை தம்மைத் தாமே ஆராயுமுகமாக வெளியிட்ட அறிக்கையின் அடிப்படையில் 'இலங்கையில் நடந்த போரில் தமிழ் மக்களைப் பாதுகாக்கத் தவறிவிட்டோம்' என்பதையும் 'அதனால் எண்பதாயிரத்துக்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளார்கள்' எனவும் ஐ.நா தெரிவித்திருக்கும் இவ்வேளையில் ஐக்கிய நாடுகள் சபையின் சாசனத்திற்கமைய ஈழத்தமிழ் மக்கள் சுயமாகத் தமது அரசியல் வேணவாவைத் தெரிவிக்குமுகமாக ஒரு பொதுசன வாக்கெடுப்பின் மூலம் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வை அளிக்க வேண்டுமென்று இனப்படுகொலையை வலியுறுத்த வேண்டுமென்று, ஐக்கிய நாடுகளின் சாசனத்திற்கு அமைய தமிழ் மக்கள் ஒரு தேசிய இனம் என்பதை வலியுறுத்த வேண்டுமென்று ஜெனீவாவில் முக்கிய பன்னாட்டு மாற்றினப் பிரமுகர்கள், சட்ட வல்லுனர்கள், தமிழ் பிரமுகர்களின் கருத்துக்களுடன் சர்வஜன வாக்கெடுப்பை மையமாக வைத்து மாபெரும் தமிழர் மாநாடொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 
 
2013 மார்ச் 1ம் 2ம் 3ம் நாட்களில் ஜெனீவாவில் நடைபெறும் மாநாடானது தமிழர்களின் சுயநிர்ணய உரிமைக்கான சர்வஜன வாக்கெடுப்பிற்குக் குரல் கொடுக்கும் முக்கிய பன்னாட்டுப் பிரமுகர்களை ஒருங்கிணைப்பதோடு ஐ.நா பொதுச்சபையில் ஈழத்தமிழர்களின் சுயநிர்ணய உரிமைக்கான சர்வஜன வாக்கெடுப்பைக் கொண்டுவருவதற்கான நோக்கத்தைக் கொண்டதாகவும் அமையும்  வகையில்   உலகத்  தமிழ் மக்கள் தமது ஆதரவை நல்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்  .
 
ஈழத்தமிழர்கள் ஒரு தேசிய இனம், முழுமையான சுயநிர்ணய உரிமையும் தனது  பாரம்பரிய தாயகத்தில் இறையாண்மையும் கொண்ட தேசம் ஆகும் .
 
இத் தேசம் சிங்கள தேசத்தால் 60 ஆண்டுகளுக்கும் மேலாக இனவழிப்புக்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றது எனவும் ஈழத்தமிழர்களின் வரலாற்றுவழிவந்த இறையாண்மை ,60 வருடங்கள் போராடிப்பெற்ற இறையாண்மை ,ஈழத்தமிழர் தேசம் இனவழிப்பில் இருந்து அதை பாதுகாக்கப்பதற்கு உலகத்தால் வழங்கப்பட வேண்டிய இறையாண்மை என்று மூன்று இறையாண்மைகளின் அடிப்படையிலான ஈழத்தமிழர்களின் அரசியல் விளங்கிக் கொள்ளப்பட வேண்டும் என்பதை இம் மாநாட்டில் தீர்மானமாக ஏற்றுக்கொள்ளப்பட்டதோடு    தமிழர் விடுதலைக்காக எல்லோரும் உழைப்போம் என்ற உறுதி மொழியுடன் மகாநாடு முடிவு அடைந்தது.
 
இந்த மகாநாட்டை சிறப்பாக நடத்திய அனைவர்களுக்கும், பேராசிரியர் ராமசாமி, கலாநிதி  கிருஷ்ணசாமி, சாமுவேல்ராஜ் மற்றும் மலேசியா தமிழ் உணர்வாளர்களுக்கும் அனைத்துலக ஈழத்தமிழர் மக்கள் அவையின் சார்பில் எமது நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.
 
நன்றி
அனைத்துலக ஈழத்தமிழர் மக்கள் அவை (ICET)

0 Responses to தமிழராய் எழுவோம்! தமிழர் நாடு வெல்வோம் - மலேசியாவில் நடைபெற்ற 2வது உலகத் தமிழர் பாதுகாப்பு மாநாடு (படங்கள் இணைப்பு)

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com