Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

மத்திய அரசுடன் தமிழக அரசு ஒத்துழைத்தால் இலங்கை கடற்படையால் தமிழக, காரைக்கால் மீனவர்கள் தாக்கப்படும் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும் என்றார் மத்திய இணை அமைச்சர் வி. நாராயணசாமி.


காரைக்கால் மாவட்ட மீனவர்கள் 26 பேர், இலங்கைக் கடற்படையினரால் கடந்த சில தினங்களுக்கு முன்பு கைது செய்யப்பட்ட நிலையில், நேற்று புதன்கிழமை காரைக்கால் வந்த அமைச்சர் பாதிக்கப்பட்ட மீனவர்களின் உறவினர்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.

கைது செய்யப்பட்ட மீனவர்கள் 7 பேர் உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் என மீனவர்களின் உறவினர்கள் மூலம் அறிந்த அமைச்சர், இலங்கை தூதரக அதிகாரியை செல்போனில் தொடர்புகொண்டு, அவர்களுக்கு உரிய மருத்துவ சிகிச்சை அளிக்க அறிவுறுத்தினார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறியதாவது:
காரைக்கால் மீனவர்கள் 26 பேர் இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தகவல் கிடைத்தவுடன் இலங்கையில் உள்ள இந்திய தூதரகத்தை தொடர்பு கொண்டு பேசினேன்.

அதுபோல் வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித்தும் மீனவர்களை விடுவிக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.

கைது செய்யப்பட்ட மீனவர்கள் யாழ்ப்பாணம் சிறையில் 14 நாள் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

அவர்களுக்குத் தேவையான உணவு, உடை, மருத்துவ உதவிகளை செய்ய தூதரக அதிகாரிகளை கேட்டுக் கொண்டுள்ளோம்.

தமிழகத்தில் இராமேசுவரம், கன்னியாகுமரி, தூத்துக்குடி, நாகப்பட்டினம் மீனவர்களும் இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்படுகின்றனர்.

இலங்கை மீனவர்கள் மீன்பிடிக்கும் பகுதியில் தமிழக மீனவர்கள் மீன் பிடிப்பதாக அந்நாட்டு மீனவர்கள் அளிக்கும் புகாரால், தமிழக மீனவர்கள் சிறைபிடிக்கப்படுகின்றனர்.

இப்பிரச்சினைக்கு தீர்வு காண 2 ஆண்டுகளாக மத்திய அரசு முயற்சித்து வருகிறது.

இருநாட்டு மீனவர்களும் அமர்ந்து பேசி, எந்தெந்த எல்லையில் யார் மீன்பிடிப்பது என்று ஒப்பந்தம் செய்து கொள்வதே இந்த முயற்சி.

இதற்காக தமிழக அரசின் தலைமைச் செயலாளருக்கு 2 கடிதங்களை வெளியுறவுத் துறைச் செயலர் எழுதியும் இதுவரை பதில் இல்லை.

மத்திய அரசுடன் தமிழக அரசு ஒத்துழைத்தால், இப்பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும் என்றார்.

0 Responses to தமிழக அரசு ஒத்துழைத்தால் மீனவர் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும்!- மத்திய அமைச்சர் நாராயணசாமி

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com