இலங்கைக்கு எதிராக அமெரிக்கா, பிரித்தானியா, மொரீஷியஸ் உள்ளிட்ட நாடுகள் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் முன்வைத்த தீர்மானம் 11 மேலதிக வாக்குகளினால் நிறைவேறியது.
ஜெனீவாவில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைப் பேரவையின் 25வது கூட்டத் தொடர் நடைபெற்று வருகின்றது. குறித்த கூட்டத் தொடர் அதன் இறுதி நாட்களை அண்மித்துள்ள நிலையில், இலங்கைக்கு எதிரான தீர்மானம் நேற்று புதன்கிழமை முன்வைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து நேற்றும், இன்று வியாழக்கிழமையும் உறுப்பு நாடுகளிடம் விவாதங்கள் இடம்பெற்றது. அதனையடுத்து சற்று முன்னர் வாக்கெடுப்புக்கு விடப்பட்டது.
வாக்கெடுப்பின் போது இலங்கைக்கு எதிரான தீர்மானத்துக்கு ஆதரவாக 23 நாடுகளும், எதிராக 12 நாடுகளும் வாக்களித்தன. அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் உள்ளிட்டன தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்த நாடுகளில் முக்கியமானவை. தீர்மானத்திற்கு எதிராக பாகிஸ்தான், கியூபா உள்ளிட்ட நாடுகள் வாக்களித்தன. அத்தோடு, இந்தியா உள்ளிட்ட 12 நாடுகள் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை. 2013ஆம் ஆண்டு இலங்கைக்கு எதிரான தீர்மானத்துக்கு ஆதரவாக இந்தியா வாக்களித்திருந்தது சுட்டிக்காட்டத்தக்கது.
இலங்கையின் மனித உரிமை மீறல்கள் மற்றும் இறுதி மோதல்களின் போது இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பிலான பொறுப்பக்கூறல் உள்ளிட்ட விடயங்களை முன்னிறுத்தியும், சிறுபான்மையின மதங்கள், இனங்களுக்கிடையிலான தாக்குதல்களை சுட்டிக்காட்டியும், ஊடகவியலாளர்கள், மனித உரிமைச் செயற்பாட்டாளர்களின் சுதந்திரமான செயற்பாட்டுக்கு இருக்கின்ற இடையூறுகளை குறிப்பிட்டும் இலங்கைக்கு சர்வதேச விசாரணைப் பொறிமுறையொன்றுக்கு அடிகோலும் தீர்மானம் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளினால் முன்வைக்கப்பட்டது.
இலங்கைக்கு எதிரான குறித்த தீர்மானத்தை ஜெனீவாவுக்கான இலங்கையின் வதிவிடப்பிரதிநிதி ரவிநாத் ஆரியசிங்க முற்றாக நிராகரித்தார். இலங்கைக்கு எதிரான தீர்மானம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் 2012, 2013 ஆண்டுகளிலும் நிறைவேற்றப்பட்டிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.
0 Responses to ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் 11 மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றம்!