மலேசியாவில் இந்த வாரம் இணையத்தில் மிக பிரபலமாகியுள்ள சர்ச்சை வீடியோ ஒன்றை பற்றியது இந்த பதிவு.
மலேசியாவில் இலவச கல்விமுறை அமலாக்கத்தின் அவசியம் குறித்து, தலைநகரில் நடந்த ஃபோரம் கருத்தரங்கு ஒன்றில் ஒரு பல்கலைக்கழக மாணவி கேள்வி எழுப்பினார். எனினும் அந்நிகழ்ச்சியை வழி நடத்தி சென்ற அறிவிப்பாளர் அம்மாணவியின் பேச்சை பாதியிலேயே இடைநிறுத்திவிட்டு, பதிலுக்கு கூறிய கருத்துக்களே சர்ச்சையை எழுப்பியுள்ளன.
Suara Wanita 1Malaysia (SW1M) எனும் முன்னணி அரசியல் அமைப்பு ஒன்றின் தலைவரான சரிஃபா ஷோரா ஜபீன் எனும் பெண்மணியே அந்த நிகழ்ச்சியை வழிநடத்தியிருந்தார். அவர் கூறிய இந்த கருத்துக்களே சர்ச்சையை கிளப்பியுள்ளன. கே.எஸ்.பவானி எனும் பல்கலைக்கழக மாணவி குறித்த ஃபோரம் அமைப்பில் ஏனைய 200 மாணவர்களுடன் கலந்து கொண்டார். மாணவர்களின் கேள்வி நேரத்தின் போது, கே.எஸ்.பவானி மலேசிய கல்வி முறையை விமர்சித்து சற்று கடுமையான தொணியில் பேசத்தொடங்கினார். அப்போது அவரை முழுமையாக பேச அனுமதிக்காது குறுக்கிட்ட சரிஃபா ஷோரா ஜபீன் , 'Listen Listen' என 11 தடவை தொடர்ந்து கூறி இடைமறிமறித்தார். 'நான் இன்னமும் பேசி முடிக்கவில்லை. எனக்கு பேச அனுமதியுங்கள்' என கே.எஸ்.பவானி மீண்டும் கூற, சட்டென அவர் முன்னாள் இருந்த ஒலிவாங்கியை தூர அகற்றிவிட்டு, சரிஃபா பதிலுக்கு உரையாற்ற தொடங்கியுள்ளார்.
'இது எமது நிகழ்ச்சி. நாங்கள் உங்களை பேசுவதற்கு அனுமதித்திருக்கிறோம். அதே போன்று நாங்கள் பேசும் போது நீங்கள் கேட்க வேண்டும்' என அவர் கூறிவிட்டு தொடர்ந்து உரையாற்ற தொடங்கியுள்ளார். அப்போது அவர் கூறிய கருத்துக்களே சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளதுடன், மலேசிய மாணவர் சமுதாயத்தினரிடம் வெறுப்பை சம்பாதித்துள்ளது. இதையடுத்து குறித்த பல்கலைக்கழக மாணவி அந்த இடத்தை விட்டு வெளியேறிவிட்டார்.
இச்சம்பவம் நடந்து ஒரு மாதமான நிலையில் சமூக வலைத்தளங்கள், யூடியூப், டுவிட்டர் வழியாக தற்போது இவ்வீடியோயும், இதனையொட்டிய Prank வீடியோக்களும் பிரபலமாகியுள்ளன.
அம்மாணவி பேசி முடிக்க முன்னரே, குறுக்கிட்டு மைக்கை பிடுங்கிவிட்டு, ஷரிஃபா பேசத்தொடங்கியது முதல் பிழை என தொடங்கி அவரது ஒவ்வொரு சர்ச்சைக்குரிய கருத்துக்களையும், அநாகரிகமான வார்த்தை பிரயோகங்களையும் சுட்டிக்காட்டி சமூக வலைத்தளங்களில் வரிசையாக பட்டியலிட்டுள்ளனர். (உங்களால், மலாய், ஆங்கில மொழிகளை புரிந்துகொள்ள முடியுமெனில், இங்கு விவாதிக்கப்படும் கருத்துக்களை தெளிவாக புரிந்துகொள்ள முடியும்.)
ஷரிஃபா தனது பேச்சுக்காக கே.எஸ்.பவானியிடம் பகிரங்கமாக மன்னிப்பு கோரவேண்டுமென கோரி, பவானிக்கு ஆதரவாகவும் தொடங்கப்பட்ட ஒரு சில பேஸ்புக் வலைப்பக்கங்கள் பல்லாயிரக்கணக்கான லைக்ஸ், காமெண்டுகளுடன் பிரபலமாகியுள்ளன.
![](https://lh3.googleusercontent.com/-EmdQPM4uuZE/UPiFG56Y9SI/AAAAAAAA0bk/wzhcgdn-nlM/s476/537176_412343632178614_2007678044_n.jpg)
ஷரிஃபாவின் பேச்சை எதிர்த்தும், மலேசியாவில் இப்படித்தான் மாணவர்கள் அரசினால் மூளைச்சலவை செய்யப்படுவதாக கூறியும், மலேசிய இளம் மாணவர் சமுதாயத்தினர், கண்டன அறிக்கைகள், பிளாஷ் மாப் நடன நிகழ்வுகள், கூட்டங்கள், கருத்தரங்குகள், போஸ்டர்கள், விளம்பர வீடியோக்கள் என அனைத்திலும் இப்பிரச்சினையை பிரபலமாக்கிவிட்டுள்ளனர். தற்போது பி.எஸ். பவானிக்காக மலேசிய எதிர்க்கட்சிகளும் ஆதரவுக்கரம் நீட்டியுள்ளன.
![](https://lh5.googleusercontent.com/-4nrdyy1ye64/UPiFHZ96miI/AAAAAAAA0bs/tX_VmYDfGM8/s476/Bawani.jpg)
இதேவேளை அன்றைய நிகழ்வில் பவானி பேசத்தொடங்கிய விதமும் பண்பானதல்ல. அவர் தான் முதலில் சரிஃபாவுக்கு கோபத்தை தூண்டினார் எனவும், பவானி எதிர்க்கட்சிகளின் பின்னணியில் செயற்படும் பிரச்சார நபர் எனவும் கூறும் ஆளும் அரசுக்கு ஆதரவானவர்களின் கருத்துக்களும் சமூக வலைத்தளங்களில் காணக்கூடியதாக உள்ளது.
மூளைச்சலவை : பவானி பாய்ச்சல்
ஷரிஃபாவை தலைவராக கொண்ட குறித்த சுவாரா வனித்தா சத்து மலேசியா எனும் சமூக அமைப்பு, மலேசிய பிரதமர் நாஜிப் துன் ரசாக்கின் அரசின் கீழ் இயங்கிவரும் பிரதான கொள்கை அமைப்பாகும் என தெரிவிக்கப்படுகிறது. இந்த அமைப்பு பல்கலைக்கழக மாணவர்களுக்கு கருத்தரங்கை மேற்கொள்வதாகக் கூறி, அங்கு மாணவர்களிடத்தில் எதிர்க் கட்சியினர் மீது வெறுப்புணர்ச்சி யைத் தூண்டி அவர்களுக்கு மூளைச் சலவை நடைபெற்று வருவதாக குறித்த சட்டக் கல்வி மாணவி கே.எஸ்.பவானி கூறியுள்ளார்.
கருத்தரங்கில் பதிவு செய்யப்பட்டிருக்கும் உரைகளையும், காணொளிகளையும் மீண்டும் பார்த்தால், மாணவர்களிடையே மேற்கொள்ளப்பட்ட மூளைச் சலவை முயற்சியைத் தெளிவாகக் காண முடியுமென அவர் தனியார் வீடியோ தளத்திற்கு வழங்கிய பேட்டியில் கருத்துரைத்தார். "நீங்கள் இலவசக் கல்வியைப் பெற விரும்பினால், கியூபாவோ அல்லது அர்ஜெண்டினாவோ செல்லுங்கள்" என பவானியை நோக்கி ஷரிபா கூறியிருப்பது சர்ச்சைக்குரிய கருத்துகளில் அடங்கும்.
மேலும் இக்கருத்தரங்கில் பேசிய சிலர்,. பொதுத் தேர்தல்களில் நியாயமான, நேர்மையான ஒழுங்கு முறைகளைக் கடைபிடிக்கப்பட வேண்டும் என்று போராடி வரும் பெர்சே அமைப்பின் தலைவர் டத்தோ அம்பிகா சீனிவாசனையும், லெம்பா பந்தாய் நாடாளுமன்ற உறுப்பினர் நூருல் இசா அன்வாரையும் குறை கூறி பேசினார்கள் என பவானி தெரிவித்துள்ளார்.
அதோடு, எதிர்க்கட்சி ஆதரவில் நடைபெற்ற பேரணியில் பங்கேற்ற பெண்களையும் அவர்கள் தரக்குறைவாகப் பேசியிருக்கின்றனர் என்றார் அவர். இதற்கிடையே, தேசிய முன்னணிக்கு ஆதரவு திரட்டுவதற்கோ அல்லது மூளைச் சலவை செய்வதற்கோ இந்தக் கருத்தரங்கு நடத்தப்படவில்லையென சுவாரா வனித்தா சத்து மலேசியாவின் அதிகாரியான ஹேமா லீ அபு சாமா தெரிவித்துள்ளார்.
இந்த அமைப்பு ஏற்கெனவே, சுல்தான் இட்ரிஸ் ஆசிரியர் பல்கலைக் கழகத்திலும், மலேசிய தேசிய பல்கலைக கழகத்திலும் இதுபோன்ற கலந்துரையாடல்களை நடத்தியிருக்கிறது. நாங்கள் உண்மையிலேயே, தேசிய முன்னணியைச் சேர்ந்தவர்கள் என்றால் இதுபோன்ற கருத்தரங்குகளை பிரபல தங்கும் விடுதியில் நடத்தி இருப்போம். மாறாக, பல்கலைக்கழகங்களில் நடத்தி இருக்க மாட்டோம் என்றார் அவர்.
அதோடு, அரசியல் விவகாரங்கள் குறித்து பேசுவதற்கு வட மலேசியா பல்கலைக் கழகம் அனுமதி கொடுத்திருக்காது என்று அவர் கூறினார். பவானி விவகாரம் பற்றி செய்தி வெளியிடும் ஊடகங்கள் சம்பந்தப்பட்ட அக்கலந்துரையாடலின் தலைப்பினை தவறாக வெளியிட்டுள்ளனர்.
'பெண்ணும் அரசியலும்' என்பதுதான் அக்கலந்துரையாடலின் தலைப்பு என்று ஹேமா லீ அபு சாமா தெளிவுபடுத்தினார். இரண்டு மூன்று நாட்களாக பத்திரிகயின் முதல் பக்கச் செய்தியாய் அமளிபடுகிறது பவானியின் செய்தி. எதிர்க்கட்சி மட்டுமல்ல, ஆளுங்கட்சியே ஷரிபாவின் பேச்சுக்கு அதிர்ப்தி தெரிவித்துள்ளது.
(இவ்வீடியோவின் தாக்கம் கருதி, யூடியூப்பிலிருந்து நீக்கப்பட வாய்ப்புள்ளது. அவ்வாறான சந்தர்ப்பங்களில் மாற்று இணைப்புக்களில் பார்க்க)
கே.எஸ்.பவானி - ஷரிஃபா இடையில் நடந்த விவாதம் இது தான்!
0 Responses to இணையத்தை கலக்கும் புதிய வீடியோ இது!