ஐரோப்பிய ஒன்றியம் விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு எதிராக விதித்திருந்த தடை தொடர்பில் ஐரோப்பிய பொது நீதிமன்றம் திருப்பகரமான ஒரு தீர்ப்பை வழங்கியிருக்கிறது. இத்தீர்ப்பு தொடர்பாக ஐரோப்பிய ஒன்றியத்தின் ஊடக மற்றும் தகவல் நிறுவனம் விடுத்துள்ள அறிக்கையில் இத்தீர்ப்பானது சட்ட ரீதியிலானது மட்டுமே என்றும் அரசியல் ரீதியிலானது அல்ல என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்படி வழக்கை முன்னெடுத்த தமிழ்ச் சட்டச் செயற்பாட்டாளர் ஒருவர் இதே தொனிப்பட கருத்துத் தெரிவித்திருக்கிறார். அதாவது இத்தீர்ப்பானது சட்ட ரீதியிலானது என்றும் இதில் அரசியல் தலையீடு இல்லை என்றும் அவர் கூறியிருந்தார்.
ஆசிய ஜனநாயகங்களில் நீதி பரிபாலன துறையின் மீதான அரசியல் அதிகாரத்தின் பிடி ஒப்பீட்டளவில் அதிகமாயிருக்கும் என்றும் ஆனால் ஐரோப்பிய ஜனநாயகங்களில் நிலைமை அவ்வாறு இல்லை என்றும் அங்கெல்லாம் நீதி பரிபாலனத் துறை ஒப்பீட்டளவில் சுயாதீனமாக இயங்கக் கூடியதாக உள்ளது என்ற தொனிப்படவும் அவர் கருத்துத் தெரிவித்திருந்தார்.
ஐரோப்பிய ஜனநாயகங்களில் நீதி பரிபாலன துறையானது ஒப்பீட்டளவில் சுயாதீனமாக இயங்குகிறது என்பது உண்மைதான். ஆனால் அது ஒரு முழு உண்மையல்ல. விடுதலைப் புலிகள் இயக்கத்தை தடை செய்வது போன்ற வெளியுறவு கொள்கை சார் முடிவுகள் பெரும்பாலும் அரசியல் ரீதியிலானவை. அவை அரசியல் தீர்மானங்கள் தான். அப்படியொரு அரசியல் தீர்மானத்தின் படி புலிகள் இயக்கம் தடை செய்யப்பட்ட போது போதியளவு சான்றுகள் வழங்கப்படவில்லை என்பதை ஐரோப்பிய பொது நீதி மன்றம் தனது தீர்ப்பில் சுட்டிக்காட்டியிருந்தது. அத்தீர்ப்பில் அது ஒரு சட்ட பிரச்சினையாக கூறப்பட்டாலும் கூட அது அதன் ஆழமான பொருளில் ஓர் அரசியல் பிரச்சினையே. அதாவது புலிகள் இயக்கத்தை தடை செய்வது என்று ஐரோப்பிய ஒன்றியம் முடிவெடுத்த போது அதற்கு வேண்டிய சான்றுகளின் சட்டப்பெறுமானம் தொடர்பில் போதியளவு கவனம் செலுத்தப்படவில்லை என்பதையே அது காட்டுகிறது.
அத்தடை விதிக்கப்பட்ட காலகட்டத்தையும் அத்தடைக்குப் பின்னால் இருந்த இராஜிய உள்நோக்கங்களையும் அவற்றின் ஆழத்துள் சென்று பார்த்தால் இது தெரியவரும் மேற்கின் அனுசரனையுடனான சமாதான முயற்சிகளில் இருந்து புலிகள் இயக்கம் பின்வாங்கப் போகின்றது என்றவாறான ஊகங்கள் பெருகிச் சென்ற ஒரு காலகட்டத்தல் லக்ஷ்மன் கதிர்காமர் கொல்லப்பட்டார். அதைத் தொடர்ந்து தடை விதிக்கப்பட்டது. அதன் மூலம் புலிகள் இயக்கத்தின் மீது அழுத்தங்களைப் பிரயோகித்து அந்த இயக்கமானது சமாதான முயற்சிகளில் இருந்து பின்வாங்குவதை தடுப்பதே மேற்கு நாடுகளின் முதல் நோக்கமாக இருந்தது. ஆனால் அத்தடை எதிர்மறை விளைவுகளையே ஏற்படுத்தியது. அது புலிகளை வளைப்பதற்குப் பதிலாக முறிப்பதிலேயே போய் முடிந்தது. தடையின் உடனடி விளைவு போர்நிறுத்த கண்காணிப்புக் குழுவையே பாதித்தது. அக்குழுவில் இருந்த ஐரோப்பிய ஒன்றியத்தைச் சேர்ந்த நாடுகளிலிருந்து வந்த கண்காணிப்பாளர்கள் தொடர்ந்தும் வன்னியில் பணி புரிய முடியாத ஒரு நிலை தோன்றியது. அதாவது சமாதான முயற்சிகள் மேலும் பின்னடைவைச் சந்தித்தன.
இப்பொழுது தடை நீக்கத்தைப் பற்றி சிந்திக்கப்படுகிறது. தடையை நீடிப்பதற்குத் தேவையான சான்றுகளை வழங்குவதற்கு ஐரோப்பிய ஒன்றியத்திற்கு மூன்று மாத கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இதன்படி தடையை நீடிப்பதா இல்லையா என்ற முடிவை ஐரோப்பிய ஒன்றியமே எடுக்க வேண்டியிருக்கும். அது நிச்சயமாக ஓர் அரசியல் தீர்மானம் தான். அதாவது இத்தீர்ப்பானது அதன் இறுதியிலும் இறுதியான விளைவைக் கருதிக் கூறின் ஓர் அரசியல் விவகாரம் தான். அப்படியொரு அரசியல் தீர்மானத்தை ஐரோப்பிய ஒன்றியம் எடுக்குமா?
அல்லது இதை வேறு விதமாகவும் கேட்கலாம். அப்படியொரு தீர்மானத்தை எடுக்க வேண்டிய தேவை ஏதும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு உண்டா?
புலிகள் தோற்கடிக்கப்பட்ட பின்னரான ஐந்தாண்டுகளுக்கும் மேற்பட்ட காலத்தை கருதிக் கூறின் அந்த இயக்கத்தின் மீதான தடையை நீடிப்பதற்கு தேவையான அடிப்படைகள் ஒப்பீட்டளவில் பலவீனமாகவே காணப்படுகின்றன. எனினும் இந்தியாவும் அமெரிக்காவும் அத்தடையை நீடிப்பது என்று முடிவெடுத்திருக்கின்றன. அவை முழுக்க முழுக்க அரசியல் தீர்மானங்களே. தடை விதித்ததும் அரசியல் தீர்மானம் தான் தடையை நீடிப்பதா இல்லையா என்ற முடிவும் ஓர் அரசியல் தீர்மானம் தான்.
ஐரோப்பிய ஒன்றியம் தடையை நீடிப்பதில்லை என்ற ஓர் அரசியல் தீர்மானத்தை எடுத்தால் அது இலங்கை அரசாங்கத்தின் மீதான ஒரு அழுத்தப்பிரயோக உத்தியாகவே பார்க்கப்படும். ஆயின் இந்த இடத்தில் ஒரு குரூரமான முரணைச் சுட்டிக்காட்ட வேண்டும். பல ஆண்டுகளுக்கு முன் புலிகள் இயக்கத்தை வழிக்குக் கொண்டு வருவதற்காக அந்த இயக்கத்தை தடை செய்த ஐரோப்பிய ஒன்றியம் இப்பொழுது இலங்கை அரசாங்கத்தை வழிக்கு கொண்டு வருவதற்காக தடையை நீக்குவது பற்றி சிந்திக்கிறதா? ஆயின் தென்னிலங்கையில் அதன் உடனடி விளைவுகள்; எவ்வாறு அமையும்?
சந்தேகமேயில்லை, அது உடனடிக்கு அரசாங்கத்திற்கு அனுகூலமாகவே அமையக்கூடும். ஐரோப்பிய பொது நீதிமன்றம் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு வழங்கியிருக்கும் மூன்று மாத கால அவகாசம் முடியும் காலகட்டமும் ஜனாதிபதித் தேர்தல் நடக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படும் காலகட்டமும் சற்று முன்பின்னாக தான் வருகின்றன. எனவே வெள்ளைக்காரர்களும் புலம்பெயர்ந்த தமிழர்களும் புலிகள் இயக்கத்தை மீள உயிர்ப்பிக்கிறார்கள் என்று கூறி இனவாதத்தை தூண்டுவது இலகுவாக இருக்கும். அதற்கான ஏற்பாடுகள் ஏற்கனவே தொடங்கப்பட்டு விட்டதை தென்னிலங்கையில் காணமுடிகிறது. எவ்வளவுக்கு எவ்வளவு இனவாதம் தூண்டப்படுகிறதோ அவ்வளவுக்கு அவ்வளவு வெற்றி வாதம் நிலை பெறுவதற்கான வாய்ப்புக்கள் அதிகரிக்கும்.
அண்மையில் தென்னிலங்கையில் உள்ள ஒரு செயற்பாட்டாளரோடு உரையாடிய போது அவர் பின்வருமாறு சொன்னார். 'அங்கே மிக அடிமட்டத்தில் அபிப்பிராயத்தை உருவாக்க வல்லவர்களான ஓட்டோ சாரதிகள் சிகை அலங்கரிப்போர் போன்றோர் மத்தியில் அரசாங்கத்திற்கு எதிரான அதிருப்தி பரவலாக காணப்படுகிறது. அதே சமயம் படித்த நடுத்தர வர்க்கத்தினர் மத்தியில் அபிப்பிராயத்தை உருவாக்க வல்ல உயர் குழாத்தினர், புத்திஜீவிகள், ஊடகவியலாளர்கள் போன்றோர் மத்தியிலும் அரசாங்கத்திற்கு எதிரான கருத்துக்கள் திரண்டு வருகின்றன....... இப்படிப்பார்த்தால் வெற்றி வாதத்தின் கவர்ச்சி குறையத் தொடங்கி விட்டதாகவே எடுத்துக் கொள்ள வேண்டும். எதிர்க்கட்சிகள் பலமான ஒரு வியூகத்தை வகுத்தால் இந்த அரசாங்கத்தை தோற்கடிப்பது பற்றி நம்பிக்கையோடு சிந்திக்கலாம்.....' என்று.
நான் அவரிடம் சொன்னேன் 'எல்லா வெற்றி வாதங்களுக்கும் ஏதோ ஒரு வயது உண்டு. இலங்கைத் தீவிலும் ஒரு நாள் வெற்றி வாதத்திற்கு முதுமை வரும். ஆனால் ஆண்டுதோறும் மனித உரிமைகள் கூட்டத்தொடரில் அரசாங்கத்திற்கு எதிராக தீர்மானங்கள் நிறைவேற்றப்படும் ஓர் அனைத்துலக சூழல் நீடித்திருக்கும் வரை, தமிழ் நாடும் புலம் பெயர்ந்த தமிழ்ச் சமூகமும் தமிழ்த் தேசியத்தின் கூர் முனைகள் போல துலங்கிக் கொண்டிருக்கும் வரை இலங்கைத் தீவின் வெற்றி வாதத்திற்கு வயதாகப் போவதில்லை...' என்று
ஐரோப்பிய ஒன்றியம் எடுக்கப்போகும் முடிவுகளையும் இந்த விளக்கத்தின் பின்னணியில் வைத்தே பார்க்க வேண்டும்.
அப்படிப் பார்த்தால் இத்தீர்ப்பின் உடனடி விளைவு எனப்படுவது அரசாங்கத்தை பலப்படுத்துவதாகவே அமையும். அதாவது மேற்கு நாடுகள் இலங்கைத் தீவில் முன்னெடுக்க முற்படும் ஆட்சி மாற்றம் அல்லது ஆட்சிக்குள் மாற்றம் என்ற தெரிவுக்கு எதிரான நிலைமைகளே வளர்ச்சி பெறும்.
ஆயின், தமது நிகழ்ச்சி நிரலை குழப்பக் கூடிய அல்லது அதைத் தாமதப்படுத்தக் கூடிய ஓர் முடிவை ஐரோப்பிய ஒன்றியம் எடுக்குமா? அல்லது ஆட்சி மாற்றத்தை தவிர வேறு ஏதும் திட்டம் மேற்கிடம் உள்ளதா? அல்லது தெரிவுகள் மிகக் குறைந்த ஓர் நிலையில் கிடைக்கக் கூடிய தெரிவுகளை பயன்படுத்தி புதிய தெரிவுகளை உருவாக்கலாமா என்று மேற்கு நாடுகள் முயற்சித்துப் பாரக்கின்றனவா?
ஜனாதிபதித் தேர்தலில் அரசாங்கம் வெற்றி பெற்றால் அதன்பின் தென்னிலங்கையில் ஏற்படக்கூடிய எல்லா அரசியல் நகர்வுகளையும் அரசாங்கம் தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரும். மேலும் அந்த வெற்றியானது நாடாளுமன்ற தேர்தல்களிலும் தாக்கம் செலுத்தும். சில சமயம் இப்போதிருப்பது போன்ற ஒரு பெரும்பான்மை அரசாங்கத்திற்கு கிடைக்காமல் போகலாம். மற்றும்படி மேற்படி தீர்ப்பின் விளைவானது தென்னிலங்கையில் இப்போதிருக்கும் நிலைமைகளை தொடர்ந்தும் பேணுவதற்கே உதவக்கூடும். அதே சமயம் மறுவளமாக இத்தீர்ப்பானது தமிழர்கள் தரப்பில் எத்தகைய பின் விளைவுகளை ஏற்படுத்தும்?
இத்தீர்ப்பின் உடனடி விளைவுகள் புலம் பெயர்ந்த தமிழர்கள் மத்தியில் தான் தாக்கத்தை ஏற்படுத்தும். இது புலம் பெயர்ந்த தமிழர்கள் மத்தியிலுள்ள சட்டச்செயற்பாட்டாளர்களுக்குக் கிடைத்த குறிப்பிடத்தக்க ஒரு வெற்றியாகும். இதனால் ஐரோப்பாவில் புலிகள் இயக்கத்தின் சட்ட ரீதியிலான அந்தஸ்து உயரும். இது கடந்த ஐந்தாண்டுகளில் புலிகள் இயக்கத்தின் ஆதரவாளர்களுக்கும் அனுதாபிகளுக்கும் கிடைத்த உற்சாகமூட்டும் ஒரு வெற்றியாகும். ஆனால் இந்த வெற்றியின் விளைவுகளை தக்க வைப்பதும், அதை அடுத்தடுத்த கட்டங்களுக்கு வளர்த்துச் செல்வதும் புலம் பெயர்ந்த தமிழர்களின் கைகளில் தான் உள்ளது.
இத்தீர்ப்பு மூன்று மாதங்களின் பின் எத்தகையதோர் இறுதி வடிவத்தை அடையும் கூடும் என்பதில் தான் தமிழர் தரப்பு செயற்பாடுகள் தங்கியிருக்கின்றன. சொத்துக்களை முடக்குவது தொடர்பாக வருங்காலத்தில் எத்தகையதோர் அரசியல் தீர்மானம் எடுக்கப்படும் என்பதைப் பொறுத்திருந்தே பார்க்க வேண்டும். அதைப் போலவே ஐரோப்பிய ஒன்றியத்தின் தீர்ப்பை பின்பற்றி அந்த ஒன்றியத்திற்குள் வரும் எல்லா நாடுகளும் அதையொத்த முடிவுகளை எடுக்குமா அல்லது ஒவ்வொரு நாடும் அதற்கேயான சட்ட வரையறைகளுக்கூடாக முடிவுகளை எடுக்குமா என்பதையும் பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.
அவ்வாறு புலிகள் இயக்கத்திற்கு சாதகமாக முடிவுகள் எடுக்கப்படுமிடத்து தமிழர்கள் தரப்பில் மற்றொரு பெருந்தடையை தாண்டவேண்டியிருக்கும். புலிகள் இயக்கத்தின் மெய்யான வாரிசு யார்? என்ற சர்ச்சையே அது.
கடந்த ஐந்தாண்டுகளாக புலம் பெயர் தமிழர்கள் மத்தியிலுள்ள அமைப்புக்களால் இது தொடர்பில் ஐக்கியமான ஒரு பொது முடிவை எட்ட முடியவில்லை. இத்தகைய ஒரு பின்னணியில் குறிப்பாக சொத்து முடக்கம் தொடர்பான தடைகள் நீக்கப்படுமிடத்து வாரிசுச் சண்டையும் சொத்துக்களுக்கு உரிமை கோரும் மோதல்களும் அதிகரிக்கக் கூடும். சிலவேளை தடை நீக்கத்திற்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்குகளை விடவும் கூடுதலான வழக்குகள் சொத்துக்களுக்கு உரிமை கோரி தொடுக்கப்படக் கூடும்.
இப்படிப் பார்த்தால் இப்போது வந்திருப்பது ஒரு தடை நீக்கம் என்பதை விடவும் ஒரு பரீட்சை என்றே கூற வேண்டும். ஐரோப்பாவில் உள்ள புலிகளுக்கு சாதகமான அமைப்புக்கள் இப்பரீட்சையில் எப்படிச் சித்தியடைகின்றன என்பதில் தான் எல்லாமும் தங்கியிருக்கிறது.
புலிகள் இயக்கம் இப்பொழுது தாயகத்தில் செயற்படுவதில்லை. அந்த இயக்கத்தின் தொடர்ச்சியாக காணப்படும் அமைப்புக்கள் பெருமளவிற்கு புலம் பெயர்ந்த தமிழர்கள் மத்திலேயே காணப்படுகின்றன. கடந்த ஐந்தாண்டுகளில் மேற்படி அமைப்புக்கள் அனைத்தையும் ஒரு குடையின் கீழ் கொண்டுவரத்தக்க ஜனவசியம் மிக்க ஒரு தலைமை அங்கே எழுச்சி பெற்றிருக்கவில்லை. அதே சமயம் களத்தில் மக்களாணையைப் பெற்றிருக்கும் கூட்டமைப்பாலும் மேற்படி அமைப்புக்களுக்கு தலைமை தாங்க முடியாது. மக்களாணையை பெற்றிராத தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியால் அதை ஒரு கட்டத்திற்கு மேல் முன்னெடுக்க முடியவில்லை.
இத்தகையதோர் பின்னணியில் புலம் பெயர்ந்த தமிழர்கள் மத்தியில் ஆகக் கூடிய பட்ச ஐக்கியத்தை ஏற்படுத்த தவறின் இத்தீர்ப்பின் நற்கனிகள் அழுகிப்போகக் கூடும். எனவே புலம்பெயர்ந்த தமிழர்கள் இத்தீர்ப்பைக் கொண்டாடுவது என்பதை ஐக்கியத்தை கட்டியெழுப்புவதில் இருந்தே தொடங்க வேண்டும்.
முடிவாக கூட்டிக்கழித்துப் பார்த்தால் இத்தீர்ப்பின் உடனடி விளைவுகள் தென்னிலங்கை அரசியலில் இப்போதிருக்கும் நிலைமைகளை தொடர்ந்து பேண முற்படும் தரப்புக்களுக்கே உதவிபுரியும். அதேசமயம் புலம் பெயர்ந்த தமிழர்கள் தரப்பில் ஏற்படக்கூடிய எந்த ஒர் எழுச்சியும் இலங்கைத் தீவை வந்து சேர்வதில் அடிப்படையான மூன்று தடைகளை தாண்ட வேண்டியிருக்கும்.
முதலாவது தடை-அரசாங்கம் சட்ட ரீதியாக விதித்திருக்கும் தடை
இரண்டாவது தடை-புலம் பெயர்ந்த தமிழர்கள் மத்தியில் காணப்படும் ஒற்றுமையின்மை.
மூன்றாவது தடை-களத்தில் இயங்க முடியாத ஒரு அமைப்பின் வெளி நீட்சிகள் வெளியரங்கில் எவ்வளவு தான் பலமாகக் காணப்பட்டாலும் அவற்றுக்கு அடிப்படையான வரையறைகள் உண்டு என்பது. இம்மூன்று தடைகளையும் கருதிக் கூறின் இத்தீர்ப்பின் விளைவாக புலம் பெயர்ந்த தமிழர்கள் மத்தியில் ஏற்படக்கூடிய புதிய வளர்ச்சிகள் தாயகத்தை வந்தடைவதில் அடிப்படையான வரையறைகள் உண்டு.
இப்படிப் பார்த்தால் ஐரோப்பிய ஒன்றியம் எடுக்கப்போகும் முடிவுகளால் இலங்கைத் தீவின் அரசியலில் உடனடிக்கு பெரிய திருப்பங்கள்; எதுவும் ஏற்படப்போவதில்லை. எட்டு ஆண்டுகளுக்கு முன்பு புலிகள் இயக்கத்தை வளைக்கத் தவறிய தடையைப் போலவே இப்பொழுது தடை நீக்கமும் அரசாங்கத்தை வளைக்கப் போவதில்லை!
(ஐரோப்பிய ஒன்றியம் தமிழீழ விடுதலைப் புலிகள் மீது விதித்திருந்த தடையை அண்மையில் ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றம் இரத்து செய்து தீர்ப்பளித்தது. அந்த விடயம், தமிழ்ச் சூழல் மற்றும் தென்னிலங்கை அரசியலில் என்ன தாக்கங்களைச் செலுத்தும் என்பது தொடர்பில் பத்தியாளர் நிலாந்தனின் தினக்குரலுக்கான இந்தக் கட்டுரை பேசுகின்றது. கட்டுரையின் இணைய வடிவம் குளோபல் தமிழ் செய்திகள் தளத்திலிருந்து எடுத்தாளப்படுகின்றது. உள்ளடக்கங்களுக்கு கட்டுரையாசிரியரே பொறுப்புக்குரியவர்: ஆசிரியர் குழு, 4TamilMedia)

0 Responses to ஐரோப்பிய ஒன்றியம் எடுக்கப் போகும் முடிவினால் இலங்கைத் தீவில் மாற்றங்கள் ஏற்படுமா? - நிலாந்தன்