Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

உதயன் மீது மீண்டும் தாக்குதல்!

பதிந்தவர்: தம்பியன் 03 April 2013


யாழ்ப்பாணத்தினிலிருந்து வெளிவரும்  உதயன் நாளிதழின் கிளிசொச்சி அலுவலகம் மீது இனந்தெரியாத கும்பலொன்று இன்று அதிகாலை 5 மணிக்குத் தாக்குதலை நடத்தியிருக்கின்றது.

தாக்குதலில் உதயன் கிளிநொச்சி அலுவலகம் சேதமடைந்திருப்பதுடன் பத்திரிகை விநியோகப் பணிக்காகச் சென்ற இரு பணியாளர்கள் , மற்றும் கிளை முகாமையாளர் உட்பட மூவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அநுமதிக்கப் பட்டுள்ளார்கள்.

இது பற்றி மேலும் தெரியவருகையினில் வழமைபோன்று பத்திரிகை விநியோகப்பணியில் ஈடுபடும் வாகனத்தில் எடுத்து செல்லப்பட்ட பத்திரிகைகளை  யாழ் - கண்டி நெடுஞ்சாலை, கரடிப்போக்குச் சந்தியில் அமைந்துள்ள கிளிநொச்சி உதயன் அலுவலகத்தில் பத்திரிகைகளை இறக்குவதற்கு ஆயத்தமானபோதே தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.குறித்த அலுவலகத்தின் அயலில் உள்ள ஆட்களற்ற கட்டடங்களினுள்ளும், பற்றைகளுக்குள்ளும் மறைந்திருந்து வெளிப்பட்ட கும்பலொன்றே உட்புகுந்து தாக்கிக் காயப்படுத்தியதோடு, அலுவலகத்தினுள்ளே புகுந்து அடித்து நொருக்கியிருக்கின்றனர்.

சம்பவத்தில் படுகாயமடைந்த இரண்டு பணியாளர்கள்  சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அநுமதிக்கப்பட்டுள்ளனர். ஏனையவர்கள் சிறு காயங்களுக்கு உள்ளாகியிருக்கின்றனர். குறித்த அலுவலகம் முற்றாகச் சேதமடைந்திருக்கிறது. சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி காவல்துறையினருக்கு தகவல் வழங்கப்பட்டதாக கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினரும் உதயன் முகாமைத்துவ பணிப்பாளருமான சரவணபவன் தெரிவித்தார்.

அண்மைக்காலமாக தமது பத்திரிகைகள் மக்களின் கைக்குச் செல்வதைத் தடுப்பதற்கான பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறிப்பாக வன்னிப் பிராந்தியத்தில் திட்டமிட்ட முறையில் விநியோகப் பணிகளைத் தடுப்பதற்கான முயற்சிகள்  மேற்கொள்ளப்பட்டிருப்பதோடு, பத்திரிகை விற்பனையாளர்களும் கடும்  அச்சுறுத்தல்களுக்கு உள்ளாக்கப்பட்டிருக்கின்றனர் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

ஏற்கனவே முல்லைத்தீவினில் தொடர்ச்சியாக உதயன் நாளிதழ் மக்களால் தீக்கிரையாக்கப்பட்டிருந்தது.அத்துடன் குறித்த செய்தியொன்றை கண்டித்து ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டிருந்தது.

இதனிடையே உதயன் நாளிதழ் மீதான தாக்குதல் தொடர்கின்ற நிலையினில் பெரும்பாலான ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடக பணியாளர்கள் வெளியேறிவருகின்றனர்.

0 Responses to உதயன் மீது மீண்டும் தாக்குதல்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com