![](http://www.tamilwin.com/photos/thumbs/forgien_country/uk/british_tamil_forum_001.jpg)
சமீபத்தில் நடைபெற்ற பல்கலைக்கழக மாணவர்கள் மீதான தாக்குதல், உதயன் பத்திரிக்கை விநியோகஸ்தர் மீது நடாத்தப்பட்ட தாக்குதல், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தை பயங்கரவாத தடைப்பிரிவு விசாரணைக்கு உட்படக் கோரியமை மற்றும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினரான ஸ்ரீதரனின் அலுவலகம் மீது திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் ஆகியன இலங்கையில் இறுதியாக எஞ்சி இருக்கும் தமிழ் உணர்வாளர்களை அழிப்பதற்கு நடாத்தப்படும் திட்டவட்டமான முயற்சி என்று கருதலாம்.
உதயன் பத்திரிக்கை இதற்கு முன்பும் பலமுறை தாக்கப்பட்டுள்ளது, அத்தோடு ஊடகர்களும் தாக்கப்பட்டும், கொல்லப்பட்டும் காணாமல் போயும் உள்ளனர், பல்கலைக்கழக மாணவர்கள் பொய்க் குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு சட்ட விசாரணை இன்றி சீர்திருத்தம் என்ற போர்வையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினரான ஸ்ரீதரனின் அலுவலகத்திற்கு வழங்கப்பட்ட பொலிஸ் பாதுகாப்பு 2012ம்ட ஆண்டு டிசம்பர் மாதம் ஜனாதிபதி ராஜபக்சவின் சகோதரரான பாதுகாப்பு அமைச்சர் கோத்தபாய ராஜபக்சவின் நேரடி கட்டளைப்படி வாபஸ் பெறப்பட்டது. அதன் பின்பே திட்டமிட்டு இவ்வலுவலகம் தாக்கப்பட்டுள்ளது.
பல்வேறு சர்வதேச அமைப்புக்களும், பிரித்தானிய வெளிவிவகார பொதுநலவாய அமைப்பின் அலுவலகம் உட்பட பல அமைப்புக்களின் கோரிக்கைகளிற்கு பின்பும் ஸ்ரீதரனின் அலுவலகத்திற்கு கொடுக்க வேண்டிய பாதுகாப்பு கொடுக்கப்படவில்லை.
2011ம் ஆண்டு மார்ச் 7ம் திகதி தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினரான ஸ்ரீதரன் மீது நடாத்தப்பட்ட கொலை முயற்சியில் மயிரிழையில் அவர் உயிர் தப்பினார்.
எனினும் இதுவரையில் எவரும் கைது செய்யப்படவும் இல்லை. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவும் இல்லை. தமிழ் மக்கள் மீது நடாத்தப்படும் கொடுமைகளை வெளிக்கொண்டுவரும் பல அரசியல் பிரமுகர்கள் இதற்கு முன்பும் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
சமீபத்தில் நடைபெற்ற இலங்கை பிரதம நீதி அரசரின் பதவி நீக்கம் இலங்கை அரசு போகும் சர்வாதிகார பாதையையும் அதனால் வரும் ஆபத்துக்களையும் எடுத்துக்காட்டுகிறது.
இலங்கையில் சட்டவாக்க அதிகாரம், நிறைவேற்று அதிகாரம், நீதித்துறை அதிகாரம் சுயாதினமாக செயல்படுவதில்லை என்பதை சர்வதேச சமூகம் புரிந்து கொள்ளவேண்டும். இந்த மூன்று துறைகளும் நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதியின் நேரடிக்கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. இலங்கையின் கட்டமைப்புக்குள் சுயாதீனமான நீதி விசாரணை சாத்தியமற்றது என்பதை அண்மைய சம்பவங்கள் மீண்டும் உறுதிப்படுத்துகிறது.
யூத மக்களுக்கு எதிரான கொடுமைகளை இழைத்த ஹிட்லரையே நீதி விசாரணை நடத்துமாறு கோருவதற்கு இது ஒப்பானது. இதனால்தான் சர்வதேச சமூகம் இதில் தலையிட்டு இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிராக நடாத்தப்படும் போர்க்குற்றம், மனித குலத்திற்கு எதிரான குற்றம் மற்றும் இன அழிப்பு போன்றவற்றை விசாரிக்க சர்வதேச சுயாதீன விசாரணை பொறிமுறை ஒன்றை உருவாக்க வேண்டுமென கோருகின்றோம்.
அத்துடன் அகிம்சை வழியில் உரிமைக்காக குரல் கொடுக்கும் மக்களையும் மக்கள் பிரதிநிதிகளையும் பாதுகாக்குமாறு சர்வதேச சமூகத்தை கோருகின்றோம்.
பிரித்தானிய அரசு இலங்கை அரசின் மீது உடனடியாக காத்திரமான இராஜ தந்திர அழுத்தங்களை பிரயோகிக்க வேண்டுமென பிரித்தானிய தமிழர் பேரவை கேட்டுக்கொள்கின்றது.
அத்துடன் சர்வதேச சமூகத்தையும் மற்றும் தமிழ் அரசியல் அமைப்புக்களையும், இலங்கை அரசுடனான பயனற்ற அரசியல் முயற்சிகளில் மேலும் நேரத்தை வீணாக்காது தமிழ் மக்களின் வாழ்க்கை அடிப்படை உரிமைகளை நிலை நாட்ட முன்வர வேண்டும் என்று நாம் அழைக்கின்றோம்.
இந்த முயற்சியை மேற்கொள்ளும் பொழுது நாம் இலங்கை அரசின் திசை திருப்பும் வலைகளில் வீழ்ந்து விடாத படி எம்மை பாதுகாக்க வேண்டும். மீண்டும் ஒருமுறை சர்வதேச அமைப்புக்களையும் ஐக்கிய நாட்டு சபையையும் உடனடியாக இலங்கையில் நடைபெறும் தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளும் மாநுடத்திற்கெதிரான குற்றங்களையும் இன அழிப்பையும் விசாரணை செய்வதற்கு ஐ. நா. பாதுகாப்பு சபையில்ஒரு தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டுமெனக் கோருகின்றோம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
0 Responses to பிரித்தானிய அரசாங்கம் இலங்கை அரசின் மீது இராஜதந்திர அழுத்தங்களைப் பிரயோகிக்க வேண்டும்: பிரித்தானிய தமிழர் பேரவை