Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான பெரும்பான்மை இனவாத அரசாங்கத்தைத் தோற்கடிப்பதற்காக எதிர்க்கட்சிகளுடன் இணைந்து பொதுத் தேர்தலைச் சந்திப்பதற்கும், பொதுவேட்பாளரை நிறுத்துவதற்கும் தாம் தயாராக இருப்பதாக ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் மேற்கிலும், மலையகத்திலும், வடக்கிலும், கிழக்கிலும் வாழும் எமது மக்களை அடக்கி, ஒடுக்கி, சுரண்டி தன் பெரும்பான்மை இனவாத, மதவாத, திருட்டு அரசியல் பயணத்தை மேற்கொள்கிறது. இந்த பயணத்துக்கு எதிராகத்தான் நாம் இன்று உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் போராடுகிறோம். இன்று எமது இணைந்த போராட்டம் வெற்றியளிக்க ஆரம்பித்துவிட்டது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜனநாயக மக்கள் முன்னணியின் மேதினக் கூட்டம் கொழும்பு ஜிந்துப்பிட்டி மைதானத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்றது. அதில், தலைமையுரையாற்றிய போதே மனோ கணேசன் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

எதிர்கட்சிகள் தூங்கும்போது தேர்தலை நடத்தி தங்கள் பேரினவாத பயணத்தை தொடரலாம் என மஹிந்த அரசாங்கம் கனவு காண்கிறது. அது கெட்ட கனவு. இந்த கனவுக்கு அரசாங்கத்திற்கு துதி பாடும் நம்மவர்களும் துணை நிற்கிறார்கள். இவர்கள் அனைவரின் கனவுகளும் கலையும் காலம் வந்து கொண்டிருக்கின்றது. நாங்கள் தூங்கவில்லை. நாங்கள் விழித்துக்கொண்டுதான் கனவு காண்கிறோம். பொது வேட்பாளர் தொடர்பாகவும், பொது தேர்தல் தொடர்பாகவும் நம்மிடையே பேச்சுவார்த்தைகள் நடைபெறுகின்றன. நாங்கள் பொது வேட்பாளருக்கும் தயார். பொது தேர்தலுக்கும் தயார். பொது தேர்தலில் தனித்தும் தயார். கூட்டணிக்கும் தயார். அவசியமானால் வடக்கு, கிழக்கு, மலையகம், மேற்கு இணைந்த அகில இலங்கை தமிழ் தேசிய கூட்டணி யோசனை பற்றி தமிழ் தேசிய கூட்டமைப்புடன் பரிசீலிக்கவும் தயார் என்று அவர் கூறியுள்ளார்.

மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம் இப்போது இறுதி கட்டத்தில் உள்ளது. இந்த அரசில் இருந்து வெளியேறி இந்த அரசின் முடிவை துரிதப்படுத்தும்படி, இதன் உள்ளே இருக்கும் சிறுபான்மை கட்சிகளை கோருகிறேன். கடந்த மேல் மாகாண சபை, தென் மாகாண சபை தேர்தல்களில் இந்த அரசுக்கு இரண்டரை இலட்சம் வாக்குகள் குறைந்துள்ளன. இதனால் மகிந்த ராஜபக்ஷ ஆடிப்போயுள்ளார். படிப்படியாக தனது செல்வாக்கு சிங்கள மக்கள் மத்தியில் குறைந்து வருவதை அவர் புரிந்து கொண்டுள்ளார். இதனால்தான், இடைதேர்தலை உடன் நடத்தி தன்னை திடப்படுத்தி கொள்ள அவர் முடிவு செய்துள்ளார். ஆனால் அரசின் பயணம் இன்று எந்த பக்கம் திரும்புவது என வழி தெரியாமல் முச்சந்தியில் விழி பிதுங்கி நிற்கிறது. ஜனாதிபதி தேர்தலா அல்லது பாராளுமன்றத் தேர்தலா என இரண்டையும் பற்றி அரசாங்கம் பேசி வருகிறது என்று அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

0 Responses to இனவாத அரசினைத் தோற்கடிப்பதற்காக பொதுத் தேர்தலுக்கும், பொது வேட்பாளருக்கும் தயார்: மனோ கணேசன்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com