Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

கனத்த நெஞ்சோடு மாவீரர்களை நினைவுகூரும் நாள் கார்த்திகை 27.
கூடி நின்று தீபமேற்றி, தலை வணங்கி, மாவீரத்தைப் போற்றும் நாள்.
மரணத்தைக் கண்டு அஞ்சாத மனிதர்களின் மாண்புகளை பாடும் நாள்.
கந்தகத் துகள்களில் விடுதலை உணர்வினைக் கலந்திட்ட
எம் மறவர்களை ஆராதிக்கும் நாள்.

இவர்களை மறந்திடச் சொல்லி ஒரு கூட்டம் அழைக்கிறது.
நல்ல காலம் பிறக்குதெண்டு கூவும்
குடுகுடுப்பைக்காரர் கூட்டமது.
இறந்த காலம் நிஜமில்லையென்று,
நிகழ்கால அபிவிருத்திக் கனவில் எமை வாழத் தூண்டும்.

சர்வதேச வல்லூறுகளோடு அண்டிப் பிழைக்காமல்
தமதுயிரை இழந்த 'மூடர் கூடம்'  என்று இவர்களைச் சொல்கிறது அக்கும்பல்.
கும்பலுக்கும், கூட்டத்திற்கும் வேறுபாடு தெரிந்ததால்
மாவீரத்தின் மகத்துவம் சரியாகப் புரிந்து கொல்லப்பட்டது.

விடுதலைச் சமராடிகளை ஓரம்கட்டி,
'ஓட்டு' கடவுள்களை உயரத்தில்  வைக்கத் திமிரும் இன்னொரு கும்பல்.
'பயங்கரவாதம்' ஒழிந்ததென்று தீபாவளி கொண்டாடும் 'வீட்டோ' கனவானுக்கு,
நிலமிழந்த மக்களின் போர் முகத்தை மறைத்து விட்டது முக்கூட்டு கும்பல்.

யாழில், சேதமுற்ற இயந்திரங்களை காட்சிப்படுத்திய தமிழ் தேசிய நடிகருக்கு,
வலிவடக்கில் நில மீட்புப் போரில் குதித்துள்ள மக்களைத் தெரியவில்லை.
உறவுகளைப் பிரிந்த மானிடரின் வலி புரியவில்லை.
ஆனால் இவர் மீண்டும் வருவார், உணர்வுகளை வாக்குகளாய் அறுவடை செய்ய.

மாவீரர்களே....தேர்தல் காலத்தில் வாக்குகளை அள்ளிக் கொடுக்கும்
' கர்ணன்கள்' நீங்கள்.
நீங்கள் இறக்கும் போது எழுதி வைத்த ' சுயநிர்ணய உரிமை' என்கிற மரணசாசனம்,
இவர்களின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் சேர்ந்து கொள்ளும் கறிவேப்பிலை.

நீங்கள் களமாடிய மண்ணில், இப்போ பூர்சுவா சனநாயகக் களவாணிகள்.
இதைவிட ஆழமான அர்த்தங்கள் பொதிந்த சொற்களைத் தேடியும் கிடைக்கவில்லை.
உங்களை விபரிக்கையில், வார்த்தைகள் தாமாகவே வந்து விரல்களில் அமரும்.
அருவிபோல் கொட்டும்.

விதையாகிப்  போனவர்களே....
விண்ணுக்கும் மண்ணுக்கும் இணைப்புள்ளி ஆனவர்களே....
எக்காலத்திலும் எமக்கு முக்காலமுமானவர்களே....
உங்கள் ஈகத்தில், புதியபாதைகள் வரையப்பட்டுவிட்டன.
இனத்தின், அதன் சுயத்தின், பிறப்புரிமையை பேரம்பேசும் 'வாக்கு' முகமூடிகளை,
மக்கள் இனங்கண்டு விட்டனர்.

உறவுகளே...
கார்த்திகை 27இல் , 'எக்ஸ்செல்' மண்டபத்திற்கு வாருங்கள்.

அங்கு....அடிபணிவு அரசியலில் வீழ்ந்து விடாத,
துட்டுக்கு சோரம் போகாத,
பதவிச் சனி பிடிக்காத,
வல்லானுக்கு சேவகம் செய்யாத,
உண்மை மனிதர்களைக் காண்பீர்கள்.
அவர் கரங்களில் இலட்சிய தீபங்கள் ஒளிரும்.
இறுதிவரை உறுதியோடு போராடும் புதுவிதி
அங்கே உரத்து எழுதப்படும்.

-( இது கவிதையல்ல....உணர்வுகளின் உரைநடை)

0 Responses to இறுதிவரை உறுதியோடு போராடும் புதுவிதி செய்க - இதயச்சந்திரன்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com