Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

விடுதலை வேண்டி தொடர்ச்சியாக போராடும் எம் தாயக மக்களினதும் ஏற்றத்தாழ்வுகளுக்கு உட்படுத்தபட்டு, நீதி மறுக்கப்பட்டு உலகெங்கும் வாழும் பல கோடி ஒடுக்கப்பட்ட மக்களினதும் நீதிக்கான போராட்டம் இப்புத்தாண்டில் வலுப்பெற வேண்டும் என பிரித்தானி​ய தமிழர் பேரவையின் புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளது.
 
மேலும் பிரித்தானியர் தமிழர் பேரவையின் வாழ்த்துச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

தமிழ் மக்களின் உரிமைப் போராட்டம் ஜனநாயக வழியில் வலுப்பெற்ற போது பிரிவினைவாதமாக பரப்புரை செய்து ஆயுதமுனையால் ஒடுக்கிய சிங்கள தேசம் தாங்கொணாத ஒடுக்குமுறையினால் ஆயுதப்போராட்டமாக அதன் இயல்பான தொடர்ச்சியை எட்டியபோது பயங்கரவாதப் போரட்டமாக சித்தரித்து உலக நாடுகளுடன் கூட்டணி அமைத்து மிருகபலத்தை பிரயோகித்து அதனையும் சிதைத்தது.

ஒடுக்குமுறை தொடரும்வரை ஒடுக்க பட்டோரின் போராட்டமும் தொடரும் என்ற மனித வரலாற்றை சிங்கள தேசம் பார்க்க மறுக்கின்றது. அது முன்வைக்கும் போலியான தீர்வுத் திட்டங்கள் உண்மையான சமாதானத்தையும் வளர்ச்சியையும் ஒரு போதும் இலங்கைத் தீவில் ஏற்படுத்தப் போவதில்லை.

அந்தப் பொறிக்குள் மாட்டுபடுபவர்கள் தமிழ் மக்களின் நம்பிக்கையை பெறப்போவதும் இல்லை. விடுதலையை வென்றெடுக்கப் போவதும் இல்லை.

நேர்மை துணிவு சரியான மூலோபாயம் செயல்திறன் உள்ளவர்களின் இடைவிடாத தொடர்ச்சியான போராட்டங்கள் தான் முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் பின் உலக அரங்கினில் தமிழின அழிப்பு என்ற விடயத்தை அம்பலப்படுத்தி வருகின்றது. தமிழ் மக்களின் நீதியான போராட்டத்திற்கு நட்புச் சக்திகளை வென்றெடுத்து வருகின்றது.

சோர்வடைந்து போயிருந்த பலரின் உள்ளங்களில் நம்பிகை ஒளியைத் தூண்டி விட்டுள்ளது. 30 லட்சம் ஈழத் தமிழர்களின்  நீதிக்கான பயணம் இன்று தமிழ்நாடு உள்ளிட்ட  உலகதமிழ் மக்களை ஒருங்கிணைத்து ஏழரைக் கோடி தமிழ் மக்களின் பலமான அணியாக விரிவு பெற்றுள்ளது.

கடமையே கண்ணாக செயல்படுதலையே வழிபாடாக ஏற்றுள்ள நல்லிதயங்கள் இன்று ஒன்றுபட்டு செயல்படத் தொடங்கியுள்ளார்கள். வரும் புத்தாண்டில் செயல்படுவோரின் இந்த அணி மேலும் வலுப்பெருமென்ற நம்பிக்கையுடன் முன்னேருவோம்.

செயல்பட முடியாதவர்கள் அடுத்தவரைக் குறை கூறிக் காலம் தள்ளாது தாமாக செயல்படத் தொடங்குவார்களென எதிர்பார்ப்போம். பசுமை நிறைந்த எங்கள் காடுகள் கருக்கபட்டுள்ளன.

ஆயினும் அங்கே வேர்கள் இன்னும் உயிர்ப்புடன் உள்ளன. விடுதலை தாகத்தை கொளுந்து விட்டெறியச்  செய்யும் வேலையை எதிரியே தூண்டி விடுகின்றான். 2009 மே பேரவலத்தின் பின் அடங்கி ஒடுங்கிப் போய் தமக்குள்ளேயே வெதும்பிக் கிடந்த தாயகத் தமிழ் மக்கள் இன்று மீளப் பெற்ற நம்பிக்கையுடன் சாத்வீகமான வெகுஜனப் போராட்டத்தில் ஈடுபடத் தொடங்குகின்றார்கள்.

எம் மக்களின் விடுதலை தாகத்தை அன்று பிரிவினைவாதமென்றும்  பயங்கரவாதமென்றும் புறம்தள்ளிய சர்வதேச சமூகம் தாயக மக்களின் சாத்வீகமான வெகுஜனப் போராட்ட எதிர்ப்பு வடிவத்தை புறம் தள்ள முடியாது.

இராணுவத்தையும் ஒட்டுக் குழுக்களையும் வைத்து அச்சுறுத்தி மிருகபலத்தை போராடும் எம் மக்கள் மீது ஏவி விட்டு வெகுஜன எதிர்ப்பு போராட்டத்தை நசுக்கி விட இலங்கை அரசு திட்டம் தீட்டுகின்றது.

புலம் பெயர் மக்களும் தமிழக உறவுகளும் உலகெங்கிலும் செயல்பட்டு இதனை அம்பலப்படுத்த வேண்டும். உலகெங்கிலும் உள்ள தொழிலாளர் சங்கங்கள் மாணவர் அமைப்புக்கள் சிவில் சமூக அமைப்புக்கள் சமயம் சார் அமைப்புக்கள் போன்ற பரந்துபட்ட மக்கள் அமைப்புக்களை தாயகத் தமிழ் மக்களின்  அமைப்புக்களுடன் உறவுப் பாலத்தை ஏற்படுத்தி ஒடுக்குமுறை வடிவங்களை உடனுக்குடன் உலகின் மூளை முடுக்கெல்லாம் எடுத்துச் செல்ல முயல வேண்டும்.

இதன் மூலம் போராடும் எம் உறவுகளுக்கு சர்வதேச பாதுகாப்புக் கவசத்தை உருவாக்க வேண்டும். வல்லாதிக்க சக்திகளின் செல்வாக்கு மிக்க சில நிறுவனங்கள் தாயக மக்கள் போராட்டத்தைக் கைவிட்டுள்ளார்கள், புலம்பெயர் மக்களே அங்குள்ள யதார்த்தம் புரியாது போராட்டத்தைத் தூண்டி விடுவதாக எம் மீது குற்றம் காண விளைகின்றார்கள்.
தாயக மக்களின் இதயத்தின் துடிப்பை நாம் அறிவது போல அந்நியர்களால் விளங்கிக் கொள்ள முடியாது. தாயகத்தில் எழுச்சி பெற்று வரும் எம் மக்களின் போராட்டம் இவர்களுக்கு பதில் தருகின்றது.

நீதியின் ஆட்சி பற்றிப் பேசும் உலக சமூகத்திற்கு போராடும் மக்களைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு உள்ளது என்பதினை நாம் ஒவ்வொருவரும் இப்புத்தாண்டில் வலியுறுத்துவோம்.
விடுதலையை நேசிக்கும் உங்கள் ஒவ்வொருவரின் கையிலும் அதற்கான திறவுகோல் உள்ளது.மக்கள் போராட்ட வடிவத்தையே பிரித்தானிய தமிழர் பேரவை இறுதி வெற்றியைத் தரும் காத்திரமான செயல் வடிவமாக வரித்துக் கொண்டுள்ளது.

தங்கள் பலத்தையும் அடுத்தவர்களின் பலத்தையும் புரிந்து கொண்டு செயல்படாத சமூகம் விடுதலையை பெற்றுக் கொள்ளும் தகுதியைப் பெறாது. விமர்சனம் செய்வது மட்டுமே விடுதலையை வலுப்படுத்தாது.

சர்வதேசம் பற்றிய சரியான புரிதலும் சரியான உத்திகளும் பயனைக் கொண்டு வரும் செயல்பாடும் இன்று மிக அவசியமானது. மக்கள் ஒவ்வொருவரும் தங்களால் முடிந்த தேவையான செயல்பாடுகளை செய்ய வேண்டும். மக்கள் பலத்தை ஒன்று திரட்டுவதில் பிரித்தானிய தமிழர் பேரவை முன்னின்று செயல்படும்.

புத்தாண்டில் அனைவரும் ஒன்று திரள்வோம்! உறுதியாக செயல்படுவோம்!

0 Responses to தமிழ் மக்களுக்கு பிரித்தானி​ய தமிழர் பேரவையின் புத்தாண்டு வாழ்த்துக்​கள்.

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com