நெடுங்கேணி சேனைப்புலம் பகுதியினில் பாடசாலை மாணவியை பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய குற்றவாளியைக் கைது செய்யுமாறு வலியுறுத்தி இன்று காலை நெடுங்கேணியில் மக்கள் ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றுள்ளது.
நெடுங்கேணி சேனைப்புலம் உமையம்மையாள் மகாவித்தியாலயத்தில் கல்வி கற்கும் 7 வயது மாணவி கடந்த 13 ஆம் திகதி திங்கட்கிழமை குறித்த மாணவி பாடசாலையை விட்டு வீடு செல்லும் போது இனந்தெரியாத நபரினால் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு பற்றைக்குள் குற்றுயிராக இருந்த நிலையில் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். இப்பாலியல் வல்லுறவைச் செய்த குற்றவாளியை உடனடியாகக் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்துமாறு கோரி மக்கள் ஆர்ப்பாட்டமொன்று இன்று காலை நெடுங்கேணி மகா வித்தியாலயத்திற்கு முன்பாக ஆரம்பமாகி நெடுங்கேணி பிரதேச செயலகம் வரை நடைபெற்றது.
பெருமளவான மக்கள் ஆக்ரோசத்துடன் கலந்து கொண்ட இவ் ஆர்ப்பாட்டத்தில் பாதிக்கப்பட்ட மாணவிக்கு நீதி வழங்குங்கள், குற்றவாளியைச் சட்டத்தின் முன் நிறுத்துங்கள், சட்டம் என்ன இருட்டறையா?, பெண்கள் சிறுவர் பாதுகாப்புச் சட்டத்தை அமுல் படுத்து, சிறுவர்களைக் கொல்லாதே, தமிழ் சிறுமி என்பதால் பாராட்சமா? போன்ற கோசங்களை எழுப்பப்பட்டன.
ஆர்ப்பாட்டத்தின் நிறைவில் பாதிக்கப்பட்ட மாணவிக்கு நீதி வழங்குமாறு கோரி மகஜர் ஒன்று நெடுங்கேணி பிரதேச செயலரிடம் கையளிக்கப்பட்டது. இதில் கலந்து கொண்ட சட்டத்தரணி அருட்சகோதரி ரமணி, முஸ்லிம் சகோதரி ஜென்சிலா, மனித உரிமை ஆர்வலரும் எழுத்தாளருமான சண் மாஸ்டர், பவான், நெடுங்கேணிப் பிரதேச சபைத் தலைவர் சுப்பிரமணியம், நெடுங்கேணி வர்த்தக சங்கத் தலைவர் ஆகியோர் உரையாற்றினார்கள்.
குறித்த சிறுமியை அருகாகவுள்ள பொலிஸ் நிலையத்தை சேர்ந்த பொலிஸாரே பாலியல் வல்லுறவிற்குட்படுத்தியதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.எனினும் சிங்களவரான அப்பொலிஸாரை காப்பாற்ற முயற்சிகள் தொடர்கின்றன.
0 Responses to நெடுங்கேணி பாடசாலை மாணவி பாலியல் வல்லுறவு விவகாரம்! குற்றவாளியைக் கைது செய்யுமாறு கோரி மக்கள் ஆர்ப்பாட்டம்