Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஏன் இந்தக் கைதுகள்?

பதிந்தவர்: தம்பியன் 16 March 2014

கிளிநொச்சி தருமபுரத்தில் வைத்து இராணுவச்சுற்றி வளைப்பில் கைது செய்யப்பட்ட ஜெயகுமாரி பாலேந்திரன் மற்றும் சிறுமி விபூசிகா பாலேந்திரன் பற்றி இன்றைய (மார்ச் 16, 2014) ஞாயிறு தினக்குரலின் ஆசிரியர் தலையங்கம் பேசியிருக்கிறது.

ஏன் இந்தக் கைதுகள்?

கிளிநொச்சியில் இடம்பெற்ற இரண்டு கைதுகள் இன்று சர்வதேச கவனத்தைப் பெற்றிருக்கின்றது. ஜெனீவாவில் நடைபெறும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடரிலும் அது எதிரொலித்திருக்கின்றது. தமிழ்க் கட்சிகள் மற்றும் மனித உரிமை அமைப்புக்களின் கடுமையான கண்டனத்தைப் பெற்றுக்கொண்டிருப்பதுடன், தமிழர்கள் மத்தியில் பெரும் உணர்ச்சிக்கொந்தளிப்பையும் ஏற்படுத்தியிருக்கின்றது. இலங்கையின் மனித உரிமைகள் நிலை குறித்து ஏற்கனவே உள்ள கரும்புள்ளியை இது மேலும் பெரிதாக்கியிருக்கின்றது. வடபகுதியில் இச்சம்பவம் பதற்றநிலையையும், அச்சத்தையும் தீவிரப்படுத்தியுள்ளது. இந்தக் கைதுகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து வவுனியாவில் ஆர்ப்பாட்டப் பேரணி ஒன்றும் இடம்பெற்றிருக்கின்றது.

கிளிநொச்சி தர்மபுரம் பகுதியில் வைத்து வியாழக்கிழமை கைது செய்யப்பட்ட ஜெயகுமாரி மூன்று மாத தடுப்புக்காவல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு பூசா முகாமுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அவரது மகள் விபூசிகா சிறுவர் நன்னடத்தைப் பிரிவு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். கிளிநொச்சியிலுள்ள இவர்களுடைய வீட்டை வியாழக்கிழமை பெருமெடுப்பில் சுற்றிவளைத்த படையினரே இவர்கள் இருவரையும் கைது செய்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதனையடுத்து வெள்ளிக்கிழமை இரவு நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்ட பின்னரே தாயார் பூசா முகாமுக்கும், மகள் சிறுவர் நன்னடைத்தைப் பிரிவுக்கும் அனுப்பப்பட்டுள்ளனர்.

தாயும், மகளும் கைது செய்யப்பட்டமையை நியாயப்படுத்தும் வகையிலான தகவலை பொலிஸார் வெளியிட்டிருக்கின்றார்கள். குற்றவாளி ஒருவரைத் தேடிச் சென்றபோது, குறிப்பிட்ட நபர் பொலிஸார் மீது துப்பாக்கிப் பிரயோகத்தைச் செய்துவிட்டு தப்பிச் சென்றதாக பொலிஸ் தரப்புத் தகவல்கள் கூறுகின்றன. இதன் போது பொலிஸ் அதிகாரி ஒருவர் காயமடைந்ததாகவும் சொல்லப்படுகின்றது. பொலிஸாரால் தேடப்படும் ஒருவரை தமது வீட்டில் மறைத்து வைத்திருந்தமைக்காகவே ஜெயகுமாரி கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தகவல் வெளியிட்டிருக்கின்றார்கள். ஆனால், ஒருவர் கைது செய்யப்படும் போது அவர்களுடைய நெருங்கிய உறவினர்களுக்கு அது குறித்துத் தெரிவிக்கப்பட வேண்டும் என்ற நடைமுறை இங்கு பின்பற்றப்படவில்லை.

தாயும் மகளும் கைதுசெய்யப்பட்டதைத் தொடர்ந்து அவர்கள் தங்கியிருந்த வீடு மூடப்பட்டு சீல் வைக்கப்பட்டுள்ளது. இச்சம்பத்தையடுத்து நிலைமைகளை நேரில் பார்வையிடுவதற்காகச் சென்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா, அங்கு பதற்றமும் அச்சமும் காணப்படுவதாகத் தெரிவித்திருக்கின்றார். இங்கு இடம்பெற்ற சம்பவத்துக்கும் கைது செய்யப்பட்டவர்களுக்கும் இடையில் எந்தவிதமான சம்பந்தமும் இல்லை எனவும், குற்றமற்ற தாயும், மகளும் விடுதலை செய்யப்பட வேண்டும் எனவும் மாவை சேனாதிராஜா ஊடகங்களுக்குத் தெரிவித்தார். இந்தக் கைதுகளின் பின்னணி குறித்தும் பலத்த சந்தேகத்தை அவர் கிளப்பியிருக்கின்றார்.

தாயும் மகளும் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருப்பதற்கு பல காரணங்கள் உள்ளன. வீடொன்றில் தனித்திருந்த இவர்கள், அதாவது இரு பெண்கள் பெருமெடுப்பிலான இராணுவச் சுற்றிவளைப்பில் கைது செய்யப்பட்டமை முதலாவது காரணம். போரினால் தமது உறவுகளை இழந்து தவிப்பவர்களின் பிரதிநிதிகளாக இவர்கள் உள்ளார்கள் என்பது இரண்டாவது காரணம். கைது செய்யப்பட்ட ஜெயகுமாரியின் மகன் இறுதிப் போரின்போது காணாமற்போனவர். காணாமற்போனவர்கள் தொடர்பாக வடக்கில் நடைபெற்ற போராட்டங்கள் பலவற்றில் தாயும் மகளும் பங்குகொண்டிருக்கின்றார்கள். இந்தக் கைதுகள் சர்வதேசத்தின் கவனத்தை உடனடியாகப் பெற்றுக்கொண்டமைக்கு இவைதான் பிரதான காரணங்கள். அதேவேளையில, அரசுக்கு எதிரான போராட்டங்களில் பங்குகொண்டமைக்குப் பழிவாங்குவதற்காக அல்லது ஆதாரங்களை அழிப்பதற்காக இந்தக் கைதுகள் இடம்பெற்றிருக்கலாம் என தமிழ்த் தரப்பினர் தெரிவிக்கும் குற்றச்சாட்டுக்கள் கவனிக்கப்பட வேண்டியவை.

தாயும் மகளும் கைது செய்யப்பட்டமைக்கு பொலிஸார் என்னதான் காரணங்களைச் சொன்னாலும், பதிலளிக்கப்பட வேண்டிய பல கேள்விகள் உள்ளன. போர் முடிவடைந்த பின்னர் பெருந்தொகையான படையினர் குவிக்கப்பட்டு தேடுதல் நடத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வடக்கில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதில் இராணுவம் தொடர்ந்தும் ஈடுபடுத்தப்பட்டுள்ளதா என்ற கேள்வியை இது எழுப்புகின்றது. இராணுவக் குறைப்பு, பாதுகாப்பு நடவடிக்கைகளில் பொலிஸாரையே ஈடுபடுத்துவது என்ற வாக்குறுதிகள் எழுத்தில் மட்டும்தானா? கைது செய்யப்பட்ட பெண் பூசா முகாமுக்கு அனுப்பப்பட்டுள்ளார். தடுப்பு முகாமுக்கு அனுப்பப்படுவதற்கு முன்னர் சட்டத்தரணி ஒருவரைச் சந்திப்பதற்கு அவருக்கு சந்தர்ப்பம் கொடுக்கப்பட்டதா? அதேவேளையில், பெண் ஒருவரைக் கைது செய்து தடுத்துவைக்கும் போது கையாளப்பட வேண்டிய நடைமுறைகள் பின்பற்றப்பட்டதா? இவை பதிலளிக்கப்படாத கேள்விகளாகவே உள்ளன.

போர் முடிவுக்கு வந்தபின்னர் நீண்டகாலமாக நடைமுறைப்படுத்தப்பட்ட அவசரகாச் சட்டம் நீக்கப்பட்டது. ஆனால், பயங்கரவாதத் தடைச் சட்டம் தொடர்ந்தும் நடைமுறைப்படுத்தப்படுகின்றது. சர்வதேச ரீதியாக மனித உரிமை அமைப்புக்களின் கண்டனங்களைப் பெற்றுக்கொண்டுள்ள நிலையிலேயே பயங்கரவாதத் தடைச் சட்டம் இன்றும் நடைமுறைப்படுத்தப்படுகின்றது. போர் முடிவுக்கு வந்து ஐந்து வருடங்கள் சென்றுள்ள நிலையில் மனித உரிமைகளை மோசமாக மீறும் இது போன்ற சட்டங்கள் அவசியம்தானா என்ற கேள்வியும் எழுகின்றது. பயங்கரவாதத் தடைச் சட்டத்தை தொடர்ந்தும் நடைமுறைப்படுத்துவதை அரசாங்கம் நியாயப்படுத்தியே வருகின்றது.

இப்போது ஜெயகுமாரியையும், மகளையும் கைது செய்வதற்கும் இந்தச் சட்டம் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. குற்றச்செயல்களில் சம்பந்தப்பட்டவர்கள் அதற்கு துணை போனவர்களை கைது செய்வதோ விசாரணைக்கு உட்படுத்துவதையே யாரும் விமர்சிக்க முடியாது. அதனைத் தவறு எனவும் சொல்ல முடியாது. ஆனால், அவ்வாறான கைதுகள் உரிய நடைமுறைகளின்படி மேற்கொள்ளப்பட வேண்டும். ஆனால், கிளிநொச்சியில் தாயும் மகளும் கைது செய்யப்பட்டமை தொடர்பில் தெரிவிக்கப்படும் சந்தேகங்கள் புறக்கணித்துவிடக் கூடியவையல்ல. இது தொடர்பில் தெளிவான விளக்கத்தை அரசு கொடுப்பது அவசியம்!

நன்றி: தினக்குரல்

0 Responses to ஏன் இந்தக் கைதுகள்?

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com