Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

பதுளை மாவட்டத்தில் கொஸ்லாந்த மீரியபெத்தைப் பகுதியில் ஏற்பட்ட பாரிய மண்சரிவுக் காரணமாக 6 லயின் குடியிருப்புகள் முற்றுமுழுதாக மண்ணுக்குள் புதையுண்டுள்ளதாக பிராந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த மண்சரிவு இன்று புதன்கிழமை காலை 07.00 மணிக்கும் 07.30 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மண் சரிவுக்குள் சிக்கி 2 பேர் உயிரிழந்துள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், 400 பேராளவில் மண் சரிவினுள் சிக்கியிருக்கலாம் என்றும் அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.

மீரியபெத்தையில் 07, 08, 09, 10, 11 மற்றும் 12ஆம் இலக்க லயன் குடியிருப்புகளே இவ்வாறு மண்ணில் புதையுண்டுள்ளன. 07ஆம் இலக்க லயனில் 8 வீடுகளும், 08ஆம் இலக்க லயனில் 16 வீடுகளும், 09ஆம் இலக்க லயனில் 20 வீடுகளும், 10ஆம் இலக்க லயனில் 10 வீடுகளும், 11ஆம் இலக்க லயனில் 6 வீடுகளும், 12 ஆம் இலக்க லயனில் 6 வீடுகளும் இருந்ததாக கூறப்படுகின்றது.

இதேவேளை, பால் சேகரிக்கும் நிலையங்கள் இரண்டு, வாகனங்கள் திருத்தும் இடம், இரண்டு கடைகள், மருத்துவ மாது குடும்பம் தங்கியிருந்த விடுதி, சாரதியின் வீடு, சிகிச்சை நிலையம் மற்றும் கோவில் ஆகியனவும் மண்ணில் புதையுண்டுள்ளன.

இந்த பகுதியில் மண்சரிவு அபாயம் ஏற்படும் என்று முன்கூட்டியே அறிவுறுத்தல் விடப்பட்டமையால் பலர் பாதுகாப்பான இடங்களுக்கு முன்கூட்டியே இடம்பெயர்ந்துவிட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. அதனால் மண்ணில் புதையுண்டவர்களின் எண்ணிக்கையை சரியாக கூறமுடியாதுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பாதுகாப்பான இடங்களில் தங்கியிருந்த பலர் தங்களுடைய உடமைகளை எடுப்பதற்காக இன்றுக்காலை அங்கு சென்றிருந்த போதே இந்த அனர்த்தத்தில் சிக்கிகொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மண்சரிவில் சிக்குண்டுள்ளவர்களை தேடும் பணியில் முப்படையினரும் இலங்கை விமானப்படையின் விசேட ஹெலிக்கெப்டர்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக படைத்தரப்பு அறிவித்துள்ளது.

அத்துடன், பதுளை, பண்டாரவளை உள்ளிட்ட பிரதான வைத்தியசாலைகளின் வைத்தியர்கள், தாதியர், மருத்துவ குழு மற்றும் நோய்காவு வண்டிகளும் அப்பகுதிக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளளதாக செய்திகள் கூறுகின்றன.

0 Responses to பதுளை மீரியபெத்தையில் பாரிய மண்சரிவு; 400 பேர் மண்சரிவில் சிக்கியிருக்கலாம் என அச்சம்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com