Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தமிழர்களுடைய பாதுகாப்பான  சுதந்திரமான, கௌரவமான வாழ்வுக்காக தமது உயிரை அர்ப்பணித்து தியாகங்களை செய்த  உறவுகளை   போற்றி நினைவு கூறும் வண்ணம் உலகெங்கும் பரந்து வாழும் தமிழ் மக்களால் தமிழின அழிப்பு நாள் முன்னேற்பாடுகள் உணர்வுபூர்வமாகவும்  எழுச்சிபூர்வமாகவும்  நடைபெற்று வருகின்றது.

அந்த வகையில் எமது தாயகத்தில் அமைந்திருந்த எமது மாவீரர்களது கல்லறைகளை சிங்கள பேரினவாதம் அழித்து, சிதைத்த நிலையிலும் துணிவுடன் தாயகத்தில் வாழும் மாணவ சமூகத்தால் முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பு நாளை அனுஸ்டிக்கப்பட இருக்கும் வேளையில்   சிங்கள பேரினவாத அரசு யாழ்.பல்கலைக்கழகம் எதிர்வரும் 16 ஆம் திகதியிலிருந்து 20 ஆம் திகதி வரை இடைநிறுத்தப்படுவதாகவும் கல்விச் செயற்பாடுகள் இடம்பெறாது என்றும் தெரிவித்திருக்கின்றது .

இருப்பினும் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் ஆசிரியர்கள் ஊழியர்கள் மாணவர்களுக்கு எதிராக விடுக்கப்படும் இனந்தெரியாதவர்களின் அச்சுறுத்தலைக் கண்டித்து யாழ்ப்பாணம் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் ஏற்பாட்டில் அமைதியான கண்டன ஊர்வலம் பல்கலைக்கழக வளாகத்தினுள் நடைபெற்றது தாயக மக்களின் உரிமைக்கான அரசியல் அவாவின் குறியீட்டையே  தெரிவிக்கின்றது .

பல்கலைக்கழக ஆசிரியர்கள், விரிவுரையாளர்கள், மாணவர்கள், ஊழியர்கள் சட்டத்திற்கு புறம்பாக எத்தகைய குற்றச் செயல்களையும் செய்யாதபோது  இனந்தெரியாதவர்கள் என்ற போர்வையில் சிங்கள பேரினவாத அரசு அவர்கள்  மீது அச்சுறுத்தல்களை தொடர்ந்து விடுகின்றது .

ஈழத்தமிழர்களின் உரிமைப் போராட்டத்துக்கு ஆணிவேராக விளங்கும் தமிழ் மாணவ சமூகத்தின் உணர்வுகளை அடக்கும் பொருட்டும் அவர்களின் எழுச்சியை சிதறடிக்கும் வகையிலுமே சிங்கள பேரினவாத அரசின் இச்செயற்பாடு அமைகின்றது .

 இவ்வாறான சூழலில் சிங்கள இன அரசின் இனஅழிப்புக்கு, யாழ் பல்கலைக் கழகத்தில் அதிஉயர் பதவியிலுள்ள ஒருவரும் துணைபோவது எமக்கு வேதனையை அழிப்பதோடு, அதனை நாம் வன்மையாக கண்டிக்கிறோம். தமிழர் தேசத்துக்கு எதிரான இந்த செயற்பாடு, கடந்த கால அர்ப்பணிப்புகளை கவனத்திற்கொள்ளாதது மட்டுமல்ல, தேசிய உணர்வையும் தமிழர் தேச அரசியலையும் இதயத்தில் சுமந்து செயற்படும் பல்கலைக் கழக சமுகத்தின் அபிலாசைகளுக்கு முரண்பாடான ஒரு செயல் என்பதை வெளிப்படுத்துவதோடு, சுதந்திர தேசத்தின் நிர்மாணத்திற்காய் அர்ப்பணிப்புடனும் இதய சுத்தியுடனும் செயற்படும் அனைவருக்கும் நாம் பக்கபலமாக இருப்போம் என்பதை இத் தருணத்தில் உறுதிபட தெரிவிக்கிறோம்.


தமிழீழ விடுதலைப் போராட்டத்தை அழித்து நசிக்கி விட்டோம் என மார்த்தட்டிக் கொள்ளும் சிங்கள பேரினவாதத்தால் தாயகத்தில் வாழும் எமது மாணவர்களின்  எழுச்சியைக் கண்டு பொறுக்க முடியாமல் அவர்களை தாக்கியும் சிறையில் அடைத்தும் கொலையும் செய்தது யாவரும் அறிந்ததே . மேலும் எமது சகோதரிகளை இழிவுப்படுத்தி அவர்களை அவமதிக்கும்  செயல்களிலும் சிங்கள பேரினவாதம் ஈடுபட்டுள்ளது. தமிழின அழிப்பு  மற்றும் தமிழ் மக்கள் மீது அடக்குமுறைகளை மேற்கொண்டு வருகின்ற சிங்கள பேரினவாத அரசு தமிழர்களின் கண்ணான கல்வியிலும் தன்னுடைய இனத்துவேசத்தை மீண்டும் காட்டி தமிழ் மாணவர்களை தொடர்ச்சியான அடக்குமுறையில் வைத்திருக்கின்றதையே சர்வதேசத்துக்கு எடுத்துக்காட்டுகின்றது. சிங்கள பேரினவாத அரசின் தொடர்ச்சியான வன்முறையை நாம் வன்மையாகக் கண்டிப்பதோடு எமது தாயக மாணவர்களின் குரல்களாக நாம் சர்வதேசத்தில் ஒலித்துக்கொண்டே இருப்போம் என்பதை எமது உறவுகளுக்கு இவ்வேளையில் உறுதி அளிக்கின்றோம்.

இவ்வாறான சம்பவங்கள் எதிர்காலத்தில் நடைபெறாமல் இருக்க சர்வதேச நாடுகள் இலங்கை அரசை கண்டிக்க வேண்டும், தன்னை சனநாயக நாடென சர்வதேச அரங்கில் கூறுகின்ற இலங்கை அரசு தமிழர்களுடைய உணர்வை என்றும் மதிப்பதில்லை என்பதை இவ் அறிக்கையூடாக நாம் சர்வதேச நாடுகளுக்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.

சம நேரத்தில் தாயக அரசியல் தலைவர்களுக்கும் , மக்கள் பிரதிநிதிகளுக்கும் , சிவில் சமூகத்தினருக்கும் எமது அன்பான வேண்டுகோளை இங்கே முன்வைக்கின்றோம்  . எமது சுதந்திர உரிமைப் போராட்டத்துக்கு முதுகெலும்பாக விளங்கும் யாழ் பல்கலைகழக மாணவ சமூகத்தினருக்கு அனைவரும் பக்கபலமாக இருக்கும் வகையிலும் அவர்களின் போராட்டத்துக்கு உந்துசக்தியாக விளங்கும் வகையிலும் மென்போக்கு அரசியல் நிலைப்பாட்டில் மாற்றம் கண்டு வெறுமனே அறிக்கை அரசியலை தவிர்த்து மாணவர்களுடன் தோளோடு தோள் நின்று கரம் பிடித்து போராட வேண்டும் எனும் நிலைப்பாடை எடுக்க வேண்டும் என்று உரிமையோடு வேண்டுகின்றோம் .

அன்பான புலம்பெயர் வாழ் தமிழீழ உறவுகளே, தாயகத்தில் சிங்கள படைகளின் கட்டுப்பாட்டுக்குள் வாழும் எமது மக்கள் துணிந்து செயற்படுகையில், பாதுகாப்பான நாடுகளில் வாழும் நாம் தமிழீழ விடுதலைப் பணியை முன்னெடுத்து செல்ல முனைப்போடு செயற்படவேண்டும் .எமது தாயக மாணவ சமூகத்துக்கும் உறவுகளுக்கும்  நாம் என்றும் பாதுகாப்பு அரணாக இருப்போம் என்றும் எமது தேசத்தை மீட்டு பாதுகாப்பாக நாம் வாழ ஒன்றிணைந்து செயற்பட வேண்டியது காலத்தின் கட்டாயம் என்பதை உணர்ந்து, வீறுகொண்டு செயற்படுவோம் என்றும் மீண்டும் உறுதியெடுப்போம் .

தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்!

அனைத்துலக ஈழத்தமிழர் மக்கள் அவை(ICET)

கனடியத் தமிழர் தேசிய அவை
நோர்வே ஈழத்தமிழர்  அவை                          
 டெனிஸ் தமிழ் அமைப்புக்களின் ஒன்றியம்                                                  
தமிழீழ மக்கள் பேரவை – பிரான்சு                                                    
இத்தாலி ஈழத்தமிழர் மக்களவை                                                    
நெதர்லாண்ட் ஈழத்தமிழர்பேரவை                                                         
சுவிஸ் ஈழத்தமிழரவை                                                                    
யேர்மன் ஈழத்தமிழர் மக்கள் அவை                                           
தமிழர் பண்பாட்டு கழகம் - பெல்ஜியம்
நியூசீலாந்து தமிழர் தேசிய அவை
மொரிஷியஸ் தமிழ்க் கோயில்களின் கூட்டமைப்பு

0 Responses to எமது அன்பிற்கும் மதிப்பிற்குமுரிய தமிழீழ மாணவ சமூகத்துக்கும் மற்றும் உறவுகளுக்கும்...

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com