Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”


இன்று ஐபிஎல் போட்டிக்காக இறுதிப்போட்டிக்காக கொல்கத்தா மைதானத்தில் சென்னை - மும்பை அணிகள் மோதுகின்றன.

ஒரு பக்கம் ஸ்பாட் பிக்ஸிங், பெட் சென்னை சூப்பர் கிங்ஸ் உரிமையாளர் மெய்யப்பன் கைது என பரபரப்பாக சர்ச்சைகள் தொடர்ந்தாலும் மறுமுனையில் வழமை போன்றே இம்முறையும் இறுதிப்போட்டி சூடுபிடித்துள்ளது.

இதுவரை நடைபெற்ற ஆறு ஐபிஎல் தொடர்களிலும் ஐந்து முறை இறுதிப்போட்டிக்கு நுழைந்துள்ளது சென்னை சூப்பர் கிங். இம்முறை தொடரில் விளையாடிய 16 போட்டிகளில் 11 இல் வெற்றி பெற்றிருக்கிறது. பிளே ஆஃப் சுற்றிலிருந்து நேரடியாக இறுதிப்போட்டிக்கும் தகுதி பெற்றது. தமது சொந்த மைதானத்துக்கு வெளியே அதிகமான போட்டிகளில் வென்ற ஒரே அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் தான். இம்முறை தொடரில் அதிக ஓட்டங்கள் குவித்த வீரர் (ஹஸி) அதிக விக்கெட்டுக்களை குவித்த வீரர் (பிராவோ) என இருவரையும் உள்ளடக்கிய ஒரே அணியும் சூப்பர் கிங்ஸ் தான்.  இன்றைய இறுதிப்போட்டியில் வென்றால் மூன்றாவது முறையாக ஐபிஎல் டைட்டில் பட்டத்தை வெல்லும் சூப்பர் கிங்ஸ்.

மும்பை இந்தியன்ஸை பொருத்தவரை கடந்த தொடர்களில் சோபிக்க தவறியதால் வெகுவாக விமர்சனத்துக்கு உள்ளான அணி. எப்போதும் மிகப்பெரும் நட்சத்திர வீரர்களை கொண்டிருப்பதால் அதன் செல்வாக்கு தொடர்கிறது.

இம்முறையும் ஐபிஎல் ஆரம்ப போட்டிகளில் ரிக்கி பாண்டிங் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் சோபிக்கத் தவறியிருந்தது. பாண்டிங்கை இடைநிறுத்தி  ரோஹித் சர்மாவை கேப்டனாக்கினார்கள். தொடர் வெற்றி பெறத்தொடங்கியது. மும்பை  வான்கதே மைதானத்தில் விளையாடிய 8 போட்டிகளிலும் வெற்றியை தனதாக்கியது.

எனினும் சொந்த மைதானத்துக்கு வெளியே இதுவரை ஐந்து போட்டிகலில் தோல்வி அடைந்திருக்கிறது.  ஆனால் ஐபிஎல் டைட்டில் பட்டம் வெல்லாத அணிகளில் மிகச்சிறந்த அணியாக இன்றுவரை திகழ்கிறது.

இன்றைய போட்டிக்கு கொல்கத்தா ஈடன் கார்டன் மைதான ரசிகர்களின் ஆதரவு எப்படி இருக்க போகிறது?

இந்திய கிரிக்கெட் அணி வெற்றி பெற்ற தருணங்களில் மிகத்துடிப்பான உற்சாகத்தை வழங்கியவர்கள் கொல்கத்தா ரசிகர்கள். இம்முறை சென்னை - மும்பை இரு அணிகளுக்கும் சமமான ஆதரவு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னையை பொருத்தவரை அவர்களுடைய பேட்டிங் ஆர்டர் போன்று பந்துவீச்சு மிகச்சிறந்தது என சொல்ல இயலாது. எனினும் மோசமான பந்துவீச்சும் இல்லை. மும்பையை பொருத்தவரை அவர்களுடைய பேட்டிங் ஆர்டர் 6 வது வீரருடன் பூர்த்தியாகிவிடுகிறது.  ஏனையோர் பந்துவீச்சாளர்கள்.

அந்த பேட்டிங் ஆர்டரிலும் நான்கு வீரர்கள் மாத்திரமே டெஸ்ட் போட்டிகளிலும் அனுபவம் வாய்ந்தவர்கள். சென்னையில் அப்படி 7 பேர் இருக்கிறார்கள்.  எனினும் மும்பையின் பந்துவீச்சு மிக அபாரமானது. மிட்செல் ஜோன்சன், லசித் மாலிங்க, ஹர்பஜன் சிங் என பலம்வாய்ந்த பந்துவீச்சு இருக்கிறது.

இன்றைய போட்டியில்  மும்பையில் சச்சின் டெண்டுல்கர் விளையாடுவது இன்னமும் கேள்விக்குறியாகவே உள்ளது. நேற்று மும்பை பயிற்றுவிப்பாளர், சச்சின் விளையாடுவது சந்தேகமே என கருத்து தெரிவித்திருந்தார்.

பிரஜன் ஓஜாவும் காயம் காரணமாக  விளையாட மாட்டார் என தெரிகிறது. சென்னையும் குவாலிபஃயர் போட்டியில் களமிறக்கிய அதே அணியை மீண்டும் களமிறக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் இன்றைய போட்டியின் போது மழை பெய்யவும், வாய்ப்பிருக்கிறது. மிக மோசமான மழை பெய்யுமாயின் போட்டி நாளைய தினத்துக்கு ஒத்திவைக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

மும்பை - சென்னை  அணிகள் தொடர்பில் சில சுவாரஷ்யமான தகவல்கள்

இம்முறை ஐபிஎல் தொடர்பில் இரு அணிகளும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட மூன்று சந்தர்ப்பங்களில் 2 இல் மும்பை வெற்றி பெற்றுள்ளது. எனினும் இறுதியாக நடைபெற்ற குவாலிஃபயர் போட்டியில் சென்னை வீழ்த்தியிருந்தது.

ஈடன் கார்டன் மைதானத்தில் மும்பை விளையாடிய ஐந்து போட்டிகளில் நான்கில் வெற்றி பெற்றிருக்கிறது. சென்னை ஐந்தில் நான்கில் வெற்றி பெற்றிருக்கிறது.
சென்னை அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ் மேன்கள் மிகச்சிறந்த ஸ்ட்ரைக்கிங் ரேட், சராசரி ஓட்ட எண்ணிக்கையை கொண்டிருக்கின்றனர். சுரேஷ் ரைனாவின் சராசரி ஓட்ட எண்ணிக்கை 60. ஸ்ட்ரைக் ரேட் 168.

முரளி விஜயின் சராசரி ஓட்ட எண்ணிக்கை 54. ஸ்ட்ரைக் ரேட் 158. மைக்கெல் ஹஸின் சராசரி ஓட்ட எண்ணிக்கை 58.50. ஸ்ட்ரைக் ரேட் 133. மும்பையை பொருத்தவரை ரோஹித் சர்மா மாத்திரமே சராசரியாக 35 ஓட்டங்களுக்கு மேல் எடுத்துள்ளார். எனினும் பந்துவீச்சில் லசித் மாலிங்க 19 விக்கெட்டுக்களை எடுத்துள்ளார். அவருடைய சராசி ஓட்ட எண்ணிக்கை நான்கு ஓவர்களுக்கு 18 ஆக மாத்திரமே இருக்கிறது.

இன்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மீண்டும் வெற்றி பெறுமா? அல்லது முதற்தடவையாக இறுதிப்போட்டியில் வென்று மும்பை இந்தியன்ஸ் கோப்பையை கைப்பற்றுமா? உங்கள் கருத்து என்ன?

0 Responses to மும்பை Vs சென்னை : வெற்றி வாய்ப்பு யாருக்கு? : ஒரு சுவாரஷ்யமான பார்வை

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com