தேசியப் பிரச்சினைகளுக்கு தீர்வுகாணும் யோசனைகளை முன்வைக்கும் நோக்கில் அமைக்கப்பட்டுள்ள பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் தமிழ் மக்களின் பிரதிநிதிகள் பங்கெடுக்க வேண்டும்.
அதன்மூலம், பாராளுமன்றத் தெரிவுக்குழுவினை அர்த்தபூர்வமானதாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் (ஈபிடிபி) செயலாளர் நாயகமும், அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.
தமிழ் மக்களின் எதிர்பார்ப்பு தீர்வினைப் பெற்றுக்கொண்டு சுதந்திரமாக வாழ்வதே. ஆகவே, பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் பங்கெடுக்க வேண்டிய பொறுப்பு தமிழ்ப் பிரதிநிதிகளுக்கு உண்டு. கடந்த காலங்களில் தமிழ் மக்களுக்கு கிடைத்த வாய்ப்புக்கள் அனைத்தும் வீணக்கப்பட்டுள்ள நிலையில், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அமைத்துள்ள பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் நம்பிக்கை கொள்ள வேண்டியது அவசியமானது என்றும் அவர் குறிப்பிட்டார்.
யாழ்ப்பாணம் தெல்லிப்பளையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட புற்றுநோய் வைத்தியசாலையின் திறப்பு விழா ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது. அதில், கலந்து கொண்டு பேசும் போதே அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேற்கண்டவாறு கூறினார்.
அரசியலமைப்பின் 13வது திருத்த சட்டத்திற்கு அமைவாக மாகாண சபை கிடைக்கப்பெற்றுள்ளது. அதனைச் சரியாகப் பயன்படுத்த வேண்டிய தேவை உள்ளது. கிடைக்கின்ற வாய்ப்புக்கள் அனைத்தையும் சரியாகப் பயன்படுத்துவதே தற்போது அவசியமானது என்று அவர் மேலும் தெரிவித்தார்.
0 Responses to பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் தமிழ்ப் பிரதிநிதிகள் பங்கெடுக்க வேண்டும்: டக்ளஸ் தேவானந்தா