Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தமிழர் தாயகத்தையும் தமிழினத்தையும் அழிக்கின்ற தமிழினவழிப்பு திட்டமிட்ட முறையில் அரங்கேறுகின்றது என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கூறியுள்ளார். மட்டக்களப்பு கோப் இன் ஹோட்டலில்  முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மாமனிதர் யோசப் பரராஜசிங்கத்தின் 8ஆவது வருட நினைவுதின நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இக்கருத்துதினை கூறியுள்ளார்.

இங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,

'வடக்கு, கிழக்கில் திட்டமிட்ட இன அழிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. முள்ளிவாய்க்காலில் தமிழினம்  படுகொலை செய்யப்பட்டு நான்கு ஆண்டுகள் கடந்த நிலையில், தமிழ்த் தேசியத்தின் அடையாளத்தை திட்டமிட்டு படிப்படியாக அழித்து வருகின்றனர். முல்லைத்தீவிலும் மட்டக்களப்பிலும் திருகோணமலையிலும் என வடக்கு, கிழக்கில் காணி அபகரிப்பு திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டு வருவதுடன், சிங்களக் குடியேற்றத்தை மேற்கொண்டு சிங்கள மயப்படுத்தும் நடவடிக்கையை  மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழர்களின் பொருளாதாரம் அழிக்கப்பட்டு வருகின்றது. குறிப்பாக வடக்கு, கிழக்கில் கடற்றொழில், கமத்தொழில், வியாபாரம் ஆகிய மூன்று தொழில்களுமே அழிக்கப்பட்டு வருகின்றன. கடந்த 30 வருடகால யுத்தத்தினால் கடற்றொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இன்றும் கடற்படையினரின் கட்டுப்பாட்டுக்குள் கடற்றொழில் இருப்பதால் கடற்றொழிலாளர்களினால் தமது தொழிலை முன்னேற்றகரமாக மேற்கொள்ள முடியவில்லை. இதனால் பாதிக்கப்பட்ட கடற்றொழிலாளர்களே அவுஸ்திரேலியாவுக்கு நாட்டை விட்டு தப்பிச் செல்கின்றனர்.

இராணுவத்தினர் பல ஏக்கர் விவசாய நிலங்களை தமது முகாமுக்காக பிடித்து வைத்திருப்பதால், தமிழ் விவசாயிகள் தங்களது சொந்த நிலத்தில் விவசாயம் செய்யமுடியவில்லை. வியாபாரத்தில் கூட இராணுவத்தினருடன் போட்டி போட்டுக் கொண்டு தமிழ் வியாபாரிகள் வியாபாரத்தில் ஈடுபட வேண்டியுள்ளது.

மன்னாரில் இராணுவத்தினர் மரக்கறிகளை அரைவாசி விலைக்கு விற்பதாகவும் இதனால் மன்னார் விவசாயிகள் தம்மால் செய்கை பண்ணப்பட்ட மரக்கறிகளை விற்க முடியாதுள்ளதாகவும் மன்னார் விவசாயிகள் தன்னிடம் முறையிட்டதாக மன்னார் ஆயர் என்னிடம் தெரிவித்திருந்தார்.  இவ்வாறு தமிழர்களின் பொருளதாரம் திட்டமிட்டு அழிக்கப்பட்டு வருகின்றன.

நிலம் மற்றும் மொழி, தனித்துவமான கலாசாரம், பொருளாதாரம் ஆகியன ஒரு தேசத்தில் தங்கியுள்ளவைகளாகும். தமிழினத்தின் பொருளாதாரம், தனித்துவமான தமிழர்களின் கலாசாரம், தமிழர்களின் நிலம் அழிக்கப்பட்டும் அபகரிக்கப்பட்டும் வருகின்றன.

தமிழ் தேசத்தை அழித்து தமிழினத்தை அழிக்கின்ற கைங்கரியத்தை செய்து கொண்டிருக்கின்றனர். இன்று நினைவுகூரப்படுகின்ற மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கம் என்னை அரசியலுக்கு கொண்டு வந்தவர். எனக்கு அரசியல் தந்தையாக இருந்து செயற்பட்டவர்' என அவர் தனது பேச்சுரையில் குறிப்பிட்டுள்ளார்.

0 Responses to தமிழர் தாயகத்தில் தமிழின அழிப்பு கைக்கரியமாக அரங்கேறுகின்றது - கஜேந்திரகுமார்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com