Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

கொழும்பிலிருந்து வெளிவரும் ஆங்கில தினசரி ஒன்று தனது தலைப்புச் செய்தியில் திருமதி அனந்தி சசிதரன் அவர்கள் கைது செய்யப்பட்டு புனர்வாழ்வு நிலையத்திற்கு அனுப்பப்படவேண்டும் என்றும் அவர் தொடர்பான விசாரணைகள் நடைபெறுவதாகவும் அவரது கணவர் எழிலன் (சசிதரன்) திருமலை மாவட்டத்தின் அரசியல் பொறுப்பாளராக இருந்த காரணத்தினால் இவரையும் புலி என்ற ஓர் முத்திரையைக் குத்தி எந்நேரமும் இவர் கைது செய்யப்படலாம் என்ற ஒரு அச்சத்தை அப்பத்திரிகை ஏற்படுத்தியுள்ளதாக எச்சரித்துள்ளார்.

இது தொடர்பாக இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையினில் மேலும் தெரிவிக்கையினில் பாதுகாப்பு அமைச்சை மேற்கோள் காட்டியே இந்தச் செய்தி வெளியிடப்பட்டுமுள்ளது.அனந்தி சசிதரன் என்பவர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளராக வடக்கு மாகாணசபையில் போட்டியிட்டு விருப்புவாக்குகளில் இரண்டாவது மிக அதிகப்படியான வாக்குகளால் வெற்றிபெற்றவர். அவரது கணவர் இராணுவத்திடம் சரணடைந்தபொழுதிலும் இன்றுவரை அவருக்கு என்ன நடந்தது? என்பது தெரியாமலேயே திருமதி அனந்தி சசிதரன் அவர்களும் அவரது குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில், அவர் தனது கணவரைக் கண்டுபிடிப்பதற்காகவும் அவரைப்போன்றே தமது கணவன்மாரை, பிள்ளைகளைக் காணாமல் தவிக்கின்ற ஏனையோருக்காகவும் போராடுவதென்பதும் அவரது கடமையும் அவரது உரிமையும் ஆகும். இதற்காகவே மக்கள் அவரைத் தேர்ந்தெடுத்துள்ளனர் என்பதையும் பாதுகாப்பு அமைச்சும் கொழும்பு ஆங்கில தினசரிகளும் புரிந்துகொள்ள வேண்டும்.

திருமதி அனந்தி சசிதரன் அவர்கள் ஜனநாயகப+ர்வமான தனது கருத்துக்களைப் பாதிக்கப்பட்ட தனது மக்களுக்கான கருத்துக்களை இங்கும்சரி வெளிநாடுகளிலும்சரி சொல்வதற்குச் சகல உரித்தும் உடையவர். அவர் பெண்மணி என்பதற்காக அவரை மிரட்டி உருட்டி பணிய வைக்க முயற்சிப்பதும் அவரை அச்சுறுத்துவதும் முழுக்க முழுக்க ஜனநாயக விரோத செயற்பாடும் அவரது அடிப்படை உரிமைகளை மீறுகின்ற செயற்பாடுமாகும். இவ்வாறான விஷமத்தனமான அச்சுறுத்தக்கூடிய செய்திகளைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மிக வன்மையாகக் கண்டிக்கின்றது.

ஆகவே, அவரை அச்சுறுத்துவதை விடுத்து, அவரது கோரிக்கைகளின் நியாங்களைப் புரிந்துகொண்டு அவரது கணவர் உட்பட காணாமல் போனவர்களைக் கண்டுபிடிப்பதற்கான நடவடிக்கைகளை இலங்கை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும். அதனை விடுத்து அச்சுறுத்தல் நடவடிக்கைகளை மேற்கொள்வதானது மேலும் மேலும் இனங்களுக்கிடையில் விரிசல்களையும் நம்பிக்கையீனங்களையும் உருவாக்கும் என்பதையும் சம்பந்தப்பட்டோர் உணர்ந்துகொள்ள வேண்டும். உங்களது செயற்பாடுகளால் நீங்களே உங்கள் தலையில் மண்ணைவாரி இரைத்துக்கொள்கின்றீர்கள். மக்களால் தெரிவு செய்யப்பட்டவர்களை அச்சுறுத்துவதும் கைதுசெய்ய முற்படுவதும் அவர்களது ஜனநாயக மற்றும் மனித உரிமைகளை மீறுவதும் சர்வதேசம் பார்த்துக்கொண்டிருக்கக்கூடிய செயற்பாடுகள் அல்ல. எனவே, இவ்வாறான முட்டாள்தனமான அச்சுறுத்தல் நடவடிக்கைகளைக் கைவிட்டு தமிழ் மக்கள் இந்த நாட்டின் பிரஜைகள் என்ற அடிப்படையில் அவர்கள் சமவுரிமையுடனும் சம அந்தஸ்துடனும் வாழ்வதற்கு வழியேற்படுத்த இலங்கை அரசு முன்வரவேண்டும் எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 Responses to அனந்திக்கு புனர்வாழ்வு விவகாரம்! களத்தினில் கூட்டமைப்பும் குதித்தது!!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com