Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இலங்கையில் இடம்பெற்ற போரின் போது நிகழ்ந்த போர் குற்றங்கள் உட்பட மோசமான மனித உரிமை மீறல்கள் தொடர்பில் விசாரணை நடத்திவரும் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் விசாரணைக் குழுவின் நம்பகத்தன்மை தொடர்பில் கேள்வி எழுப்பிய இலங்கை மீது ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் சயீட்ராத் அல் உசைன் கடும் கண்டனம் வெளியிட்டுள்ளார்.

ஐ.நா விசாரணைக்கு ஒத்துழைக்கும் மனித உரிமை செயற்பாட்டாளர்கள் மற்றும் தனி நபர்களை அச்சுறுத்திவரும் இலங்கை அரசின் நடவடிக்கைகளையும் மனித உரிமைகள் ஆணையாளர் கண்டித்துள்ளார்.

ஐ.நா விசாரணைக் குழுவிற்கு சாட்சிகளை வழங்க முன்வருபவர்கள் தொடர்பில் பொய்யான குற்றச்சாட்டுக்களை சுமத்தி, அவர்களை அச்சுறுத்தி தடுப்பதன் ஊடாக ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் தீர்மானத்திற்கு அமைய ஐ.நா விசாரணைக்குழுவின் நடவடிக்கைகளை நயவஞ்சகமான முறையில் தடுக்க இலங்கை அரசாங்கம் முனைந்துள்ளதாகவும் மனித உரிமைகள் ஆணையாளர் கடுமையாக கடும் ஆத்திரம் வெளியிட்டுள்ளார்.

ஐ.நா விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க ஆரம்பம் முதல் மறுத்துவரும் இலங்கை அரசு, ஐ.நா விசாரணைக் குழுவிற்கும் இலங்கைக்குள் சென்று விசாரணைகளை நடத்த அனுமதி மறுத்துவிட்ட நிலையில் எதற்காக அந்த விசாரணைக் குழுவின் நம்பகத்தன்மை தொடர்பில் கேள்வி எழுப்ப வேண்டும் என்றும் மனித உரிமைகள் ஆணையாளர் செயீட் கேள்வி எழுப்பியுள்ளார்.

அதேவேளை இலங்கை அரசாங்கத்திற்கு மறைப்பதற்கு ஒன்றுமில்லை என்றால் எதற்காக ஐ.நா விசாரணைகளை குழப்புவதற்கான சதியில் ஈடுபட வேண்டும் என்றும் மனித உரிமைகள் ஆணையாளர் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஐ.நா விசாரணைக் குழுவிற்கு சாட்சியமளிக்க முன்வருபவர்களை அச்சுறுத்தும் நடவடிக்கைகள் ஏற்றுக்கொள்ள முடியாதவை என்றும் தெரிவித்துள்ள ஐ.நா மனித உரிமை ஆணையாளர், ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் உறுப்பு நாடொன்று இவ்வாறு நடந்துகொள்வது ஐ.நா சாசனத்தையே மீறும் செயல் என்றும் தெரிவித்துள்ளார்.

2009 ஆம் ஆண்டு முடிவுக்கு கொண்டுவரப்பட்ட யுத்தத்தின் இறுதிக்கட்டத்தில் போர் குற்றங்கள் உட்பட மோசமான மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றுள்ளதாக பரந்தளவில் குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ள நிலையில் அவை குறித்து சுயாதீன விசாரணைகள் நடத்தப்படுவதையும் இலங்கை அரசு ஆரம்பம் முதல் கடுமையாக எதிர்த்து வருவதையும் எந்தவிதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார்.

மனித உரிமை செயற்பாட்டாளர்கள் மற்றும் பொது அமைப்புக்களை தொடர்ச்சியாக கண்காணிப்புக்கு உட்படுத்திவருவது குறித்தும் அவர்களை அச்சுறுத்திவருவது தொடர்பிலும் தனது கண்டனத்தையும் எதிர்ப்பையும் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பதிவுசெய்துள்ளார்.

ஐ.நா விசாரணைக் குழுவிற்கு சாட்சியங்கள் வழங்க முன்வருபவர்களை அச்சுறுத்தி தடுத்து நிறுத்துவதன் ஊடாக உண்மையான சாட்சியங்கள் விசாரணைக் குழுவிற்கு கிடைக்கப்பெறுவதை தடுக்கும் நோக்கிலேயே திட்டமிட்டு இலங்கை அரசாங்கம் இவ்வாறு நடந்துகொள்வதாகவும் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

அதேவேளை ஐ.நா விசாரணைக் குழுவிற்கு சாட்சியங்களை கையளிப்பதற்கான படிவங்களை வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் கிளிநொச்சியில் கைது செய்யப்பட்ட சின்னத்தம்பி கிருஷ்ணராசாவை முன்னாள் போராளி என்றும், வெற்றுக் காகிதங்களில் போரினால் பாதிக்கப்பட்ட மக்களிடம் கையொப்பம் பெற்றதாகவும் இலங்கை அரசு தெரிவித்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பிலும் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் கடும் கண்டனம் வெளியிட்டுள்ளார்.

இலங்கை அரசு போலியான விசாரணைகளை நடத்தி, இவ்வாறான பொய்குற்றச்சாட்டுக்களை சுமத்துவதை முதலில் நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றும் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் கடும் தொணியில் வலியுறுத்தியுள்ளார்.

0 Responses to இலங்கையின் செயற்பாடுகள் தொடர்பில் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் கடும் கண்டனம்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com