Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இலங்கையின் மத்திய அரசாங்கத்திற்கும், வடக்கு மாகாண அரசாங்கத்திற்கும் இடையில் சிறந்த புரிந்துணர்வு அவசியமென்று இலங்கைக்கான ஜப்பானின் விசேட தூதுவர் யசூசி அகாஷி தெரிவித்துள்ளார்.

 மோதல்களுக்கு பின்னரான காலத்தில் வடக்கு மாகாணத்தில் தேர்தல் நடத்தப்பட்டுள்ளது. அது, சிறப்பான விடயம். வடக்கு மாகாண அரசாங்கமும், மத்திய அரசாங்கமும் இணைந்து செயற்பட வேண்டிய அவசியமுள்ளது. அதன் மூலமே, வடக்கு மாகாணத்தை விரைவாக கட்டியெழுப்ப முடியும் என்று அவர்  குறிப்பிட்டுள்ளார்.

இராஜதந்திர விஜயமொன்றை மேற்கொண்டு கடந்த 08ஆம் திகதி இலங்கை வந்த யசூசி அகாஷி, தொடர்ச்சியாக ஐந்து நாட்கள் தங்கியிருந்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் உள்ளிட்ட முக்கியஸ்தர்களைச் சந்தித்து பேசினார். அவரின் விஜயத்தின் இறுதி நாளான இன்று வெள்ளிக்கிழமை கொழும்பில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தினார். அதன்போதே, மேற்கண்டவாறு கூறினார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆட்சியமைத்துள்ள வடக்கு மாகாண சபையுடன் இணைந்து செயற்படுவதற்கு மத்திய அரசாங்கம் தயாராக இருப்பதாகவும், அதற்கான முயற்சிகளை மேற்கொள்வேன் என்றும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தன்னிடம் உறுதியளித்துள்ளதாகவும்  யசூசி அகாஷி தெரிவித்துள்ளார்.

வடக்கு மாகாண முதலமைச்சராக தெரிவாகியுள்ள சி.வி.விக்னேஸ்வரனுக்கு தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துள்ளதாக குறிப்பிட்ட அவர், சி.வி.விக்னேஸ்வரன் சிறப்பாக சேவையாற்றக் கூடியவர் என்று கூறினார். வடக்கு மாகாண முதலமைச்சருக்கும், ஆளுநருக்கும் இடையில் ஏற்பட்டிருக்கின்ற சர்ச்சைகள் தொடர்பில் அறிந்து வைத்துள்ளதாகவும், அது தொடர்பில் நல்ல முடிவொன்றை ஜனாதிபதி எடுப்பதாக தன்னிடம் கூறியதாகவும் குறிப்பிட்டார்.

இதனிடையே, இலங்கைக்கு ஜப்பான் தொடர்ந்து உதவியளிக்கும் என்று கூறிய அவர்,  இலங்கைக்கு தேவையான விடயங்களில் சர்வதேச சமூகமும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.  தேசியப் பிரச்சினைகள் சிலவற்றுக்கு இலகுவில் தீர்வினைப் பெற முடியாது. அது போன்று சில விடயங்களில் தொடர்ச்சியாக பேச்சு நடத்த வேண்டியுள்ளது என்றார்.
மோதல்களுக்கு பின்னரான இலங்கையுடன் இணைந்து செயற்படுவதற்கு சர்வதேச சமூகங்கள் போராட வேண்டும். நல்லிணக்கத்திற்கு கால எல்லை விதிக்க முடியாது. அதற்காக பொறுமையாக இருக்க வேண்டும். குற்றமிழைத்தவர்கள் தண்டிக்கப்படுவதில்லை என்ற பொதுவான கருத்தை இல்லாதொழிக்க வேண்டுமாயின் ஆழமான நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக் கூறலில் சிறப்பான செயற்முறைகளை ஊக்குவிக்கும் நடவடிக்கைகள் அவசியம் என்று யசூசி அகாஷி மேலும் சுட்டிக்காட்டினார்.

0 Responses to வடக்கு மாகாண அரசாங்கத்திற்கும்- மத்திய அரசாங்கத்திற்கும் இடையில் சிறந்த புரிந்துணர்வு அவசியம்: யசூசி அகாஷி

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com