Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

மஹிந்த ராஜபக்ஷ எதிர்வரும் 12ஆம், 13ஆம் திகதிகளில் வடக்கில் மேற்கொள்ளவுள்ள விஜயத்தை மக்கள் வெற்றிபெற வைக்க வேண்டும் என்று ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் (ஈபிடிபி) செயலாளர் நாயகமும், அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா கோரியுள்ளார்.

வடக்கு பகுதிக்கான விஜயத்தின் போது ஜனாதிபதி, மக்கள் நலன்சார்ந்த பல்வேறு அபிவிருத்தி செயற்றிட்டங்களை அங்குரார்ப்பணம் செய்து வைக்கவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியின் வடக்கு விஜயம் தொடர்பில் விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பொன்று யாழ்ப்பாணத்தில் நேற்று சனிக்கிழமை இடம்பெற்றது. அதில், கலந்து கொண்டு பேசும் போதே அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மூன்றுநாள் விஜயத்தை மேற்கொண்டு எதிர்வரும் 12ஆம் திகதி வடக்கு பகுதிக்கு வருகை தரவுள்ளார்.

இவ்வாறு வருகைதரும் ஜனாதிபதி, 12ஆம் திகதி கிளிநொச்சி மாவட்டத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட மாவட்ட செயலகத்தை உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கும் அதேவேளை, மேலும் பல நிகழ்வுகளிலும் பங்கெடுக்கவுள்ளார்.

மறுநாளான 13ஆம் திகதி, 24 வருடங்களின் பின்னர் யாழ்ப்பாணத்துக்கான ரயில்சேவையை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கவுள்ள ஜனாதிபதி, கொடிகாமம் மற்றும் நாவற்குழி பகுதிகளில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட புகையிரத நிலையங்களை திறந்து வைப்பதுடன் யாழ்ப்பாணத்தில புதிதாக நிர்மாணிக்கப்பட்ட பிரதான புகையிரத நிலையத்தையும் உத்தியோகபூர்வமாக திறந்துவைக்கவுள்ளார்.

தொடர்ந்து யாழ்ப்பாணத்தின் கலை, கலாசார பண்பாட்டு விழுமியங்களை எடுத்தியம்பும் வகையிலும் நவீன வசதிகளை கொண்டமைந்த வகையிலும் மிகச் சிறப்பாகவும் அழகாகவும் மீள் புனரமைக்கப்பட்ட வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெறும் வடக்கு மாகாணத்தின் 5 மாவட்டங்களையும் ஒன்றிணைத்த விசேட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தையும் தலைமை தாங்கி நடத்தவுள்ளார்.

அத்துடன், வடக்கு மாகாணத்தில் யுத்தத்தால் கடும் பாதிப்புற்றோருக்கான கொடுப்பனவு, சொத்தழிவு நட்டஈட்டு கொடுப்பனவு, சேதமடைந்த வணக்கஸ்தலங்களுக்கான கொடுப்பனவு மற்றும் அரச ஊழியர் நட்டஈட்டு கொடுப்பனவு ஆகியவற்றை பயனாளிகளுக்கு அவர் வழங்கவுள்ளார்” என்றுள்ளார்.

0 Responses to மஹிந்த ராஜபக்ஷவின் வடக்கு விஜயத்தை வெற்றிபெற வையுங்கள்: டக்ளஸ்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com