Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

பெப்பரவரி 4ம் திகதி பிரித்தானியர்களின் ஆதிக்கத்திலிருந்து சிங்களவர்கள் விடுபட்டு ஆட்சியதிகாரத்தை கையேற்றநாள். ஆனால் தமிழர்கள் தமது இறைமைய சிங்களவர்களிடம் இழந்தநாள். இந்நாள் தமிழர்களைப் பொறுத்தவரையில் சுதந்திரநாள் அல்ல இருண்டநாள் கரிநாள் ஆகும் என்று கூறியுள்ளார் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளார் செல்வராசா கஜேந்திரன்.

சிறீலங்காவின் சுதந்திரதினம் தொடர்பில் புலம்பெயர் இணையத்தளம் ஒன்றிற்கு தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளதாக அந்த இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

1505ம் ஆண்டு இலங்கைத்தீவில் காலடி எடுத்து வைத்த போர்த்துக்கேயரிடம் தீவில் வடக்கு கிழக்கு பகுதியில் அரசாண்ட தமிழ் இராச்சியம் தனது ஆட்சியதிகாரத்தின் ஒரு பகுதியை இழந்தது. அதுபோன்று தீவின் தெற்கு மற்றும் மேற்குப் பகுதிகளை ஆண்ட சிங்கள அரசுகளும் தமது இறைமையின் ஒரு பகுதியை இழந்தது. அவர்களிடம் இழந்த இறையை மீட்டுப்பதற்காக வடக்கு கிழக்கு பகுதிகளை ஆண்ட தமிழ் மன்னர்கள்  தொடர்ந்து போராடியே வந்தனர். அதற்காக 1658ல் இலங்கை தீவில் காலடி எடுத்து வைத்த ஒல்லாந்தருடைய ஆதரவையும் நாடியிருந்தனர். போர்த்துக்கேயரிடமிருந்து தமிழரசை மீட்டெடுக்க உதவுவதாக பாசாங்கு செய்தவாறு இங்கு நுழைந்த டச்சுக்காரர் போர்த்துக்கேயரை வெளியேற்றிவிட்டு தமிழ் இராச்சியங்களின் ஒரு பகுதியை தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்து அடிமைப்படுத்தி 138 ஆண்டுகள் ஆண்டனர். அவர்களிடமும் தமழ் இராச்சியங்கள் தமது இறைமையினை இழந்தன.

தொடர்ந்து 1796ல் இலங்கைத் தீவில் காலடி எடுத்துவைத்த வெள்ளையர்களிடம் மீண்டும் தமிழ் இராச்சியங்களின் பெரும்பகுதி தமது இறையை இழந்தன. 1802ல் வன்னி மன்னன் பண்டாரவன்னியின் கற்சிலைமடுவில் வைத்து போரில் தோற்கடிக்கப்பட்ட நிலையில் தமிழ் இராச்சியங்கள் முழுமையாக தமது இறைமையை வெள்ளையரிடம் இழந்தது. அதேபோன்று தென்னிலங்கையில் இருந்த சிங்கள இராச்சியங்களும் தமது இறைமையை முழுமையாக வெள்ளையனிடம் இழந்தன.

1948ம் ஆண்டு இலங்கையை விட்டு பிரித்தானியர்கள் வெளியேறும்போது தமிழ் இராச்சியங்களின் இறைமையைத் தமிழர்களிடம் கையளிக்காது தென்னிலங்கை சிங்களவர்களிடம் கையளித்து, தமிழர்களை சிங்களவர்களுக்கு அடிமைகளாக்கிவிட்டுச் சென்றனர். அவ்வாறு தமிழ்த் அரசுகள் தமது இறைமையை சிங்களவர்களிடம் இழந்த நாள் 1948-02-04 ஆகும்.

அன்றிலிருந்து இத்தீவில் இருந்து தமிழர்களை அழித்தொழிக்க வேண்டும் என்ற நோக்கில் மாறி மாறி ஆட்சிப் பீடமேறிய ஒவ்வொரு சிங்கள அரசாங்கங்களும் செயற்பட்டு வருகின்றன. அந் நோக்கத்தை அடைந்து கொள்வதற்காக தமிழ் மக்கள் மீது படுகொலைகளை கட்டவிழ்த்து விட்டனர். அரச ஆதரவுடன் சிங்களக் குடியேற்றங்களை தமிழர் தாயகப் பிரதேசங்களில் மேற்கொண்டு சனத்தொகைப் பரம்பலை மாற்றியமைக்கும் வேலைத்திட்டத்தை தீவிரப்படுத்தினர். பௌத்த மயமாக்கும் வேலைகளை தீவிரப்படுத்தினர். சிங்களம் மட்டும் சட்டத்தைக் கொண்டுவந்தனர். பொருளாதார ரீதியாக சிங்கள மாயமாக்கும் வேலைத்திட்டங்களில் தீவிரமாக ஈடுபட்டனர்.

இந்த அழிப்பிலிருந்து தமிழ் மக்களையும் தேசத்தின் இருப்பையும் பாதுகாக்கும் போராட்டத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் ஈடுபட்டிருந்தனர். அவர்களுக்குப் பின்னர் ஒட்டுமொத்த தமிழ் மக்களும் அணிதிரண்டு நின்றனர். எனினும் சிங்கள பௌத்த பேரினவாதம் தமிழ் மக்களது நியாயமான போராட்டத்தை பயங்கரவாதமாக சித்தரித்தது. சர்வதேச நாடுகளும் தமது புகோள நலன்களுக்காக கண்ணை மூடிக்கொண்டு அந்த நியாயமான போராட்டத்தை அழிப்பதற்கு துணை நின்றன.

2009 மே வரை பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்ற போர்வையில் யுத்தமூலம் நேரடியாக தமிழ் மக்களை கொலை செய்யும் வேலைகளையும் தமிழ்த் தேசத்தை அழிக்கும் வேலைகளையும் மேற்கொண்டு வந்தனர். 2009 ன் பின்னர் அபிவிருத்தி என்னும் போர்வையில் தமிழ்த் தேசத்தின்  நிலத் தொடர்ச்சி மற்றும் தேசத்தின் இருப்பு, தனித்துவமான பொருளாதாரம், கலாசாரம், கல்வி, வரலாறு, மொழி என்பவற்றை அழிக்கும் கட்டமைப்புசார் இன அழிப்ப நடவடிக்கைகளையும் தீவிரப்படுத்தி வருகின்றனர்.

இந்த அழிப்பிலிருந்து தமிழ்த் தேசம் விடுபட வேண்டும். அதற்கான ஒரே வழி தமிழ்த் தேசத்தின் இறைமை அங்கீகரிக்கப்படுவது மட்டுமேயாகும். அவ்வாறு இறைமை அங்கீகரிக்கப்பட்ட தமிழ்த் தேசமும் சிங்கள தேசமும் இணைந்து ஒருநாட்டுக்குள் சமத்துவமான இரண்டு தேசங்கள் என்ற அடிப்படையிலான தீர்வு ஒன்று எட்டப்படும்போதே தமிழ் மக்கள் அடிமைத்தழையிலிருந்து விடுபட முடியும். அன்றுவரை தமிழர்களுக்கு சுதந்திரம் என்பது இல்லை. எனவே இன்றைய நாள் பெப்ரவரி 4 என்பது தமிழர் வாழ்வில் கரிநாள் இருண்டநாள், சிங்களவர்களிடம் அடிமைப்பட்டநாள் ஆண்டு. இதிலிருந்து விடுபட போராடுவோம் என இன்றைய நாளில் உறுதி புணுவோம் என்று கூறியுள்ளார் யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் மற்றும் சர்வதேச தமிழீழ மாணவர் பேரவையின் முன்னாள் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், தற்போது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளருமாகிய செல்வராசா கஜேந்திரன்.

0 Responses to சிறீலங்காவின் சுதந்திர நாள்; தமிழ்தேசத்திற்கு கரிநாள் - கஜேந்திரன்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com