Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

சதாம் உசேனின் வீழ்ச்சிக்கு முன்னரான ஈராக்கிலும், ஹொஸ்னி முபாரக்கின் வீழ்ச்சிக்கு முன்னரான எகிப்திலும் அடிக்கடி ஓர் அரசியல் கோமாளித்தனம் அரங்கேறுவதுண்டு. சதாமோ அன்றி முபாரக்கோ மக்களால் தெரிவு செய்யப்பட்டவர்கள் அன்று. மாறாக ஆயுதப் படைகளைக் கைக்குள் வைத்துக்கொண்டு ஆட்சிக்கட்டிலில் கொலுவிருந்தவர்கள். ஆனாலும் தமது அதிகாரத்தை தக்கவைத்துக் கொள்வதற்காக அடிக்கடி அதிபர் தேர்தல்களை நிகழ்த்துவார்கள். இத்தேர்தல்களில் இவர்களை எதிர்த்து போட்டியிடுவதற்கு எவரும் துணிவதில்லை.

விளைவு: தேர்தல் இன்றியே மக்களால் தெரிவு செய்யப்பட்டவர்களாக தம்மைத்தாமே இவர்கள் அறிவித்துக் கொள்வார்கள்.

இப்பொழுது இதனையத்த அரசியல் கோமாளித்தனம் புலம்பெயர்தேசங்களில் அரங்கேறியுள்ளது. புலம்பெயர்தேசங்களில் இயங்கும் தமிழீழத் தேசியக் கட்டமைப்புக்களை உடைக்கும் நோக்கத்துடன் கே.பியால் உருவாக்கப்பட்ட விசுவநாதன் உருத்திரகுமாரன் தலைமையிலான நாடுகடந்த ‘அரசு’ என்ற பெயரில் இயங்கும் குழுவே இக்கோமாளித்தனத்தை அரங்கேற்றியுள்ளது.
நாடுகடந்து தமிழீழ அரசமைக்கின்றோம், நாடாளுமன்றத்தை நிறுவுகின்றோம், அமைச்சரவையை உருவாக்குகின்றோம், அடையாள அட்டையை விநியோகிக்கின்றோம், தென்சூடானில் தூதரகம் திறக்கின்றோம், தமிழீழ சுதந்திர சாசனத்தை எழுதுகின்றோம் என்றெல்லாம் பல்வேறு அரசியல் கோமாளித்தனங்களை அரங்கேற்றிய இக்குழு தமது கோமாளித்தனத்தின் உச்சக்கட்டமாக இப்பொழுது வாக்குப் பதிவு இன்றி மக்களின் ஏகோபித்த ஆதரவுடன் புதிய அரசவையை அமைத்திருப்பதாக அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது.

புலம்பெயர் தேசங்களில் இயங்கும் பழைய மாணவர் சங்கங்களாக இருந்தாலும் சரி, சைவ ஆலயங்களாக இருந்தாலும் சரி அங்கெல்லாம் வாக்குப் பதிவுகளுடனேயே தேர்தல்கள் நடைபெறும். இத்தேர்தல்களில் ஒதுக்கீடு செய்யப்படும் பதவிகளுக்குப் பலத்த போட்டி நிலவுவது வழமை. ஆனால் தனியார் அமைப்புக்களிலோ நிலைமை வேறு. அங்கு வாக்குப் பதிவுகள் நடைபெறுவதில்லை. வேட்பாளர்களும் போட்டியிடுவதில்லை.
யதார்த்தம் இவ்விதம் இருக்க மக்களின் வாக்குப் பதிவுகள் இன்றி நாடுகடந்த ‘அரசுக்கான’ அரசவையை தாம் தெரிவு செய்திருப்பதாக உருத்திரகுமாரன் குழுவினர் அறிவித்திருப்பதானது அது ஒரு கானல் நீர் என்ற மெய்யுண்மையை மக்களிடையே பட்டவர்த்தனமாக்கியுள்ளது. சனநாயக வழியில் செயற்படுவதாகக் கூறிக் கொள்ளும் ஒரு அமைப்பில் தேர்தல்களோ அன்றி வாக்குப் பதிவுகளோ நடைபெறாதிருப்பின் அதனை ஒரு சனநாயக அமைப்பாக கருத முடியாது.

இந்த வகையில் தேர்தல்களும், வாக்குப் பதிவுகளும் இன்றி அரசவையை அமைத்திருப்பதாக உருத்திரகுமாரன் குழுவினர் விடுத்துள்ள அறிவித்தல் நாடுகடந்த ‘அரசின்’ சர்வாதிகாரப் போக்கையும், அது முற்றுமுழுதாக தனியார் மயப்படுத்த நிலையில் இருப்பதையும் நிதர்சனப்படுத்துகின்றது. இந்த வகையில் சனநாயக அமைப்பாக நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் முன்னிலைப்படுத்தப்பட்டு இன்று சர்வாதிகார அமைப்பாகப் பரிணாம வீழ்ச்சியை அடைந்திருக்கும் நாடுகடந்த ‘அரசு’ கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதையாக தனது அரசியல் மரணத்தைத் தழுவியுள்ளது எனக்கூறின் மிகையில்லை. இது வெறும் அரசியல் மரணம் மட்டும் அல்ல. தமிழ்த் தேசிய இணையத்தளம் ஒன்றில் விபரிக்கப்பட்டது போன்று இது நாடுகடந்த ‘அரசு’ தழுவியிருக்கும் அகால மரணம்.

புலம்பெயர் தேசங்களில் இயங்கும் தமிழீழத் தேசியக் கட்டமைப்புக்களை தனது கட்டுப்பாட்டில் கொண்டுவருவதற்கு எடுக்கப்பட்ட முயற்சிகள் தோல்வியடைந்த நிலையிலேயே 2009ஆம் ஆண்டு யூன் மாதம் விசுவநாதன் உருத்திரகுமாரன் தலைமையில் நாடுகடந்த தமிழீழ ‘அரசை’ நிறுவும் அறிவித்தலை கே.பி அவர்கள் வெளியிட்டிருந்தார். இவ் அறிவித்தலை கே.பி வெளியிட்ட பொழுது கே.பியை எதிர்த்தவர்கள் கூட நாடுகடந்த அரசை நிறுவும் திட்டத்தை வரவேற்றனர்.

நாடுகடந்த அரசு என்ற கரு சரியானது ஆனால் அதற்கு உயிரூட்ட முற்படுபவர்கள்தான் பிழையானவர்கள் என்ற வாதமும் அப்பொழுது தமிழ்த் தேசிய செயற்பாட்டாளர்கள் சிலரால் முன்வைக்கப்பட்டது. போதாக்குறைக்கு 2010 ஆம் ஆண்டு நாடுகடந்த அரசுக்கான தேர்தல் நடைபெற்ற பொழுது அதில் வேட்பாளர்களாக தமிழ்த் தேசிய செயற்பாட்டாளர்கள் போட்டியிட்டனர்: பலர் வெற்றியும் பெற்றனர். ஆனால் ஒரு சில மாதங்களிலேயே நாடுகடந்த ‘அரசிலிருந்து’ இவர்கள் அகற்றப்பட்டனர். நாடுகடந்த ‘அரசின்’ பிரதமராக தனக்குத்தானே உருத்திரகுமாரன் முடிசூடிக்கொண்டார்: தனது விசுவாசிகளை அமைச்சர்களாக நியமித்தார். அப்பொழுதே நாடுகடந்த ‘அரசு’ என்பது கானல் நீரில் மிதக்கும் ஓர் காகிதக் கப்பல் என்ற மெய்யுண்மை நிதர்சனமாகியது. கூடவே உருத்திரகுமாரனின் சுயரூபமும் மக்களிடையே பட்டவர்த்தனமாகியது.

தமிழீழத் தேசிய விடுதலைப் போராட்டத்தின் வீரியத்தை மழுங்கடிக்கும் நோக்கத்தைக் கொண்ட நாடுகடந்த ‘அரசு’ என்ற காகிதக் கப்பல் 2009 மே 18 உடன் தோற்றம் பெற்ற ஒன்றன்று. வன்னிப் போர் உக்கிரமடைந்து 2009 சனவரி 2ஆம் நாளன்று கிளிநொச்சியைச் சிங்களப் படைகள் கைப்பற்றிய மறுகணமே புலம்பெயர்ந்த தமிழீழ அரசை அமைப்பதற்கான திட்டம் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமைப்பீடத்திற்கு கே.பியின் விசுவாசி ஒருவரால் அனுப்பி வைக்கப்பட்டது. இதனையத்த திட்டம் அப்பொழுது தமிழகத்தில் தங்கியிருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவராலும், பிரித்தானிய தமிழர் பேரவையின் பிரமுகர்களாலும் முன்வைக்கப்பட்டது.

எனினும் இவற்றைத் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமைப்பீடம் அடியோடு நிராகரித்ததோடு இவ்வாறான முயற்சிகளில் ஈடுபட வேண்டாம் என்ற அறிவித்தல் தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் அவர்களாலும், அனைத்துலக தொடர்பகப் பொறுப்பாளர் வீ.மணிவண்ணன் (கஸ்ரோ) அவர்களாலும் சம்பந்தப்பட்ட நபர்களுக்கு அதிகாரபூர்வமாக தெரியப்படுத்தப்பட்டது. துர்ப்பாக்கியவசமாக இது தொடர்பான எழுத்துமூல அறிவித்தல்கள் எவையும் இல்லாதது கே.பி-உருத்திரகுமாரன் குழுவினருக்கு வாய்ப்பாக அமைந்தது.

விளைவு: தமிழீழத் தேசியத் தலைவரின் சிந்தனைக்கு செயல்வடிவம் கொடுப்பதாகப் பொய்யுரைத்து நாடுகடந்த ‘அரசை’ நிறுவும் அறிவித்தலை 2009 யூன் மாதம் கே.பி அவர்கள் வெளியிட்டார். ஆனாலும் நாடுகடந்த ‘அரசு’ என்ற திட்டம் தமிழீழத் தேசிய விடுதலைப் போராட்டத்திற்குக் குந்தகம் விளைவிக்கக்கூடியது என்ற கருத்தை 1981ஆம் ஆண்டிலேயே எழுத்துமூலமாக தமிழீழ விடுதலைப் புலிகள் வெளியிட்டிருந்தார்கள்.

அப்பொழுது பிரித்தானியாவில் வைகுந்தவாசன் என்பரின் தலைமையில் இலண்டன் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு (இப்பொழுது உள்ள பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்புக் குழு அல்ல) என்ற பெயரில் இயங்கிய அமைப்பால் வெளியிடப்பட்ட ‘நாடுகடத்தப்பட்ட தற்காலிக தமிழீழ அரசை’ நிறுவும் திட்டத்திற்குப் பதிலளிக்கும் விதமாகவே இவ் அறிவித்தலை தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் வெளியிட்டது. அதில் பின்வருமாறு தமது ஆட்சேபனையை தமிழீழ விடுதலைப் புலிகள் பதிவு செய்திருந்தார்கள்:

“1980ஆம் ஆண்டு ஆவணி 31ஆம் திகதி இலண்டன் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவில் நிறைவெய்திய தீர்மானத்தில் 1982 ஆம் ஆண்டு தைப்பொங்கல் தினத்தன்று சுதந்திரத் தமிழீழம் உதயமாகும் என்று முன்னறிவித்தல் கொடுக்கப்பட்டது. ஆனால் இந்த இமாலய சாதனையை எப்படிச் சாதிப்பது என்பது பற்றி இத் தீர்மானத்தில் எவ்வித விபரமோ விளக்கமோ அளிக்கப்படவில்லை. ஆயினும் இலண்டன் பிரகடனம் சம்பந்தமாக தமிழீழ அரசியல் அரங்கில் மிகவும் குழப்பகரமான சர்ச்சை எழுந்தது. உலக அரசியல் வரலாற்றில் ஆழமான தரிசனம் அற்றோரும், ஒரு தேசிய விடுதலைப் போராட்டத்தின் சிக்கலான பரிமாணங்களை நன்கு புரியாதவர்களும், அவசரபுத்தியுடைய கற்பனாவாதிகளும் இலண்டன் பிரகடனத்தை எடுத்த எடுப்பில் குருட்டுத்தனமாக வரவேற்றார்கள்.

பிரகடனத்தின் நோக்கம், உள்ளடக்கம், இலக்குகள், அவற்றால் எழக்கூடிய அரசியல் தாக்கங்கள் ஆகியவற்றை நன்கு ஆய்வு செய்யாமல் அவசர புத்தியில் ஆதரவை அளித்தார்கள். தமிழீழத் தேசிய விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்ல தீவிரமான செயற்திட்டம் எதுவும் முன்வைக்கப்படவில்லை என்று கூட்டணித் தலைமையில் எழுந்த விரக்தியானது, தமிழீழத்தை வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யலாம் என்ற கற்பனாவாதத்தில் இவர்களைத் தள்ளியது போலும். கூட்டணியைக் கிள்ளிக் கொண்டு, தொட்டிலையும் ஆட்டிக்கொண்டு, ‘தைப்பொங்கலன்று தமிழீழம் வருகிறது’ என்று தாலாட்டுப்பாடி வந்த இவர்களது அரசியல் பித்தலாட்டமானது மக்கள் மத்தியில் ஒருபுறம் குழப்பத்தை ஏற்படுத்தியது.

செயற்திட்டம் எதுவுமே வரிக்கப்படாத பூடகமான தீர்மானத்தை மூலமாக வைத்துக் கொண்டு சர்ச்சைகளில் ஈடுபடுவதில் அர்த்தமில்லை என்பதால் நாம் மௌனமாக இருந்து விட்டோம். ஆனால் திரு.வைகுந்தவாசன் சமீபத்தில் (14.11.1981) வெளியிட்டிருக்கும் அறிக்கை ஒன்றில் இலண்டன் பிரகடனத்தின் இலக்குகளை விளக்கும் வகையில் ஒரு பூர்வாங்க திட்ட வரைவை வெளியிட்டிருக்கிறார்.

1982 தைப்பொங்கல் தினத்தன்று நாடுகடத்தப்பட்ட நிலையிலான ஒரு தற்காலிக தமிழீழ அரசை பிரகடனப்படுத்துவது, அதன் பின்னர் ஐ.நா. மூலமும், ஐ.நா. அமைப்பின் கீழுள்ள சர்வதேச சட்ட நிறுவனங்கள் வாயிலாகவும் எமது பாரம்பரியப் பிரதேசங்களுக்கு சட்ட ஆட்சியை வேண்டுவது, இவைதான் இத்திட்டத்தின் சாராம்ச நோக்குகளாகும்.
எமது நிலைக்கு முற்றிலும் ஒவ்வாத தற்காலிக அரசுகள் நிறுவப்பட்ட வரலாற்றுச் சான்றுகளைக் குறிப்பிட்டுக் காட்டும் அதேவேளை, நெருக்கடி எழுந்தால் ஐ.நா. படைகள் வந்து குறுக்கிடலாம் என்ற வகையிலும் மிகவும் சிறுபிள்ளைத்தனமான கருத்துக்களும் இத்திட்டத்தில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றன.

மொத்தத்தில் பார்க்கும்போது, இப் பிரகடனமானது எமது தேசிய சுதந்திரப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வதற்கோ அன்றி சட்ட ஆட்சியுரிமையும் இறைமையுமுடைய ஒரு சுதந்திர அரசை அமைப்பதற்கோ உருப்படியான செயற்திட்டம் எதையும் கொண்டிருக்கவில்லை என்றே கூறவேண்டும். அது மட்டுமன்றி இத்திட்டமானது எமது இயக்கம் வரித்துள்ள ஆயுதப் புரட்சிப் போராட்டத்திற்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் மக்களைத் திசைதிருப்பி விடுவதாகவும் அமையும்.”

1981ஆம் ஆண்டு நாடுகடத்தப்பட்ட தமிழீழ அரசாகவும், அதன் பின்னர் 2009ஆம் ஆண்டு சனவரி மாதம் புலம்பெயர்ந்த தமிழீழ அரசாகவும் முன்மொழியப்பட்டு தமிழீழ விடுதலைப் புலிகளால் நிராகரிக்கப்பட்ட இத்திட்டமே 2009 யூன் மாதம் கே.பி அவர்களால் நாடுகடந்த அரசாக புத்துயிர் அளிக்கப்பட்டு உருத்திரகுமாரனை தலைவராகக் கொண்டு அமைக்கப்பட்டது.

1981ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகள் எச்சரித்தபடி தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டத்தை திசைதிருப்பும் முயற்சியில் நாடுகடந்த ‘அரசை’ கே.பி-உருத்திரகுமாரன் குழுவினர் வழிநடத்திய பொழுதும், புலம்பெயர்வாழ் தமிழீழ மக்களின் விழிப்புணர்வால் கானல் நீரில் மூழ்கிய காகிதக் கப்பலாக இப்பொழுது நாடுகடந்த ‘அரசு’ அகால மரணமெய்தியுள்ளது.

ஆனாலும் தமிழீழத் தேசிய விடுதலைப் போராட்டத்தை சிதைக்கும் முயற்சிகளை எதிரி கைவிடுவதாக இல்லை. கே.பியின் வழிகாட்டலில் வெளிநாடுகளில் இயங்கும் கே.பியின் கையாட்களையும், முதற்தடவையாக 2010ஆம் ஆண்டு யூன் மாதம் 14ஆம் நாளன்று கனடா, பிரான்ஸ்,
சுவிற்சர்லாந்து, பிரித்தானியா, அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளிலிருந்து கொழும்பு சென்று கே.பியையும், கோத்தபாய ராஜபக்சவையும் சந்தித்த ‘மெத்தப்படித்த’ கனவான்களையும், அதன் பின்னர் பல கட்டங்களாக கொழும்பு சென்று திரும்பிய மேலும் பலரையும் பயன்படுத்தி தமிழ்த் தேசிய செயற்பாட்டாளர்களிடையே உட்பூசல்களை தோற்றுவிக்கும் முயற்சியில் முழுவீச்சுடன் சிங்கள அரசு ஈடுபட்டு வருகின்றது.

மாவீரர் நாள் நெருங்கி வரும் நிலையில் புலம்பெயர் கட்டமைப்புக்களை கே.பியூடாகப் பலவீனப்படுத்தும் முயற்சிகளில் தாம் வெற்றி பெற்றிருப்பதாக சிறீலங்கா அரசாங்கத்தின் மூத்த அமைச்சரான கெஹெலிய ரம்புக்வெல விடுத்துள்ள அறிவித்தல் இதனையே நிதர்சனப்படுத்துகின்றது. இதனை உணர்ந்து கொண்டு புல்லுருவிகள் தொடர்ப்பில் புலம்பெயர் கட்டமைப்புக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்.

நன்றி: ஈழமுரசு

0 Responses to காகிதக் கப்பலும், ஆழ ஊடுவுரும் சிங்களமும் - சேரமான்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com