மூன்று வருடமாக ஒழுங்கு அமைக்கப்பட்ட வழித்தடங்களில் பிரெஞ்சு மக்களிடமும் பிரெஞ்சு அரசிடமும் தமிழீழ மக்கள் மீதான இனப்படுகொலைக்கு நியாயம் கேட்டபடி சென்றது.
செம்மணிப் புதைகுழியும் இராணுவ அட்டகாசங்களும் மகிந்தவினதும் இனவாத பௌத்த பிக்குகளின் கோர முகங்களை வெளிப்படுத்தியபடியும் கலைஞர்களின் நடிப்புடன் ஊர்திகள் முன் செல்ல மக்கள் பேரணியாகத் தொடர்ந்து சென்றனர்.
முள்ளிவாய்க்கால் முடிவல்ல! முள்ளிவாய்க்கால் படுகொலைகள் தமிழர் போராட்டத்தை உலகமயப்படுத்தி புலம்பெயர் மக்களின் கையில் கொண்டு வந்து விட்டிருக்கிறது, போராட்டத்தை தம் கையில் எடுத்து முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையை, உலகத்திற்கு நினைவுபடுத்துவது போல் இன்று பிரான்ஸ், பாரிஸ் நகரில் பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்ட மக்களை நினைவுகளில் ஏந்தியபடி, சிறிலங்கா அரசின் இனவெறி முகத்தை ஊர்திகளில் தெருக்காட்சிகளாக இவ்வுலக மக்களுக்கு காட்டியவண்ணம் பாரிஸில் மனிதவுரிமை சதுக்கத்தை நோக்கி அமைதி ஊர்வலமாக சென்றனர்.
இந்த ஊர்வலத்தில் பல அரசியல் கட்சி பிரதிநிதிகள் கட்சி பேதமின்றி, தமிழீழ மக்களுடன் அணிவகுத்து வந்தது குறிப்பிடத்தக்கது.
இன்று காலை 10 மணிக்கு செவ்ரோன் நகரில் செவ்ரோன் நகர பிதா முன்னிலையில் அந்நகரில் அமைந்துள்ள உள்ள முள்ளிவாய்க்கால் நினைவு நடுகல் முன் மலர்வணக்கத்துடன் முள்ளிவாய்க்கால் போர்குற்ற நாள் நிகழ்வு ஆரம்பமானது.
அதனைத்தொடர்ந்து பாரிஸ் உலக அமைதிக்கான சுவர் அமைந்திருக்கும் இடத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் ஒன்றிணைந்து, தமிழர் விடுதலை போராட்டம் அந்த தடை வந்தாலும், தமிழர்களிடையே பிரிவினைவாதத்தை உருவாக்க யார் முனைந்தாலும், அத்தனை தடைகளையும் உடைத்து தமிழீழ மக்களின் விடுதலையே ஒரே குறிக்கோளாக எடுத்து கொண்டு ஒன்று கூடிய தமிழீழ மக்கள், தமது உணர்வுகளை வெளிப்படுத்திய வண்ணம் இந்த பேரணியில் கலந்து கொண்டனர்.
தனது வழித்தடத்தில் சென்ற பேரணி Trocadero மனித உரிமைகள் சதுக்கத்தை வந்தடைந்தது. அங்கு பொது ஈகைச் சுடரைத் தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் திரு. பாலசுந்தரம் அவர்கள் ஏற்றினார்.
அதனைத் தொடர்ந்து மாவீரர் ஒருவரின் சகோதரர் இனப்படுகொலை உருவகத்தின் சுடர்களை ஏற்றினார். அகவணக்கம் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து குசான்வில் தமிழ்ச்சோலை மாணவிகள் வணக்க எழுச்சி நடனத்தை வழங்கினார்கள். அதனைத் தொடர்ந்து பல அரசியற் கட்சிகளின் பிரதிநிதிகள் உரையாற்றினார்கள்.
இன்று தமிழீழ மண்ணில் நடைபெற்றது ஒரு இனப்படுகொலை என்றும் அந்த உண்மையை இனிமேலும் யாரும் மூடி மறைக்கக் கூடாது, முடியாது என்று இன்றைய நினைவு நாளில் பங்குபற்றிய சர்வ கட்சிகளிலும் இருந்து வந்திருந்த அரசியல் கட்சிகளின் பிரமுகர்கள், மனிதநேய அமைப்புகளின் பிரமுகர்கள் வலியுறுத்தி கூறியிருந்தனர்.
இதில் பிரான்சின் முன்னைய மந்திரியும் இன்றைய பாராளுமன்ற உறுப்பினர் திருமதி மரி ஜார்ஜ் புப்பே தெரிவிக்கையில், தமிழ் மக்களுடன் நான் என்றும் துணையாக இருப்பேன், தமிழருக்கு நீதியான தீர்வை ஏற்படுத்த தாம் சகல நடவடிக்கைகளையும் எடுப்பேன் என்று உறுதி அளித்தார், அதே போல் செவ்ரோன் நகர பிதாவும், ஏனைய அரசியல் பிரதிநிதிகளும் வலியுறுத்தினர்.
தமிழீழத்தில் 64 வருடங்களாக நடைபெற்றது இனப்படுகொலை என்பதை இன்று சர்வதேச மட்டத்தில் பல நாடுகளில் வலியுறுத்தப்படுவது, இன்றைய உலக மாற்றத்தை காட்டுகிறது. இந்த உலக மாற்றத்துக்கு ஏற்றதாக நாமும் போராட்டத்தை வலுப்படுத்த வேண்டிய கால கட்டத்தில் நாம் நிற்கிறோம்.
அதே நேரத்தில் நாம் மிகவும் விழிப்பாக இருக்க வேண்டிய காலம் இது, எம்மிடையே சில அமைப்புகள் தமிழீழ கொள்கையை மறந்து சில ஏகாபத்திய நாடுகளின் நிர்பந்தத்தில் முள்ளிவாய்க்கால் படுகொலையை கொச்சைப்படுத்தும் முகமாக தம்மிடையே சில உடன்படிக்கை ஏற்படுத்தி சிறிலங்கா அரசை காப்பாற்றும் செயல்திட்டங்களிலும், மாகாண சபையோடு தமிழர் உரிமை போராட்டத்தை நிறுத்திவிடும் செயல் திட்டங்களில் இறங்கி இருக்கிறார்கள்.
இந்த விடயத்தில் நாம் அனைவரும் விழிப்பாக இருந்து முள்ளிவாய்க்காலில் படுகொலை செய்யப்பட, அதற்கும் மேலாக கடந்து 64 வருடங்களாக படுகொலை செய்யப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்கும் வரை போராட வேண்டியது எமது கடமை.
ஆகவே தமிழர்களாகிய நாம் எமது மக்களின் நீண்ட கால வாழ்வை மனதில் வைத்து எவ்வித தடைகள் வந்தாலும் பிரிவினையை யார் வளர்க்க முற்பட்டாலும் அதற்கு தடையாக இருந்து, தமிழீழ கொள்கையை எமது வாழ்வாக்கி, அன்று இஸ்ரேலிய மக்கள்' ஜெருசலத்தில் சந்திப்போம் என்று உறுதியோடு வாழ்ந்து காட்டியதை போல் நாமும் 'நாள் நாம் தமிழீழ மண்ணில் சந்திப்போம் என்ற உறுதியுடன் போராடுவதுதான் தமிழீழ மண்ணில் தமிழீழ மண் பாதுகாப்பிற்காக தம் இன்னுயிரை நீத்த மக்களுக்கும் நாம் செய்யும் நன்றிக்கடன்.
'தமிழரின் தாகம் தமிழீழ தாயகம்'
தமிழ் மக்கள் பேரவை பிரான்ஸ்
பரிசில் மக்கள் எழுச்சியுடனும் உணர்வுபூர்வமாகவும் நடைபெற்ற மே 18 பேரணி!
பதிந்தவர்:
தம்பியன்
19 May 2012
0 Responses to பரிசில் மக்கள் எழுச்சியுடனும் உணர்வுபூர்வமாகவும் நடைபெற்ற மே 18 பேரணி!