Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

மனித குலம் தன் வரலாற்றுப் பாதையில் சந்தித்திராத ஒரு மாபெரும் இனப்படுகொலையை கடந்த 2009 ஆம் ஆண்டு முடிவுற்ற ஈழ விடுதலைப்போரில் சிங்கள பேரினவாத அரசு திட்டமிட்டு நடத்தி முடித்திருக்கிறது. இவ்வாறு  நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் .சீமான் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக சீமான் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:
மனித குலம் தன் வரலாற்றுப் பாதையில் சந்தித்திராத ஒரு மாபெரும் இனப்படுகொலையை கடந்த 2009 ஆம் ஆண்டு முடிவுற்ற ஈழ விடுதலைப்போரில் சிங்கள பேரினவாத அரசு திட்டமிட்டு நடத்தி முடித்திருக்கிறது.

உலகமெங்கும் பரந்து வாழும் தமிழ்த் தேசிய இனத்தின் ஆன்மாவில் சுமக்கும் வலியாக ஈழத்தின் துயர் மாறி இருக்கிறது. மண்ணின் பூர்வீக குடிமக்களான எம் ஈழ உறவுகள் சொந்த மண்ணிலேயே அகதிகளாக, அடிமை இனமாக மாற்றப்பட்ட அவலம் தமிழர்களின் மனசாட்சியை உலுக்கி இருக்கிறது.

தமிழ்த் தேசிய இனத்தின் பெருமைமிக்க அடையாளமாக திகழ்ந்த எம் ஈழத்து உறவுகள் நாடிழந்து, உறவுகளை களத்தில் பலி கொடுத்து விட்டு வலி மிகுந்த ஏதிலிகளாக உலகமெங்கும் வாழ்ந்து வரும் துயரத்தினை ஒவ்வொரு தாயகத்தமிழனும் இணைந்தே சுமக்கிறார்கள் என்பதற்கும், எம் தாய்நிலமான ஈழ மண்ணில் நிகழ்ந்திருக்கின்ற கொடிய இனப்படுகொலைகளுக்கு பன்னாட்டுச் சமூகத்திடம் நீதி கேட்க திரண்டு விட்டார்கள் என்பதற்கும் நேரடியான சாட்சியாக தமிழக அனைத்துக் கல்லூரி மாணவர்களின் தீரம் மிக்க அறவழிப் போராட்டம் அமைத்து விட்டது.

கடந்த 10 தினங்களாக தன் சொந்த ரத்த உறவுகளான ஈழ சொந்தங்களின் அழிவினை நெஞ்சிலே நிறுத்தி, பொங்கும் கண்ணீரை தன் இதயத்தில் இருத்தி , உண்ணாமல், உறங்காமல் என் தம்பி,தங்கைகளான அனைத்துக் கல்லூரி மாணவ,மாணவியர் தமிழகமெங்கும் நடத்திய உண்ணாநிலைப் போராட்டம் உலகமெங்கும் எட்டிவிட்டது.

எவ்வித அரசியல் சார்பில்லாமல் தமிழ் இன உணர்வோடு கம்பீரமாக கல்லூரி மாணவ,மாணவியர் நடத்திய போராட்டங்கள் ஆண்டு கொண்டிருக்கிற மத்திய, மாநில அரசை அச்சுறுத்திய காரணத்தினால் தான்,கல்லூரிகள் இன்று காலவரையறையின்றி மூடப்பட்டிருக்கின்றன.

கடந்த 2009 ஆம் ஆண்டு சனவரி 29 ஆம் தேதி தன் உடலிலே நெருப்பினை அள்ளி கொட்டிக்கொண்டு இம்மண்ணிலே விதையாக விழுந்த மாவீரன் முத்துக்குமாரின் உயிர் ஈகைக்கு பிறகு தன்னெழுச்சியாக திரண்ட கல்லூரி மாணவ, மாணவியர் போராட்டம் இது போன்றே கல்லூரிகளை மூடி வீழ்த்தப்பட்டது. ஆள் மாறினாலும், ஆட்சி மாறவில்லை என்பதை தான் இது போன்ற சம்பவங்கள் காட்டுகின்றன.

யாரை காப்பாற்ற அரசுகள் கல்லூரிகளின் கதவுகளை மூடுகின்றன என்பதற்கான பதிலை நெஞ்சுரத்தோடு களத்தில் நிற்கும் தமிழக கல்லூரி மாணவ, மாணவியரிடத்தில் அரசுகள் தெரிவிக்குமா என்பதுதான் எங்கள் கேள்வி.

தொடர்ந்து களம் காணும் தமிழக கல்லூரி மாணவ, மாணவியர் போராட்டத்திற்கு மத்திய, மாநில அரசுகள் எவ்விதமான பதிலையும் அளிக்காமல் கல்லூரிகளை மூடி ஒடுக்க நினைப்பது தோல்வியில்தான் முடியும் என்பது எமது அழுத்தமான நம்பிக்கை. கல்லூரிகளின் கதவினை மூடலாம்.

வகுப்பறையின் வாசல்களை அடைக்கலாம். ஆனால் பொங்கியெழுந்து திரண்டிருக்கும் எம் தமிழக கல்லூரி மாணவ,மாணவியரின் இன உணர்வினை எந்த அடக்குமுறையாலும் வீழ்த்த முடியாது.

கல்லூரியின் கதவுகள் மூடப்பட்டாலும் தன் தொப்புள் கொடி சொந்தங்களுக்காக தொடர்ந்து களத்தில் நிற்க துணிந்திருக்கிற தமிழக அனைத்துக் கல்லூரி மாணவ, மாணவியர் நான் மனதார பாராட்டுகிறேன்.

வரும் 21ம் தேதி ஜெனீவாவில் ஐநா பெருமன்றத்தில் வரும் வாக்கெடுப்பிற்கு முன்னதாக தமிழினத்திற்கு சாதகமான அதிர்வுகளை ஏற்படுத்த தொடர்ச்சியான போராட்டங்கள் மிக அவசியமாக இருக்கின்றன.

அங்கே ஈழத்தில் நடந்தது வெறும் போர்க்குற்றமல்ல அது திட்டமிட்ட இனப்படுகொலை என்பதற்காகவும், இனப்படுகொலைகள் குறித்த சுதந்திரமான சர்வதேச நீதி விசாரணை ஒன்றினை நடத்திட வேண்டும் என்பதற்காவும், பொது வாக்கெடுப்பு நடத்தி தமிழர்களின் உயிர் கோரிக்கையான தனித் தமிழீழ நாட்டினை அமைத்திட வேண்டும் என்பதற்காவும், இனப்படுகொலைகளை செய்த சிங்கள பேரினவாத அதிபர் ராசபக்சவினை போர்க்குற்றவாளியாக அறிவித்து பன்னாட்டு நீதிமன்றம் முன் நிறுத்திட வேண்டும் என்பதற்காகவும், சிங்கள பேரினவாத நாடான இலங்கை மீது இந்தியா உள்ளீட்ட உலக நாடுகள் பொருளாதார தடை விதிக்க கோரியும் தமிழக அனைத்துக் கல்லூரி மாணவ,மாணவியர் போராடி வருகின்றனர்.

நமது தீர்க்கமான கோரிக்கைகளுக்காக பன்னாட்டுச் சமூகத்தை நிர்பந்திக்க தமிழக கல்லூரி மாணவர்கள் தொடர்ந்து களத்தில் நிற்க துணிந்திருப்பது நம் இன வரலாற்றில் மிக முக்கியமான முடிவாகவே நான் கருதுகிறேன்.

எவ்வித அரசியல் அமைப்பினை சாராது தமிழக அனைத்துக் கல்லூரி மாணவ, மாணவியர் தன்னெழுச்சியாக உருவாக்கி இருக்கும் தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பு வருகிற மார்ச் 20 ம் தேதி தமிழகமெங்கும் 1 கோடி மாணவ, மாணவியர் தொடர்முழக்க போராட்டத்தை நடத்த அழைப்பு விடுத்து இருக்கிறது.

மாணவர் சக்தியே மகத்தானது என்பதை இந்த மண்ணுலகம் மீண்டும் உணரட்டும்.தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பு அழைப்பு விடுத்திருக்கின்ற இப்போராட்டத்தினை நாம் தமிழர் கட்சி வரவேற்கிறது. ஆதரிக்கிறது.

மேலும் எம் அமைப்பின் மாணவர் பிரிவான நாம் தமிழர் மாணவர் பாசறையும் இப்போராட்டத்தில் முழுமையாக பங்கெடுக்கிறது என்பதையும் இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறேன்.

களம் காணும் எம் தம்பிகளுக்கும், தங்கைகளுக்கும் என் புரட்சிக்கர வாழ்த்துக்களை உரித்தாக்குகிறேன்.
வெல்லட்டும் மாணவர் போராட்டம், மலரட்டும் தமிழீழம்.

0 Responses to கல்லூரி விடுமுறைக்​கு கண்டனம்! மாணவர்களின் தொடர் முழக்​க போராட்டத்தி​ற்கு ஆதரவு!- சீமான் அறிக்கை (காணொளி இணைப்பு)

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com