Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

அரசியலமைப்பின் 13வது திருத்த சட்டத்தில் குறிப்பிட்டுள்ளதன் பிரகாரம் மாகாண சபைகளுக்கு காணி, பொலிஸ் அதிகாரங்களை வழங்குவது தொடர்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தொடர்ந்தும் பின்னடித்து வருவதாக குற்றஞ்சாட்டியுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஜனாதிபதிக்கு திடீர் ஞானம் பிறந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற விவாதமொன்றில் கலந்து கொண்டு பேசும் போதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரான எம்.ஏ.சுமந்திரன் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, "மாகாண சபைகளுக்கு காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை வழங்குவதில் தாம் எத்தகைய நியாயத்தையும் காண்பதாக இல்லை என்று ஜனாதிபதி கூறினார். இருந்த போதிலும் அரசமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்தல் மற்றும் 13 இற்கும் அப்பாலும் செல்வதாக இந்தியப் பிரதமர், ஐ.நா. செயலாளர் நாயகம் உட்பட சர்வதேச சமூகத்தினருக்குப் பல்வேறு சந்தர்ப்பங்களிலும் அவர் உறுதியளித்திருக்கிறார்.

ஆனால், தற்போது திடீர் ஞானம் பிறந்தது போன்று மாகாண சபைகளுக்குக் காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களைப் பகிர்வதில் நியாயமான காரணங்களைக் காணவில்லை என்கிறார். ஆகவே, அவரது உறுதிமொழிகளின் மதிப்பு என்னவென்பதற்கு இதுதான் சிறந்த வழிகாட்டியாகும்.

அந்த வகையில் இந்த வரவு - செலவுத் திட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படுமா என்பதும் சந்தேகமே. யாழ்ப்பாணத்துக்கான யாழ்தேவி ரயில் சேவை ஆரம்பிக்கப்பட்டமையை வரவேற்கிறோம். அதற்கு நிதியுதவி அளித்த இந்தியாவுக்கும் எமது நன்றிகள். ஆனால், யாழ்தேவி யாழ்ப்பாணம் வரும்போதே வெளிநாட்டவர்கள் வடக்குக்குச் செல்வதற்கும் புதிய கட்டுப்பாடுகள் வந்துவிட்டன.

இன்றைய நிலைமையில் வெளிநாட்டவர்கள் வடக்குக்குச் செல்வதற்கு இரு விசா அனுமதிகள் தேவை. ஒன்று இலங்கைக்கு வருவதற்கு. இன்னுமொன்று வடக்குக்குச் செல்வதற்கு. வடக்கு எதற்காக வேறு நாடொன்றைப்போன்று உபசரிக்கப்படவேண்டும்?

வெளிநாட்டிலிருந்து வருபவர்கள் நாட்டின் ஏனைய பகுதிகளுக்குச் சுதந்திரமாகச் செல்ல முடிந்தபோதும் வடக்குக்கு மட்டும் அப்படிச் செல்ல முடியாமல் இருக்கிறது. இந்தப் புதிய கட்டுப்பாடு எதற்காக விதிக்கப்பட்டது என்று அரசிடமிருந்து இதுவரை எந்தத் தெளிவான பதிலும் வழங்கப்படவில்லை. இவ்வாறு சொந்தங்களை வெளிநாட்டிலிருந்து சந்திக்க வருவோரைத் தடுக்கின்றமை வடக்கை வேறுபடுத்தி பார்ப்பதாக உங்களுக்குத் தெரியவில்லையா?

இவ்வாறான செயற்பாடுகள் மூலம் வடக்கில் ஆயுத நடவடிக்கைகள் இருக்கின்றன, பயங்கரவாதம் மீண்டும் உருவெடுக்கிறது போன்ற தோற்றப்பாட்டை உருவாக்கி தேர்தலுக்காக தெற்கு மக்களை ஏமாற்றப் பார்க்கிறீர்கள். இதனால் வடக்கு மக்கள் எவ்வளவு அசெளகரியங்களை அனுபவிப்பார்கள் என்று நீங்கள் சிந்திக்கவில்லை. ஏனெனில், அவர்களை உங்களது மக்களாக நீங்கள் நினைக்கவில்லை.

2015 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்ட உரையின் மூலம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பெயரைக் குறிப்பிட்டுள்ள ஜனாதிபதி, பேச்சுகளில் கலந்துகொள்ளுமாறும் அழைப்பு விடுத்துள்ளார். ஜனாதிபதியின் அழைப்பினை வரவேற்கிறோம். தமிழ் மக்களின் உண்மையான பிரதிநிதி யார் என்பதை தற்போது ஜனாதிபதி உணர்ந்திருக்கின்றார்.

எமக்கு அழைப்பு விடுத்துள்ள ஜனாதிபதி தனது உரையில் குறிப்பிட்டுள்ளதை செயலில் காட்டவேண்டும் என்பதுடன் அரசுக்குள் உள்ள பிளவுகளை அவர் முதலில் சரி செய்யவேண்டும். மேலும், சமர்ப்பிக்கப்பட்டிருப்பது 2015ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டமல்ல. அது தேர்தல் விஞ்ஞாபனமாகவே இருக்கிறது" என்றுள்ளார்.

0 Responses to காணி, பொலிஸ் அதிகாரங்கள் தொடர்பில் மஹிந்தவுக்கு திடீர் ஞானம் பிறந்துள்ளது: எம்.ஏ. சுமந்திரன்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com