Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”


.வருது ....வருது... .வட மாகாணசபைத்தேர்தல். யாரை முதலமைச்சர் வேட்பாளராகப் போடலாம் என்று  மூடிய அறைகளுக்குள்ளும், ஊடக வெளிகளிலும் பேசப்படுகிறது. முன்னாள் நீதிபதி சி.வி.விக்னேஸ்வரனா...மாவை சேனாதிராஜாவா.....ஈழப்பிரகடனப்
புகழ் வரதராஜப்பெருமாளா ...இல்லையேல் சந்திரகாசனா என்பதுதான் இப்போது முன்னணியில் இருக்கும் பெயர் விபரம்.
முன்னாள் 'உதயன்'  நாளிதழின் பிரதம ஆசிரியர் வித்தியாதரனின் பெயரை இப்பட்டியலில் காணவில்லை.

ஏற்கனவே கூட்டமைப்பை கட்சியாகப் பதிவு செய்யும் விவகாரத்தில், பிரச்சினைக்கு உள்ளாகியிருக்கும் அதன் தலைவர்கள் மத்தியில் தமிழரசுக் கட்சியை சார்ந்த ஒருவரை முதலமைச்சராக நியமித்தால் முரண்பாடுகள் முற்றலாம்.
இதனால் ஏற்படும் உடைவுகளைத் தவிர்க்க உதவி புரியப்போகிறோம் என்று புறப்பட்டுள்ள சிலர், தாம் விரும்பும் நபர்களின் பெயர்களை முன்மொழிவதாகக் கூறப்படுகிறது.
வரதர் , ஹாசனின் பெயர்களை எத்தரப்பு முன்மொழியும் என்பதை ஊகிக்க வேண்டிய  அவசியமில்லை. மாவையை, தமிழரசுக் கட்சியின் மூத்தகுடிகள் முன்மொழிவார்கள். இங்குள்ள அனைத்துக் கட்சித் தலைவர்களையும் திருப்திப்படுத்தக்கூடிய தெரிவாக சி.வி.விக்னேஸ்வரன் அவர்கள் இருப்பார் என்பதுதான் பலரின் கணிப்பு.

அதேவேளை, மணலாற்றில் காணிப்பத்திரங்கள் வழங்கும் நிகழ்வொன்றில் உரையாற்றிய இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்ச ,வட மாகாணசபைத் தேர்தல் நடைபெறும் மாதம் எதுவென்று அறிவித்துவிட்டார். செப்டம்பரில் எந்த நாளில் நடத்தவேண்டுமென்பதை தனது நம்பிக்கைக்குரிய சோதிடர்களின் முடிவிற்கு விட்டுவிட்டார்.
அமெரிக்கத்தீர்மானத்தில் சொல்லப்பட்டுள்ள பரிந்துரைகளில் , சிங்களத்திற்கு பிரச்சினை தராத விடயம் இத்தேர்தலாக மட்டுமே இருக்க முடியும்.
 
ஏனெனில் ஒட்டு மொத்த இலங்கைக்கான சிங்களத்தின் இறைமைக்கு 13வது திருத்தச் சட்டம் இடையூறாக இல்லை என்பதனை ஜே.ஆர் மட்டுமல்ல மகிந்தரும் தெரிந்து வைத்துள்ளார். வட - கிழக்கு இணைப்பினை பிரிக்கக்கூடிய வல்லமை சிங்கள இறைமையை அடிப்படையாகக் கொண்ட அரசியலமைப்புச் சட்டத்திற்கு உண்டென்பதையும் அவர்கள் புரிந்து கொண்டுள்ளார்கள்.


இரண்டு தடவைகள் கிழக்கில் ஆட்சி அமைத்த மாகாணசபைகள், காணி,காவல்துறை மற்றும் நிதியைக் கையாளும் உரிமையை பெறவில்லை. அது குறித்த பேச்சுவார்த்தைகளில் தமிழர் தரப்போடு பேசுவதற்கும் அரசு தயாரில்லை. 13+ ஊடாக அது குறித்து பேசி ,அரசியமைப்பில் திருத்தங்கள் மேற்கொண்டு ,நிரந்தரமான அரசியல் தீர்வொன்றினைக் காணலாமென இந்தியத்தரப்பிற்கு மகிந்தர் கொடுத்த வாக்குறுதிகள் எத்தனையோ.

அதனை செய்ய வேண்டுமென்கிற அழுத்தத்தினை இந்தியா இதுவரை சிங்களத்திற்கு கொடுக்கவில்லை என்பது வேறு விடயம். அப்படிக் கொடுப்பார்கள் என்று காத்திருக்கச் சொல்வது, பிராந்திய அரசியலின் சூட்சுமத்தை புரியாமல் முன்வைக்கப்படும் ,இந்தியாவின் இலங்கை சார்புத் தன்மையை மறைமுகமாக நியாயப்படுத்தும் வாதமாக அமைந்துவிடும்.

13 வது திருத்தச் சட்டமானது, இன அழிவிற்கு உள்ளாகும் இறைமையுள்ள பூர்வீக தமிழ் தேசிய இனம் ஒன்றிக்கான இடைக்காலத்தீர்வுமல்ல..நிரந்தரத் தீர்வுமல்ல.
முதலில், மாகாணசபை நிதியம் யாரால் கட்டுப்படுத்தப்படுகிறது என்கிற ஒரு விவகாரத்தைப் பார்த்தாலே புரியும், அதிகாரங்கள் பரவலாக்கப்படுகின்றனவா அல்லது மத்தியில் குவிக்கப்படிகின்றனவா என்று.

நிதி கையாள்கைக்கு அடுத்ததாக நில உரிமை முக்கியமானது. அன்று கிழக்கினை விழுங்கிய மாவலி அபிவிருத்தித்திட்டம், இன்று மணலாற்று மண்ணை அபகரிப்பதைப் பார்க்கலாம்.
ஆகவே அரச காணிகளுக்கான உரிமை மத்திய அரசின் ஆளுகைக்குள் இருக்கும் போது ,மாகாணசபைகளை நகரசபைகள் என்று அழைப்பதில் தவறு இல்லை போல் தெரிகிறது.

உதாரணமாக, கோவில் காணிகளின் உரிமையைப் பாதுகாப்பதில் ஏற்பட்ட மோதல்களை அறிய வேண்டுமாயின், வரதராஜப்பெருமாள் முதலமைச்சராக இருந்த அந்த சொற்ப காலத்தில் மாகாணசபையில் நடந்த இது குறித்தான விவாதங்களை பதிவேட்டில் பார்க்கலாம். அல்லது ஒரு நேர்காணல் மூலம் அவரிடமே கேட்டுத் தெரிந்து கொள்ளலாம்.

இப்போது அரசியல் தீர்விற்கான புதிய தெரிவு ஒன்று முன் வைக்கப்பட்டுள்ளது. அது சாத்தியமா இல்லையா என்பது குறித்தான ஆரோக்கியமான விவாதங்கள் உரையாடப்படாமல் தடுக்கும் வகையில் ,சில கருத்துக்கள் எழுந்தமானமாக முன் வைக்கப்படுவதைப் பார்க்கிறோம்.

சர்வதேச மேற்பார்வையில் அரசியலமைப்பிற்கு அப்பால் ஒரு இடைக்கால நிர்வாகம்  வட -கிழக்கில் நிறுவப்பட வேண்டுமென்கிற கருத்து, சிவில் சமூகத்தாலும், மன்னார் மறைமாவட்ட ஆயர் ராயப்பு ஜோசெப்பு  ஆண்டகையாலும், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களினாலும் ,இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட இந்தியத்தரப்பிடம் முன் வைக்கப்பட்டது.

இன அழிப்பினை தடுப்பதற்காக உடனடியாக முன் வைக்கக்கூடிய மாற்றுவழி இதுவென இவர்கள் நம்புகிறார்கள். எமது பிரச்சினையில் தமது நலன் சார்ந்து அக்கறை கொள்ளும் இந்தியாவிடமும், அமெரிக்காவிடமுமே இதனைத் தெரிவிக்கின்றார்கள். தீர்மானங்கள் மூலம் கிடைக்கும் கால அவகாசம், சிங்களத்தின் இன அழிப்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்த உதவும் என்பதுதான் இவர்களின் கணிப்பு.

மன்னார் ஆயரும், கஜேந்திரகுமாரும், சட்டத்துறை விரிவுரையாளர் குருபரனும் மக்களால் தெரிவு செய்யப்படாதவர்கள் என்கிற ஒரு காரணத்திற்காக அவர்கள் தமது கருத்தினைத் தெரிவிக்கும் அருகதையற்றவர்கள் என்பது ஜனநாயக மறுப்பாகவே அமையும்.

மக்களால் தெரிவு செய்யப்பட்ட இரா.சம்பந்தனும் 13 வது திருத்தச் சட்டத்தை ஏற்றுக்கொள்ளவில்லை. கஜேந்திரகுமாரும் அதனை முற்றுமுழுதாக நிராகரிக்கின்றார்.

ஒரே ஒரு கேள்வி. தமிழ் மக்களிற்கான அரசியல் தீர்வு 13 வது திருத்தச் சட்டம்தான் என்று கூறி ,இலங்கை- இந்திய  ஒப்பந்தத்தை 87 இல் உருவாக்கிய இந்திய அரசும் ஜே.ஆரும் , வட - கிழக்கு தமிழ் மக்களால் தெரிவு செய்யப்பட்டவர்களா?.
 
-இதயச்சந்திரன்

0 Responses to வடக்கில் மாகாணசபையா? வட -கிழக்கில் இடைக்கால நிர்வாகமா?.. - இதயச்சந்திரன்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com