Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

பாராளுமன்ற தேர்தலையொட்டி சென்னையில் தலை மறைவாக உள்ள ரவுடிகளை கைது செய்ய கமிஷனர் ஜார்ஜ் உத்தரவிட்டுள்ளார். மத்திய குற்றப்பிரிவு கூடுதல் கமிஷனர் நல்லசிவம் மேற்பார்வையில் துணை கமிஷனர் ஜெயக்குமார் தலைமையிலான ரவுடி ஒழிப்பு தனிப்படையினர் தீவிர தேடுதலில் ஈடுபட்டு வருகிறார்கள்.

நேற்று இரவு இன்ஸ்பெக்டர்கள் சிவராம் குமார், சபாபதி, ஸ்டீபன் மற்றும் போலீசார் அம்பத்தூர் ராக்கி தியேட்டர் அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். சொகுசு காரை நிறுத்தி சோதனை செய்த போது அதில் இருந்த வாலிபரிடம் துப்பாக்கி இருப்பது தெரிந்தது. மேலும் காரில் பயங்கர ஆயுதங்களும் இருந்தன.

விசாரணையில் அவன் பிரபல ரவுடி மதுரையை சேர்ந்த ‘டாக்’ ரவி என்ற ரவிக்குமார் என்று தெரிந்து அவனை போலீசார் துப்பாக்கி முனையில் கைது செய்தனர்.

பறிமுதல் செய்யப்பட்ட அவனது கைத்துப்பாக்கி அமெரிக்கா தயாரிப்பு ஆகும். இது எப்படி அவனுக்கு கிடைத்தது என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கைதான ‘டாக்’ ரவி மீது திண்டுக்கல் மாவட்டத்தில் 4 கொலை வழக்கு உள்பட 25 வழக்குகள் உள்ளன. கடந்த 2004–ம் ஆண்டு ஆலடி அருணா கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியாக கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மதுரையில் வெளிநாட்டு நாய்களுக்கு பயிற்சி அளிப்பவராகவும் மற்றும் நாய் வளர்ப்பு வியாபாரம் செய்து வந்ததால் அவனுக்கு ‘டாக்’ ரவி என்ற பெயர் வந்தது. 2000–ம் ஆண்டு மதுரை வரிச்சியூர் செல்வத்தின் தம்பி இளங்கோ கொலை வழக்கு, 1999–ம் ஆண்டு ரவுடி திண்டுக்கல் பாண்டியன் தம்பி நாகராஜ் கொலை வழக்குகள் உள்ளன.

பிரபல ரவுடிகள் மணல் மேடு சங்கர், தென்றல் மோகன், மதுரையை சேர்ந்த அப்பளம் ராஜா, காக்குவீரன் ஆகியோருடன் அவனுக்கு நெருங்கிய தொடர்பு உள்ளது.

சில மாதங்களுக்கு வரிச்சியூர் இளங்கோ கொலைக்கு பழிவாங்க அவரது அண்ணன் அழகர் மற்றும் கூட்டாளிகள் டாக் ரவியை தீர்த்து கட்ட அரும்பாக்கத்தில் தங்கி இருந்த போது போலீசார் கைது செய்தனர்.

தென் மாவட்டங்களில் எதிரிகள் அதிகமானதால் ‘டாக்’ ரவி தலைமறைவாக சென்னையில் பதுங்கி இருந்தான். எதிரிகளிடம் இருந்து தப்பிக்க துப்பாக்கி, பயங்கர ஆயுதங்களுடன் அவன் சுற்றி வந்தது தெரிந்தது.

பறிமுதல் செய்யப்பட்ட அமெரிக்க தயாரிப்பு துப்பாக்கியை கமிஷனர் அலுவலகத்தில் இன்று கமிஷனர் ஜார்ஜ் பார்வையிட்டார். மேலும் தலைமறைவாக உள்ள ரவுடிகளை பிடிக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக போலீசார் தெரிவித்தனர்.

படம்: அசோக்
நக்கீரன்


0 Responses to பிரபல ரவுடி ’டாக்’ரவி அம்பத்தூரில் துப்பாக்கியுடன் கைது! (படம் இணைப்பு)

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com