Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

நிலச்சரிவில் சிக்கிய மலையகத் தமிழர்களை மீட்கவும் மறுவாழ்வு கொடுக்கவும் இந்திய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென மதிமுக செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

இலங்கையின் பதுளை மாவட்டத்தில் உள்ள மீரியபெத்த எனும் இடத்தில் மழையின் காரணமாக ஒக்டோபர் 29 ம் திகதி ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 200 தமிழர்கள் புதையுண்டு உயிர் இழந்தனர்.

மேலும், 500 தமிழர்களைக் காணவில்லை என்ற அதிர்ச்சிகரமான தகவல்கள் வருகின்றன. கொஸ்லாந்த பகுதியில் பெருமளவு வீடுகள் இடிந்து போயிருக்கின்றன.

மலையகத் தமிழர்கள் வாழும் தேயிலைத் தோட்டக் குடியிருப்புத் தமிழர்கள் மண் சரிவு அபாயம் உள்ளவை என்று பல ஆண்டுகளுக்கு முன்பே சுற்றுச் சூழல் பாதுகாப்பு மையம் எச்சரித்து இருந்தது.

ஆயினும், தேயிலைத் தோட்டங்களில் வாழும் மலையகத் தமிழர்களைப் பாதுகாப்பான இடங்களில் குடியேற்ற இலங்கை அரசு நடவடிக்கை எடுக்கவில்லை.

இந்திய வம்சாவளி மலையகத் தமிழர்கள் தங்கள் இரத்தத்தைச் சிந்தி தேயிலை, காபி தோட்டங்களை உருவாக்கியவர்கள். கடும் உழைப்பைக் கொடுத்து இன்றும் இலங்கையின் வளமான பொருளாதார வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பவர்கள்.

அவர்கள் பல தலைமுறைகளாக மலையகத்தில் பெருந்தோட்டத் தொழிலாளர்களாக வாழ்ந்து வந்த போதிலும், 1948 ஆம் ஆண்டு இலங்கை அரசு கொண்டு வந்த குடிஉரிமைச் சட்டத்தாலும், 1964 ஆம் ஆண்டில் ஏற்பட்ட இந்தியப் பிரதமர் சாஸ்திரி- இலங்கை பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்க ஒப்பந்தத்தாலும் பத்து இலட்சம் பேர்களது குடி உரிமை பறிக்கப்பட்டு, நாடற்றவர்கள் ஆக்கப்பட்டனர்.

உலகிலேயே வேறு எங்கும் இந்தக் கொடுமை நடக்கவில்லை.

இலங்கை அரசின் வஞ்சகத்தாலும், பாரபட்சமான அணுமுறையினாலும் வாழ்வுரிமைகளை இழந்த மலையகத் தமிழர்களை இயற்ககையும் வஞ்சிக்கின்றது.

நிலச்சரிவில் சிக்கியுள்ள மலையகத் தமிழர்களை மீட்கவும், உடைமைகளை இழந்து தவிக்கும் மக்களைப் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கவும், நிவாரண உதவிகள் வழங்கவும் இந்திய அரசு அறிவுறுத்த வேண்டும் என்று வலியுறுத்துகின்றேன்.

என குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழக மீனவர்களுக்கு மரண தண்டனை- இந்திய அரசு தலையிட வேண்டும்! வைகோ அறிக்கை

தமிழக மீனவர்கள் ஐந்து பேருக்குத் தூக்குத் தண்டனை வழங்கி இலங்கை நீதிமன்றம் இன்று வழங்கி உள்ள தீர்ப்பு மிகுந்த அதிர்ச்சி அளிக்கின்றது.

2011, நவம்பர் 28-ஆம் திகதி இராமநாதபுரம் தங்கச்சிமடத்தைச் சேர்ந்த மீனவர்கள் எமர்சன், வில்சன், அகஸ்டன், லாங்லெட் மற்றும் பிரசாந்த் ஆகிய ஐந்து பேரும் கச்சதீவு அருகில் மீன் பிடித்துக் கொண்டு இருந்தனர். அவர்கள் எல்லை தாண்டி வந்ததாகக் கூறி சிங்களக் கடற்படை கைது செய்தது. ஆனால்,  போதைப்பொருள் கடத்தியதாகப் பொய்வழக்குப் புனைந்து சிறையில் அடைத்தது.

மீனவர்களை விடுதலை செய்யக் கோரி இராமேஸ்வரம் மீனவர்கள் மூன்று ஆண்டுகளாகப் பல போராட்டங்களை நடத்தி வந்தனர்.

இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்து வந்த கொழும்பில் உள்ள உயர் நீதிமன்றம் தமிழக மீனவர்கள் ஐவருக்கும் மரண தண்டனை விதித்து இன்று தீர்ப்பு அளித்து உள்ளது.

இலங்கையில் நீதித்துறை என்பது ராஜபக்சவின் கைப்பாவையாகத்தான் செயற்பட்டு வருகின்றது. தமிழக மீனவர்கள் 578 பேரை சிங்களக் கடற்படை சுட்டுக் கொன்றுள்ளது.

தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்துவதும், கைது செய்து சித்திரவதைகள் செய்து  சிறையில் அடைத்து வைப்பதும், மீனவர்களின் உயிர் உடமைகளைப் பறிப்பதும் சிங்களக் கடற்படைக்குப் பொழுதுபோக்காக ஆகிவிட்டது. இதன் உச்சமாகத்தான் இப்போது,  நீதிமன்றம் தூக்குத்தண்டனை விதித்துள்ளது.

1934ம் ஆண்டில் இருந்து இலங்கையில் எந்த நீதிமன்றமும் தூக்குத்தண்டனை தீர்ப்பு அளித்தது இல்லை. தற்போது தமிழக மீனவர்கள் ஐந்து பேருக்கு மரண தண்டனை அளித்து இருப்பதற்கு, தமிழ் இனத்தின் மீது ராஜபக்ச கொண்டு இருக்கின்ற வெறுப்பும் காழ்ப்புணர்ச்சியும்தான் காரணம்.

தமிழக மீனவர்கள் மீது பொய் வழக்கு போட்டு, தூக்குத்தண்டனை விதிக்கக் கூடிய அளவுக்கு ராஜபக்ச கூட்டத்திற்குத் திமிரும் நெஞ்சழுத்தமும் ஏற்பட்டுள்ளதற்கு இந்திய அரசுதான் காரணம். முந்தைய காங்கிரஸ் அரசைப் போலவே, ஏன் அதைவிட ஒருபடி மேலே சென்று பாரதிய ஜனதா அரசு தமிழர்களுக்கு எதிரான வன்மத்தைக் கடைபிடித்து வருகின்றது.

ஈழத் தமிழர்களைக் கொன்று குவித்த கொலைகாரன் ராஜபக்சவுடன் கை குலுக்குவதும், இலங்கை அரசியல் உறவு பற்றிச் சிலாகிப்பதும் பா.ஜ.க. சார்பில் சில முகவர்களை அனுப்பி ராஜபக்சவுக்கு பாராட்டுப் பத்திரம் வாசிப்பதும் தொடர்கின்றது.

இந்திய அரசின் சார்பில் இராணுவ அதிகாரிகளை இலங்கைக்கு அனுப்பி வைத்து சிங்கள ராஜபக்ச அரசைப் புகழ்ந்து உரைப்பதும், பொருளாதார ஒப்பந்தங்களை வலுப்படுத்துவதும் தமிழர்களின் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுகின்றன. இதன் எதிரொலியாகத்தான் இலங்கை நீதிமன்றம் தமிழ்நாட்டு மீனவர்களுக்கு தூக்குத் தண்டனை விதித்து இருக்கின்றது.

இந்திய அரசு உடனடியாக உரிய நடவடிக்கை மேற்கொண்டு தூக்குத் தண்டனையை இரத்து செய்து ஐந்து தமிழக மீனவர்களைக் காப்பாற்ற வேண்டும் என்று வலியுறுத்துகின்றேன்.

சிங்கள இனவெறியனுக்கு அஞ்சல் தலையா?

தமிழர்களைப் பூண்டோடு கரு அறுக்கத் துடிக்கும் ராஜபக்சவுக்கு மோடி அரசு ஆதரவாக இருப்பது மட்டும் அன்றி,  சிங்கள பௌத்தத் துறவி அனகாரிகா தர்மபாலாவுக்கு சிறப்பு அஞ்சல் தலையும் வெளியிட்டு உள்ளது.

ஒக்டோபர் 26 ஆம் தேதி, குடியரசுத் தலைவர் மாளிகையில், குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, இந்த அஞ்சல் தலையை வெளியிட்டுள்ளார். மத்திய தகவல் தொடர்பு அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் நிகழ்ச்சியில் பங்கேற்று உள்ளார்.

சிங்கள இனவெறிக் கொள்கையை வாழ்நாளெல்லாம் பிரதிபலித்து வந்த பௌத்தத் துறவி தர்மபாலாவுக்கு இப்போது அஞ்சல் தலை வெளியிட வேண்டிய தேவை என்ன?

சிங்களவர்களே இலங்கையை ஆளப்பிறந்த ஆரிய வம்சம், ஏனைய தமிழர்களும், முஸ்லிம், கிறித்தவ மக்களும் சிங்கள இனத்துக்கு அடிமைகள் என்று கொக்கரித்தவர்  தர்மபாலா. இவருடைய இனவெறிக் கருத்துகள்தான் சிங்கள தேசிய வெறிகொண்ட பொதுபலசேனா போன்ற அமைப்புகளை வழி நடத்துகின்றன.

இலங்கையில் இந்து, முஸ்லிம் மற்றும் கிருத்தவ சிறுபான்மை மக்கள் மீது தாக்குதல் நடத்துவதைக் கண்டிக்காத இந்திய அரசு, பௌத்தத் துறவி அனகரிகா தர்மபாலாவுக்கு சிறப்பு அஞ்சல் தலை வெளியிட்டு புகழாரம் சூட்டுகின்றது.

பா.ஜ.க. அரசின் இத்தகைய போக்கு தமிழர்களுக்கு எதிரானது என்று எச்சரிப்பதுடன், பௌத்தத் துறவி தர்மபாலாவுக்கு சிறப்பு அஞ்சல் தலை வெளியிட்டதற்குக் கடும் கண்டனத்தையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.

0 Responses to மலையகத் தமிழர்களுக்கு மறுவாழ்வு கொடுக்கவும்! இந்தியாவிடம் வைகோ கோரிக்கை

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com