Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

மஹிந்த ராஜபக்ஷவும், இந்தியாவின் புதிய பிரதமரான நரேந்திர மோடியும் ஒரேமாதிரியான சிந்தனைப் போக்குடையவர்கள். இதனால், இரு நாடுகளுக்கும் சாதகமான பல திட்டங்களை முன்னெடுக்கவும், இராஜதந்திர உறவுகளை மேலும் வலுப்படுத்தவும் முடியும் என்று இலங்கை அரசாங்கத்தின் பேச்சாளரும், ஊடகத்துறை அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.

இந்திய பாராளுமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதாக் கட்சி பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியமைத்தி ருப்பதால் அந்த அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுவது இலகுவானது. கூட்டணிக் கட்சிகளில் தங்கியிருக்கும் நிலை காணப்பட்டால் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண்பதிலும், முடிவுகள் எடுப்பதிலும் நெருக்கடிநிலை ஏற்படும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு பேசும் போதே அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

கடந்த காலத்தில், தமிழ்நாடு அரசு, இலங்கை தொடர்பான விவகாரங்களில் இந்திய மத்திய அரசாங்கத்துக்குப் பல்வேறு அழுத்தங்களைக் கொடுத்தது. இம்முறை தேர்தலில் ஜெயலலிதா ஜெயராமின் கட்சி தமிழ்நாட்டில் கூடுதல் ஆசனங்களைப் பெற்றாலும் மத்திய அரசாங்கம் அவர்களின் ஆதரவில் தங்கியிருக்கவில்லை. நரேந்திர மோடி அனைவரையும் அரவணைத்துச் செல்லக்கூடிய ஒருவர். அதனால் சகல கூட்டுக் கட்சிகளுடனும் அனுசரித்து செயற்படுவார். நரேந்திர மோடி தேர்தலில் வெற்றிபெற்றவுடன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே முதன் முதலில் அவருக்கு வாழ்த்துத் தெரிவித்ததோடு, இலங்கைக்கு வருமாறு அழைப்பும் விடுத்தார் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினதும், இந்திய புதிய பிரதமர் மோடியினதும் அரசியல் வாழ்வை நோக்கினால் இருவரின் வாழ்விலும் பல்வேறு ஒற்றுமைகள் காணப்படுகின்றன. இருவருக்குமிடையில் தொடர்புகள் மற்றும் நெருக்கங்கள் காணப்படுகின்றன. இருவரும் ஒரே மாதிரியான சிந்தனைப்போக்கை உடையவர்கள். இலங்கைக்கும் இந்தியாவுக்கு மிடையில் வரலாற்று காலந்தொட்டு நெருங்கிய உறவு காணப்படுகிறது. காலத்துக்குக் காலம் இரு நாடுகளின் உறவில் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. ஒரு காலகட்டத்தில் இந்தியாவுக்கு எதிராக புத்தகங்கள் கூட இங்கு வெளி யிடப்பட்டன. மற்றொரு காலப்பகுதியில் இந்தியா எமது மிக நெருங்கிய நட்பு நாடாகக் கருதப்பட்டது. அரசியல் கொள்கை மாற்றங்களின்போது சில மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. புதிதாக ஆட்சிக்கு வந்துள்ள பாரதிய ஜனதாக் கட்சியுடன் பிரிக்கப்படாத கொள்கையுடன் போதுமானளவு உறவுகளை வலுப்படுத்த முடியுமென நம்புகிறோம். இருநாட்டுத் தலைவர்களுக்குமிடையில் பல ஒற்றுமைகள் காணப்படுவதால் சாதகமான நடவடிக்கைகளில் ஈடுபடவும், இராஜதந்திர உறவுகளை மேலும் பலப்படுத்தவும் முடியும் என்று கெஹலிய ரம்புக்வெல மேலும் தெரிவித்துள்ளார்.

0 Responses to மஹிந்தவும், மோடியும் ஒரே சிந்தனைப் போக்குள்ளவர்கள்; இணைந்து செயற்படுவார்கள்: இலங்கை அரசாங்கம்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com