Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஜாமீன் கோரியும், தண்டனை ரத்து கோரியும் ஜெயலலிதா தாக்கல் செய்த மனுவை, அக்டோபர் 6-ம் தேதிக்கு ஒத்திவைத்து, கர்நாடக உயர் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

இந்த மனு மீது ஜெயலலிதாவுக்காக வாதாடுவதற்கு, மூத்த வழக்கறிஞர் ராம்ஜெத் மலானி ஆஜாராகி இருந்தார்.

ஜெயலலிதா உட்பட நால்வரின் ஜாமீன் மனுவை கர்நாடக உயர் நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது. விசாரணையின்போது, அரசு தரப்பு வழக்கறிஞர் பவானி சிங் கால அவகாசம் கேட்டார்.

இந்த வழக்கில் தொடர்ந்து ஆஜராவதற்கு கர்நாடக அரசு இன்னும் அனுமதி தரவில்லை என்றும், அதுதொடர்பான அறிவிப்பாணை வரும் வரை விசாரணையை தள்ளிவைக்க வேண்டும் என்றும் பவானி சிங் எடுத்துரைத்தார்.

இதனையடுத்து, வழக்கு விசாரணையை அக்டோபர் 6-ம் தேதிக்கு ஒத்திவைத்து கர்நாடக உயர் நீதிமன்றம் நீதிபதி ரத்னகலா உத்தரவிட்டார்.

மேலும், அரசு தரப்பில் பதில் அளிக்க நீதிபதி உத்தரவிட்டதால், அந்தப் பதிலின் அடிப்படையில் ஜாமீன் வழங்குவது குறித்து தீர்மானிக்கப்படும் எனத் தெரிகிறது.

ராம் ஜெத்மலானி வாதிட்டது என்ன?

ஜெயலலிதா தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி, “உடனடியாக ஜாமீன் அளிக்கலாம், ஏனெனில் சிறைத் தண்டனை 10 ஆண்டுகளாக இல்லை என்பதால் ஜாமீன் பெற உரிமை இருக்கிறது” என்று வாதாடினார்.

மனுவை விசாரித்த நீதிபதி ரத்னகலா, “அரசு தரப்பு வாதங்களைக் கேட்காமல் ஜாமீன் மனுவை உடனடியாக பரிசீலிக்க இயலாது” என்று வழக்கை அக்டோபர் 6ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

மாநில அரசை பிரதிநிதித்துவம் செய்யும் அறிவிப்பாணை தன்னிடம் இன்னும் வந்து சேரவில்லை என்று அரசு வழக்கறிஞர் பவானி சிங் கூறியதையடுத்து ஜாமீன் மனு மீதான விசாரணை தள்ளி வைக்கப்பட்டது.

மேலும் சிறப்பு நீதிமன்ற நீதிபதி மைக்கேல் டி குன்ஹா அளித்த 900 பக்கங்கள் கொண்ட தீர்ப்பின் அதிகாரபூர்வ நகல் இன்னமும் தனக்கு வந்து சேரவில்லை என்பதையும் பவானி சிங் குறிப்பிட்டார்.

ஜாமீன் மனு விவரம்:

கடந்த 27-ம் தேதி சொத்துக் குவிப்பு வழக்கில் முன்னாள் தமிழக முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலி தாவுக்கு 4 ஆண்டு சிறை தண்டனையும் ரூ.100 கோடி அபராதமும் விதிக்கப்பட்டது.

சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகிய மூவருக்கும் தலா 4 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.10 கோடி அபராதமும் விதிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து நால்வரும் பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இதையடுத்து, நேற்று கர்நாடக உயர் நீதிமன்றத்தில் ஜெயலலிதா உள்ளிட்ட நால்வருக்கும் ஜாமீன் கோரும் மனுவை வழக்கறிஞர்கள் தாக்கல் செய்தனர்.

கர்நாடகத்தில் தசரா விடுமுறையையொட்டி நீதிமன்ற ஊழியர்கள் அனைவரும் தங்களது ஊர்களுக்கு சென்று விட்டதால் மிகவும் சிரமப்பட்டு மனு தாக்கல் செய்த‌னர். ஆனால் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் குறித்து கருத்துக் கூற ம‌றுத்துவிட்டனர்.

ஜெயலலிதா தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் குறித்து விசாரித்தபோது, ”சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோருக்கு ஜாமீன் கோரி வழக்கறிஞர்கள் பன்னீர் செல்வம், அன்புக்கரசு, அசோகன், பரணி குமார் ஆகியோர் வந்தனர். கர்நாட க‌த்தை சேர்ந்த வழக்கறிஞ‌ர்கள் மட்டுமே மனுவில் கையெழுத்திட முடியும் என்பதால், பெங்களூ ரைச் சேர்ந்த 4 வழக்கறிஞர்கள் அழைத்து வரப்பட்டனர்.

அதனைத் தொடர்ந்து ஜெயலலிதாவுக்கு வழக்கறிஞர் வேணுகோபால், சசிகலாவுக்கு ஸ்ரீநிவாஸ், சுதாகரனுக்கு மூர்த்தி ராவ், இளவரசிக்கு அம்ஜத் பாஷா ஆகியோர் கையெழுத்திட்டு சரியாக 12.10 மணிக்கு ஜாமீன் மனு பதிவு செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து நால்வரும் நான்கு முக்கிய மனுக்களை தாக்கல் செய்தனர். ஒவ்வொரு மனுவும் சுமார் 1,000 பக்கங்கள் கொண்டது. அதில் தங்களுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பை ரத்து செய்யக்கோரியும், சிறப்பு நீதிமன்றம் வழங்கிய தண்டனையை ரத்து செய்யக்கோரியும், தங்களது சொத்துகளை பறிமுதல் செய்ய விதிக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்யக் கோரியும் மூன்று மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.

இது தவிர நால்வர் தரப்பிலும் தீர்ப்புக்கும்,தண்டனையை ரத்து செய்யக்கோரியும் தலா இரு இடைக்கால தடை மனுக்களையும் தாக்கல் செய்தனர்.அவர்களுடைய மனுக்கள் உடனே ஏற்கப்பட்டு பதிவெண்கள் (835,836,837,838) வழங்கப்பட்டன.

ஜாமீன் மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு

ஜெயலலிதா தரப்பின் இந்த மனுக்களை இன்று விசாரித்த நீதிபதி ரத்னகலா, விசாரணையை திங்கள்கிழமைக்கு (அக்.6) ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

ஜெயலலிதா தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களில், ”எனக்கு 66 வயதாகிற‌து. ஒரு பெண்ணாக இருப்பதால் சிறை தண்டனை மிகவும் கடினமானது. இது தவிர நீரிழிவு நோய், இதய கோளாறு, ரத்தக் கொதிப்பு உள்ளிட்ட பல பிரச்சினைகள் இருக்கிறது. எனவே எனக்கு ஜாமீன் வழங்க வேண்டும்” என கோரப்பட்டுள்ளது.

இதே போல ”பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு ஏற்கத்தக்கது அல்ல. ஏனென்றால், சொத்துக் குவிப்பு வழக்கை விசாரித்த நீதிபதி டி’குன்ஹா எனது வழக்கில் வருமான வரி தீர்ப்பாயம் வெளியிட்ட தீர்ப்பை கருத்தில் கொள்ளவில்லை. நான் வழக்கு காலத்தில் (1991-96) சேர்த்த சொத்துகள் அனைத்தும் சட்ட விரோதமானவை அல்ல. என் மீது எந்த குற்றமும் கூறப்படவில்லை. இதனை கருத்தில் கொண்டு, எனக்கு விதிக்கப்பட்ட தீர்ப்பை ரத்து செய்ய வேண்டும்”என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சட்ட நிபுணர்கள் குழு தீவிரம்

இதனிடையே, நீதிபதி டி’குன்ஹாவின் இந்த தீர்ப்பு தமிழக அரசியலில் மட்டுமில்லாமல் இந்திய நீதித்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்வதற்கு இந்திய அளவில் குற்றவியல் வழக்குகளில் அனுபவம் மிக்க சட்ட நிபுணர்கள் பெங்களூருக்கு வரவழைக்கப்பட்டுள்ளனர்.

ஜெயலலிதாவின் வழக்கறிஞர் பி.குமார், வழக்கறிஞரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நவநீத கிருஷ்ணன் ஆகியோர் தலைமையில் 30-க்கும் மேற்பட்ட உச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்ற மூத்த வழக்கறிஞர்கள் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.

பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் வழங்கிய 1,232 பக்க தீர்ப்பை இக்குழுவினர் அலசி ஆராய்ந்து வருகின்றனர். இது தொடர்பாக ஜெயலலிதாவை சந்தித்து ஆலோசனையும் நடத்தியுள்ளனர்.

0 Responses to ஜெயலலிதா ஜாமீன் மனு அக்.6-க்கு ஒத்திவைத்தது உயர் நீதிமன்றம்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com