Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தமிழகத்தில் உள்ள சித்திரவதை முகாம்களான செங்கல்பட்டு, பூவிருந்தவல்லி சிறப்பு முகாம்களை உடனடியாக மூடி, அங்கே இருக்கும் ஈழத் தமிழர்கள் சுதந்திரமாக தங்கள் குடும்பத்தினருடன் வாழ திறந்தவெளி முகாம்களுக்கு அனுப்பி வைத்திட மாநில அரசு ஆவன செய்திட வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
செங்கல்பட்டு சிறப்பு முகாமில் தமிழக 'கியூ' பிரிவு காவல்துறையால் பொய் வழக்குகளால் கைது செய்யப்பட்டு ஆண்டுகள் பல ஆகியும், எந்த குற்றமும் செய்யாமல் ஈழத்தமிழ் அகதிகள் தண்டனையை அனுபவித்து வருகிறார்கள்.

எனவே தங்களை திறந்தவெளி முகாம்களுக்கு அனுப்பிட கோரி பலகட்ட அறவழிப் போராட்டங்களை நடத்தி வந்தனர்.

இந்நிலையில் செங்கல்பட்டு சிறப்பு முகாமில் அடைத்து வைக்கப்பட்டு இருக்கும் ஈழத் தமிழர்கள் 33 பேர்களில், 25 பேர் கடந்த டிசம்பர் 23ம் தேதிய முதல் தங்கள் மீது போடப்பட்டிருக்கின்ற வழக்குகளை திரும்ப பெற்று தங்கள் குடும்பத்தினருடன் வாழ, திறந்தவெளி முகாம்களுக்கு அனுப்பிட வலியுறுத்தி உண்ணாநிலை அறப்போராட்டத்தை நடத்தி வந்தனர்.

அவர்களை கடந்த 8ம் திகதியன்று செங்கல்பட்டு அரசு பொது மருத்துவமனையில் நான் நேரடியாக சென்று அவர்களை சந்தித்து ஆறுதல் கூறிவிட்டு, மாநில அரசு இவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்ற வேண்டுகோளை வைத்தேன். ஆனால் இதுநாள் வரையில் அவர்கள் விடுவிக்கப்படாமல் இருக்கின்றனர்.

சிகிச்சை பெற்று வந்த சில ஈழத் தமிழர்களுக்கு மஞ்சள் காமாலை நோய், வலிப்பு நோய், இருதய நோய் பாதிப்புக்கு உள்ளாகி உயிருக்கு போராடிக் கொண்டிருந்த வேலையில், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் நேரடியாக மருத்துவமனைக்கு சென்று விடுதலை செய்வதற்கான ஏற்பாட்டை அரசுக்கு பரிந்துரைப்பதாகவும், எனவே உடல்நலத்தை கருத்தில் கொண்டு உண்ணாநிலை போராட்டத்தை கைவிடக் கோரியதின் பேரில், இதில் 16 பேர் போராட்டத்தை கைவிட்டு செங்கல்பட்டு சிறப்பு முகாமுக்கு சென்றனர்.

இன்றோடு 26வது நாளாக போராட்டத்தை தொடர்ந்து கொண்டிருந்த நிலையில் தமிழக அரசு மனிதாபிமான அடிப்படையில் எந்த நடவடிக்கையும் எடுக்காததால், இன்று முதல் தங்களுக்கு அளிக்கப்படும் மருத்துவ சிகிச்சையை ஏற்காமல் சாவது என்ற முடிவுக்கு வந்துவிட்டனர்.

எனவே தமிழக அரசு மரணத்திற்கு தங்களை ஒப்புக்கொடுத்துவிட்ட ஈழச் சகோதரர்களை காத்திட மனிதாபிமானத்தோடு முன்வர வேண்டும்.

விபரீதம் நடப்பதற்கு முன்பாக தடுப்பதற்கு அரசு நடவடிக்கை எடுத்திட வேண்டுகிறேன்.

இந்தியாவில் உள்ள திபெத், மியான்மர், வங்காளம், பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த ஏதலிகள், சுதந்திரமாக வாழ்வதைப் போன்று ஈழத் தமிழர்களும் வாழ ஆவண செய்திட வேண்டுகிறேன்.

ஈழத் தமிழர்களுக்காக அமைக்கப்பட்டிருக்கின்ற சித்திரவதை முகாமான செங்கல்பட்டு, பூவிருந்தவல்லி சிறப்பு முகாம்களை உடனடியாக மூடி, அங்கே வாடிக்கொண்டு இருக்கும் ஈழத் தமிழர்கள் சுதந்திரமாக தங்கள் குடும்பத்தினருடன் வாழ திறந்தவெளி முகாம்களுக்கு அனுப்பி வைத்திட மாநில அரசு ஆவன செய்திட வேண்டும் என்று கூறியுள்ளார் வைகோ.

0 Responses to செங்கல்பட்டு, பூவிருந்தவல்லி 'சித்திரவதை' முகாம்களை உடனே மூட வேண்டும்!- வைகோ

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com