Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

எமது இனத்தின் வரலாற்றையும் தனித்தன்மையையும் உரிய முறையில் ஆவணப்படுத்துவதன்மூலமே எமது இனத்தின் இருப்பை தக்கவைக்க முடியும். தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் வடமாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன் தெரிவிப்பு.

ஒரு இனத்தின் இருப்பை, அதன் பண்பாடுகளை , கலாசார விழுமியத்தை அழிக்க வேண்டுமெனில் முதலில் அவ்வினத்தின் அறிவுக்களஞ்சியங்களை அழிக்க வேண்டும். இவ்வாறான கபட நோக்கத்துடனேயே 1981 ஆம் ஆண்டு தமிழர்களின் அறிவுக்களஞ்சியமான , தெற்காசியாவிலேயே இரண்டாவது பெரிய நூலகமாகத்திகழ்ந்த எமது யாழ்.பொது நூலகம் தீயவர்களால் தீ வைக்கப்பட்டது. அவ்வாறானவர்களே இன்றும் எமது இனத்தின் இருப்பை அழிக்கும் கபடநோக்கத்துடனேயே எமதுகலாசார விழுமியங்களை அழிக்க முயன்று வருகின்றனர். இவற்றைத்தடுத்து எமது வரலாறுகளை உரியமுறையில் ஆவணப்படுத்த வேண்டும்.

இவ்வாறு  24.10.2014 வெள்ளிக்கிழமை சுன்னாகம் இராமநாதன் கல்லூரியில் பிற்பகல் 01 மணியளவில் அதிபர் திருமதி.கமலராணி கிருஸ்ணபிள்ளை தலைமையில் இடம்பெற்ற தேசிய வாசிப்பு மாத நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றிய தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் வடமாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன் தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில் எமது இனத்தின் வரலாறுகள் ஆவணப்படுத்தப்படுவது அவசியம். அன்று எமது முன்னோர்கள் இந்த இராமநாதன் கல்லூரியின் வரலாறுகளை ஆவணப்படுத்தியதால் தான் நாம் இன்று அதன் வரலாறுகளையும், பெருமைகளையும், சிறப்புக்களையும் அறிய முடிகின்றது. இதே போன்று எம்மினத்தின் வரலாறுகளும் பண்பாட்டுக்கலாசார எச்சங்களும் பாதுகாக்கப்படவேண்டும். இதன்மூலம் நாம் எம்மினத்தின் இடையறாத வரலாற்றுப்பாரம்பரியங்களை நம் அடுத்த தலைமுறைக்கு எடுத்துச்செல்ல முடியும். இல்லாவிடில் ஆக்கிரமிப்பாளர்களின் வரலாறே எமது வரலாறாகிவிடும். எமது இனத்தின் வரலாற்றையும் தனித்தன்மையையும் உரிய முறையில் ஆவணப்படுத்துவதன்மூலமே எமது இனத்தின் இருப்பை தக்கவைக்க முடியும்.

கடந்த காலத்தில் இந்த இராமநாதன் கல்லூரியின் நூலகமும் இலக்கு வைக்கப்பட்டு அழிவைச்சந்தித்திருந்தமையையும் மறந்து விடமுடியாது. இவ்வாறான நிலையில் வரலாற்றை ஆவனப்படுத்தும் இந்த “இராம ஒளி” இதழானது காலத்தின் தேவைகருதிய சிறந்த முயற்சியாகும்.பாடசாலை மாணவர்களாகிய நீங்கள் உலகின் மூத்த மொழியான எமது தமிழ்மொழியையும் எம்பண்பாடு கலாசார விழுமியங்களையும் அழிக்க முயற்சிப்போரிடமிருந்து காப்பாற்றி அழிந்து போன எம் வரலாறுகளையும் உயிர்ப்பூட்ட முன்வரவேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இந் நிகழ்வில் வடமாகாண சபை உறுப்பினர் பாலச்சந்திரன் கஜதீபன் பிரதம விருந்தினராகவும்.உடுவில் கோட்டக்கல்விப் பணிப்பாளர் தி.தர்மலிங்கம் மற்றும் சுன்னாகம் வாழ்வகத் தலைவர் ஆ.ரவீந்திரன்,சிவபூமி அறக்கட்டளையின் தலைவர் கலாநிதி ஆறு.திருமுருகன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகவும் கலந்து கொண்டனர். ‘இராம ஒளி’ நூலை வடமாகாண சபை உறுப்பினர் கஜதீபன் வெளியிட்டு வைக்க முதற் பிரதியை மிலேனியம் ரெஸ்ரோரண்ட் உரிமையாளர் எஸ்.சுகுமாரன் பெற்றுக் கொண்டதுடன். கௌரவப் பிரதியை யாழ்.மாவட்ட பஸ் உரிமையாளர் சங்கத் தலைவர் பொ.கெங்காதரன் பெற்றுக் கொண்டார். நூலின் வெளியீட்டுரையை யாழ்.பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பொ.பாலசுந்தரம்பிள்ளை ஆற்றியதுடன் நயப்புரையை கிளிநொச்சி மத்திய கல்லூரி ஆசிரியர் ந.குகபரன் நிகழ்த்தினார். நிகழ்வில் மாணவர்களின் பல்வேறு கலை நிகழ்வுகளும் இடம்பெற்றதுடன், தேசியவாசிப்பு மாதத்தை முன்னிட்டு மாணவிகள்,மற்றும் விசேட தேவையுடைய மாணவிகளிடையே நடாத்தப்பட்ட பல்வேறு போட்டிகளிலும் வெற்றி பெற்றோருக்கான பரிசளிப்பு இடம்பெற்றது.விருந்தினர்கள் பரிசில்களை வழங்கி வைத்தனர்.

0 Responses to எமது இனத்தின் வரலாற்றை ஆவணப்படுத்துவன் மூலமே எமது இருப்பைத் தக்க வைக்க முடியும் - கஜதீபன்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com