Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”


வவுனியா பாரதிபுரத்திலிருந்து சுமார் 100 பேர் பொலிஸ் மற்றும் விஷேட அதிரடிப் படையினரால் இன்று திங்கட்கிழமை பலவந்தாக விரட்டப்பட்டுள்ளனர் என்று குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. பாரதிபுரம் பகுதியில் நீண்டகாலமாக வசித்துவருகின்ற தமிழ் மக்களே இவ்வாறு பலவந்தமாக வெளியேற்றப்பட்டுள்ளனர். காணிகளற்ற மக்கள் காடுகளை அழித்து குடியேறுவதற்கு முற்பட்டபோதே அவர்கள் பலவந்தமாக அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவிக்கையில், வவுனியா, பாரதிபுரம் பகுதியில் நீண்டகாலமாக வசித்துவரும் 100 க்கும் மேற்பட்ட மக்கள் இன்று திங்கட்கிழமை பொலிஸ் மற்றும் விஷேட அதிரடிப் படையினரால் தமது இருப்பிடங்களிலிருந்து பலவந்தமாக வெளியேற்றப்பட்டனர். வவுனியாவில் பம்பைமடு பகுதியில் 200 ஏக்கர் காடு அழிக்கப்பட்டு அந்தப் பகுதியில் முஸ்லிம் மக்கள் குடியேற்றப்பட்டுவருகின்றார்கள். இவர்களுக்கு குடியேறுவதற்கு முன் உடனடியாகவே காணிகளுக்கான அனுமதிப்பத்திரம் வழங்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்றும் அவர் குற்றஞ்சாட்டினார்.

 அமைச்சர் ஒருவரின் செல்வாக்கினால் இந்தச் செயற்பாடுகள் தீவிரமாக இடம்பெற்றுவருகின்றது. ஆனால், இந்தப் பகுதியில் 40 வருடகாலமாக வசிக்கும்  தமிழ் மக்களுக்கு காணி அனுமதிப்பத்திரம் வழங்கப்படவில்லை. அவர்கள் வன இலாகாவுக்குச் சொந்தமான  காணிகளில் குடியேறியிருப்பதாகக் குற்றஞ்சாட்டப்பட்டு வெளியேற்றப்படுகின்றார்கள். இவ்வாறுதான் பாரதிபுரம் மக்கள் இன்று வெளியேற்றப்பட்டனர்.

முஸ்லிம்  மக்களை  குடியேற்றுவதற்காக  காடுகள் அழிக்கப்பட்டு காணிகள் வழங்கப்படுவதுடன், உடனடியாகவே அதற்கான அனுமதிப்பத்திரமும்  வழங்கப்படுகின்றது. ஆனால், 40 வருடங்களுக்கு  முன்னதாக தாமாகவே வந்து காடுகளை அழித்து தமது இருப்பிடங்களை அமைத்துக்கொண்ட   தமிழர்கள் அங்கிருந்து பலவந்தமாக வெளியேற்றப்படுகின்றார்கள். மக்களைக் குடியேற்றும் விடயத்தில் அரசாங்கத்தின் அணுகுமுறையில் காணப்படும் இந்தப் பாகுபாடு காரணமாக இரு சமூகங்கள் மக்கள் மத்தியில் முரண்பாடுகளே மேலோங்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

இடம்பெயர்ந்த முஸ்லிம் மக்களை அவர்களுடைய சொந்த இடங்களில் மீள்குடியேற்றுவதற்கு நாம் எதிரானவர்களல்ல. அதனை நாம் ஒருபோதும் எதிர்க்கவும் இல்லை. ஆனால், மீள்குடியேற்றச் செயற்பாடுகள்  இனங்களுக்கு இடையில் முரண்பாடுகளையும் சந்தேகங்களையும் ஏற்படுத்துவதாக இருக்கக்கூடாது.மீள்குயேற்றத்துக்குக் காணி வழங்குவது தொடர்பில் அரசாங்கத்திடம் திட்டவட்டமான கொள்கை ஒன்று இல்லை. சிங்களக் குடியேற்றங்கள் அரசாங்க மற்றும் படையினரின் ஆதரவுடன் ஒருபுறம் மேற்கொள்ளப்படுகின்றது. மறுபுறுத்தில் அமைச்சர் ஒருவரின் ஆதரவுடன் முஸ்லிம் குடியேற்றங்கள் இடம்பெறுகின்றன. இந்த நிலையில் வன இலாகாவுக்குச்  சொந்தமான காணி எனக் கூறப்பட்டு தமிழர்களுடைய காணிகள் பறிக்கப்படுகின்றன என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் குறுகிய அரசியல் நலன்களையும், நடைபெறவுள்ள தேர்தல்களையும் இலக்காகக்கொண்டு வன்னியில் பாகுபாடான முறையில் செயற்படுகின்றது. இதனால், நீண்டகாலமாக இந்தப் பகுதியில் வசித்துவரும் தமிழ் மக்கள்தான் பெரிதும் பாதிக்கப்படுகின்றார்கள். பாரதிபுரம் பகுதி மக்கள் இன்று பலவந்தமான முறையில் வெளியேற்றப்பட்டமை இதற்கு உதாரணமாகும். இந்த பாகுபாடான குடியேற்றக்கொள்கையை அரசாங்கம் கைவிட வேண்டும். நீண்டகாலமாக வசித்துவரும் தமிழர்களுக்கு காணி அனுமதிப்பத்திரம் வழங்கப்பட வேண்டும். இதன் மூலமாகவே வன்னியில் இனங்களுக்கு  இடையில் உருவாகக்கூடிய முரண்பாடுகளையும் சந்தேகங்களையும் தவிர்க்க முடியும் என்றும் அவர் சொன்னார்.

0 Responses to பாரதிபுரத்திலிருந்து தமிழ் குடும்பங்கள் பலாத்காரமாக வெளியேற்றப்பட்டனர்! அதிரடிப்படையின் அடாவடி!!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com