Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

மனிதாபிமானத்திற்கான போர் என்ற பெயரில் மானுடத்திற்கு எதிராக இலங்கை அரசால் முன்னெடுக்கப்பட்ட போர் முடிவுக்கு வந்து எதிர்வரும் மே மாதத்தோடு ஐந்து ஆண்டுகளை எட்டுகின்றது. ஆனாலும் அப்போரின் பின்னதான சம்பந்தப்பட்ட மனிதாபிமானப் பிரச்சினைகள் இன்னும் முடிவுக்கு வரவில்லை.

அப்பாவிப் பொதுமக்களிற்கு எதிராக மேற்கொள்ப்பட்ட பாரிய யுத்தக் குற்றமீறல்கள் தொடர்பில் சர்வதேச நாடுகள் முன்வைத்த யோசனைகள் சார்ந்த எந்தவொரு உள்நாட்டு விசாரணைகளையும் இலங்கை அரசதரப்பு இதுவரையும் மேற்கொள்ளவில்லை.

ஆண்டுதோறும் இலங்கையின் மனிதாபிமானப் பிரச்சினைகள் சம்பந்தமாக ஐக்கிய நாடுகளின் மனித உரிமைப் பேரவையில் அமெரிக்கா உள்ளிட்ட சர்வதேச நாடுகள் மனித உரிமை மீறல்களிற்கான பொறுப்புக்கூறலில் இலங்கை அரசாங்கம் கவனம் செலுத்தவேண்டும் என்பதனை வலியுறுத்தி வரும் நிலையில் இம்முறையும் இலங்கைக்கு எதிரான பிரேரணை ஒன்றினை அமெரிக்கா, பிரித்தானியா, மொண்டென்ரோ. மொரீசியஸ், மெசெடெனியா போன்ற நாடுகள் கூட்டாக இணைந்து சமர்ப்பித்துள்ளன.

இந்த பிரேரணை தொடர்பான விவாதம் கடந்த வெள்ளிக்கிழமை அன்று நடைபெற்றது. இதில் 200க்கும் அதிகமான நாடுகள் கலந்து கொண்டமையானது இலங்கை மனிதாபிமான விவகாரங்களில் சர்வதேசத்தின் அக்கறையினை வெளிப்படுத்தியுள்ளன.

ஆனாலும் தமிழ்மக்கள் உறுதியாகவுள்ள சர்வதேச விசாரணைப் பொறிமுறைக்கான முன்மொழிவுகள் தற்போது சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணையில் காணப்படவில்லை.

என்பதுடன் வழமை போலவே மீண்டும் உள்நாட்டு விசாரணையை கோருவது பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஏமாற்றம் தரும் நடவடிக்கையாக அமைந்துள்ளது.

இதில் கவனிக்கப்படவேண்டிய விடயம் யாதெனில், இலங்கையைப் பொறுத்தவரை உள்நாட்டு விசாரணைப் பொறிமுறை என்பது சாத்தியமற்ற ஒன்றாகும். ஏனெனில் இலங்கையின் நிதித்துறையினை நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியே கட்டுப்படுத்தி வைத்துள்ளார் என சர்வதேச மனித உரிமைகள் சார்ந்த அமைப்புக்கள் மீண்டும் மீண்டும் வலியுறுத்தி வருகின்றமை கவனிக்கத்தக்கதாகும்.

இந்நிலையிலேயே இம்முறை நடைபெறும் 25 ஆவது அமர்விலும் அமெரிக்கா முன்வைத்துள்ள யோசனையில்; உள்நாட்டு விசாரணையை வலியுறுத்துவது சம்பந்தமாக மீண்டும் கூறப்பட்டுள்ளது.

தற்பொழுது முன்வைக்கப்பட்டுள்ள தீர்மான வரைபைப் பலப்படுத்தவும் பலவீனப்படுத்தவும் அங்கத்துவ நாடுகளால் முடியும். அதற்கான சாத்தியப்பாடுகளை வெளியிலிருந்து அங்கத்துவ நாடுகளிடம் கோரவும் முடியும். ஆனால் இலங்கையானது தற்போது முன்வைக்கப்பட்டுள்ள யோசனையினை தோல்வியுறச் செய்வதற்கான முயற்சிகளில் தமக்கு ஆதரவினைத் தேடிக்கொள்ளும்.

என்னதான் இருப்பினும் இலங்கை என்ற இந்த சிறுநாட்டிற்குள் பெரும்பான்மை இனத்தவருக்கும் சிறுபான்மை இனத்தவருக்குமான நிரந்தர மனிதாபிமானமுள்ள தீர்வானது இன்னமும் மிகப்பெரிய பிரச்சினையாகவே இருந்து வருகின்றது.

தமிழ் மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதாக அவ்வப்போது அறிவித்துவரும் அரசாங்கம் திட்டமிட்டு சிங்களக் குடியேற்றங்களை தமிழர் பகுதிகளில் மேற்கொண்டு தமிழ் மக்களின் இனவிகிதாசாரத்தைக் குறைக்கும் நோக்கத்தோடு செயற்பட்டு வருகின்றது.

இராணுவத்தினர்க்கான திட்டமிட்ட ஆட்சேர்ப்பில் தமிழ் யுவதிகள் மட்டும் வலிந்து இணைத்துக் கொள்ளப்படுவதுடன் அவர்களின் இனப்பெருக்கத்திற்கான உயிரியல் சக்தியை வலுவிழக்கச் செய்யும் மறைமுக நகர்வுகளையும் அரசு செய்து வருவதாக வடக்கு மாகாண முதலமைச்சர் அண்மையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

இறுதிப் போர் நடைபெற்ற காலப்பகுதியில் இராணுவத்தினர் பொதுமக்கள் செறிந்து வாழ்ந்த பகுதிகளில் பாரிய வெடிகுண்டுகளைப் பயன்படுத்தி தாக்குதல்களை நடாத்தி கொத்துக் கொத்தாகப் பொதுமக்களைப் படுகொலை செய்தார்கள் எனப் பல உள்நாட்டுத் தொண்டு நிறுவனங்களின் ஊழியர்களும் சாட்சியமளித்துள்ளனர்.

சரணடைந்த போராளிகள், பொதுமக்கள் பலரையும் விடுதலைப் புலிகள் என்ற பார்வையில் சுட்டுப் படுகொலை செய்ததோடு பெண்களுக்கெதிரான பாலியல் வன்கொடுமைகளையும் புரிந்துள்ளதாக நம்பத்தகுந்த ஆதாரங்கள் குறிப்பிடுகின்றன.

இந்நிலையில்தான் சனல் - 04 இன் ஆவணப்பட இயக்குனர் கெல்லும் மக்ரே அவர்கள் சரணடைந்த பெண் போராளிகளது உடலினை நிர்வாணப்படுத்தி விட்டு அவர்களின் இறந்த உடல்கள் மீது பாலியல் கொடுமைகளைப் புரிகின்ற ஆதாரங்கள் தனக்குக் கிடைத்துள்ளன என்று சனல் - 04 அந்தக் காணொளி ஆதாரத்தினையும் வெளியிட்டுள்ளது.

இந்நிலையில் சர்வதேச விசாரணைக்கு வலியுறுத்தப்படும் எனப் பிரித்தானியா உறுதியாகக் கூறிவரும் நிலையில் பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன் அவர்களும் இலங்கைக்கு எதிரான நீதியானதும் நியாயமானதுமான சர்வதேச விசாரணையொன்று நடாத்தப்பட வேண்டும் என்ற தனது தனிப்பட்ட கோரிக்கையினையும் முன்வைத்துள்ளார்.

உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்து ஐந்து ஆண்டுகளை எட்டியுள்ள நிலையிலும் இலங்கையில் தமிழ் மக்களிற்கான  நீதயான தீர்வுகள் கிடைக்கப் பெறவில்லை. மானுடத்திற்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட மிகப்பெரிய மனித உரிமை மீறல்களிற்கு காத்திரமான பொறுப்புக் கூறலை மேற்கொள்ளாமல் இலங்கை அரசாங்கம் காலத்தை இழுத்தடிப்புச் செய்துவரும் நிலையில் தான் அமெரிக்கா முன்வைத்துள்ள யோசனை தொடர்பில் விவாதிக்கும் இலங்கைக்கு ஆதரவான நாடுகள் ‘இலங்கை அரசாங்கத்திற்குப் போதுமான கால அவகாசம் இன்னும் வழங்கப்பட வேண்டும்” என வலியுறுத்தி வருகின்றன.

ஆக இம்முறை முன்வைத்துள்ள யோசனை தொடர்பிலும் தமிழ் மக்கள் தமது நம்பிக்கையினை இழந்துள்ள நிலையில் அவர்களின் உறுதியான நிலைப்பாடாக உள்ள சர்வதேச விசாரணைப் பொறிமுறையை வலியுறுத்தும் சந்தர்ப்பம் கொண்டு வரப்படுவதாக இம்முறை யோசனையினை வலுவாக்கிக் கொள்ள அங்கத்துவ நாடுகள் முன்வர வேண்டும் என்ற கோரிக்கையினை தமிழ் மக்கள் சார்பாக உரிமையுடன் முன்வைக்கின்றோம்.

skomesh89@gmail.com

0 Responses to இம்முறையும் ஏமாற்றிவிடாதே சர்வதேசமே...!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com