Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

வடக்கிலுள்ள தமிழ் மக்கள் தமது சொந்தக் காணிகளில் குடியேற முடியாமல் இன்னமும் முகாம்களில் தவிக்க, அந்த மக்களின் காணிகளை அபகரித்துள்ள இராணுவம் அங்கு ஹோட்டல்களையும், கோல்ப் மைதானங்களையும் அமைத்து வருவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது.

2015ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் மீது பாராளுமன்றத்தில் இடம்பெற்று வரும் விவாதத்தில் கலந்து கொண்டு பேசும் போதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “நாட்டினுடைய ஜனாதிபதியும், நிதி அமைச்சருமான மஹிந்த ராஜபக்ஷ 2015 இல் வரக்கூடிய ஜனாதிபதி தேர்தலை இலக்காகக் கொண்டு தனது 10 ஆவது வரவு செலவு திட்டத்தை சமர்ப்பித்துள்ளார்.

தேனும், பாலும் தடவி, நாட்டின் சகலதுறை மக்களுக்கும் மீட்சியை கொடுக்கும் ஒருவரவு செலவுத் திட்டமாகவும் ஜனாதிபதி இதனைக் காட்ட முனைந்துள்ளார். துறைசார் ஊழியர்கள், மாணவர்கள், ஓய்வூதியம் பெறுவோர் என எல்லாத்தரப்பினருக்கும் நிவாரணம் அளிப்பது போன்ற மாயத்தோற்றம் ஒன்றை காட்டவும் ஜனாதிபதி முனைந்துள்ளார்.

2015 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் பெரும்பான்மை வாக்குகளை பெற்றுக் கொள்ளும் கபடத்தனத்தைத் தவிர வேறு எதனையும் இந்த வரவு செலவுத்திட்டத்தில் எதிர்பார்க்க முடியாது.

ஜனாதிபதியின் முன்மொழிவுகளுக்கான பணத்தை எங்கிருந்து எடுக்கப் போகின்றார் என்பது பற்றி அவரது உரையில் எங்கும் குறிப்பிடவில்லை. அவரது வரவு செலவு திட்டத்தை அமுல்படுத்துவதற்கு முன்பாகவே தேர்தல் வந்து விடும், எனவே இலகுவாக மக்களை ஏமாற்றிவிட முடியும் என்பதுதான் ஜனாதிபதியின் எண்ணமாகவும் இருக்கும்.

17 ஆவது திருத்தச் சட்டம் அகற்றப்பட்டு, நீதி மன்றம், பொதுச் சேவை, பொலிஸ் சேவை, இலஞ்ச ஒழிப்பு, மனித உரிமை, தேர்தல் ஆணையாளர் என அனைத்துமே அரசியல் மயமாக்கப்பட்டு ஒரு குடும்பத்தை பாதுகாப்பதற்கும், பராமரிப்பதற்கும் என்று ஆனபிறகு இவற்றின் நடவடிக்கைகளுக்காக ஒதுக்கப்படும் பல ஆயிரம் மில்லியன்களால் மக்களுக்கு என்ன பிரயோசனம்.

யுத்தம் முடிந்து 5 வருடமாகியுள்ள நிலையில் பாதுகாப்பு செலவீனம் அதிகரிப்பட்டுகொண்டிருப்பதன் நோக்கமென்ன? யுத்தம் இல்லாத நாட்டில் யுத்த வரவு செலவுத்திட்டம் சமர்ப்பிக்கப்பட்டிருக்கின்றது. பாதுகாப்பிற்காக 285 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

வடக்கு மாகாணம் இராணுவ ஆக்கிரமிப்புக்குள்ளாக்கப்பட்டிருக்கின்றது. தனியாருக்கு சொந்தமான 67000 ஏக்கருக்கு மேற்பட்ட காணிகள் இராணுவ தேவைகளுக்கான கபளீகரம் செய்யப்பட்டிருக்கின்றன.

மக்கள் மீள் குடியேற முடியாமல் முகாங்களில் நிர்க்கதியாய் இருக்க, அவர்களது காணிகளில் இராணுவம் விவசாயம் செய்வதும், கொல்ப் மைதானம் அமைப்பதும், ஹோட்டேல்கள் கட்டுவதும் எமது மண்ணில்தான் நடைபெறுகின்றது.

புலிகள் முழுமையாக அழிக்கப்பட்டு விட்டார்கள். அவர்களால் இனி தலைநிமிர முடியாது எனப் பிராசாரத்தை மேற்கொள்ளும் அரசு, விடுதலைப்புலிகளை எவ்வாறு அழித்தோம் என்பதை சர்வதேச சமூகத்திற்கு கற்றுக் கொடுப்பதற்காக வருடாந்தம் பாரிய மநாடுகளையும் நடத்தி வருகின்றது.

பயங்கரவாதத்தை அழித்த முதலாவது நாடு என்று மார்தட்டிக் கொள்ளும் அரசாங்கம், என்ன காரணத்திற்காக பாதுகாப்பு செலவீனங்களை அதிகரித்து வருகின்றது என்பதையும் வெளிப்படுத்த வேண்டும்.

இலங்கை இராணுவத்தில் உள்ள இரண்டு இலட்சம் பேரில் வடக்கில் 150,000 இராணுவம் நிலை நிறுத்தப்பட்டுள்ளது. 10 இலட்சம் மக்கள் உள்ள வடக்கு மாகாணத்திற்கு 150,000 இராணுவம் தேவையா என்பதை தமிழ் மக்கள் கேட்கின்றார்கள். சராசரியாக 6 தமிழ் மக்களுக்கு 1 இராணுவம் என்ற விகிதாசாரத்தில் இருக்கின்றது. இவ்வாறான 6:1 என்ற நிலை இலங்கையில் அதிலும் வடக்கு மாகாணத்தில் மட்டும்தான் படைப்பிரசன்னம் இருக்கின்றது.

ஏறத்தாழ 20 இலட்சம் மக்கள் கொண்ட தென்பகுதியில் 30 ஆயிரம் இராணுவம் மாத்திரமே நிலை கொண்டுள்ளது. அது 666 மக்களுக்கு 1 இராணுவம் என்ற அடிப்படையிலேயே அங்கு நிறுத்தப்பட்டுள்ளது, தமிழ் மக்களை இவ்வளவு மோசமான இராணுவ அடக்கு முறைக்குள் வைத்துக் கொண்டு என்ன அடிப்படையில் நீங்கள் வரவு செலவுத்திட்டத்திற்கு ஆதரவு கேட்பீர்கள்? இல்லையேல் என்ன அடிப்படையில் ஜனாதிபதி தேர்தலுக்கு தமிழ் மக்கள் மத்தியில் வாக்கு கேட்பீர்கள்?

பாகிஸ்தான், பர்மா, ஈராக், லிபியா போன்ற நாடுகளைப் போன்று எமது ஜனாதிபதியும் ஓர் இராணுவ ஆட்சியை நோக்கி பயணிப்பது மிகத் தெளிவாக தெரிகின்றது. ஆனால் அந்த நாடுகள் எவ்வளவு மோசமான பாதிப்புக்களை அடைந்துள்ளது என்பதும், ஜனநாயகம் எவ்வளவு தூரம் அங்கு கேலிக்குள்ளாக்கப்படுகின்றது என்பதையும் சிங்கள மக்கள் உணர வேண்டும்.

இன்று தமிழ் மக்களுக்கெதிராகத்தான் இராணுவம் செயற்படுவதாக பெரும்பான்மை சிங்கள மக்கள் யோசிக்கலாம். ஆனால் அது நாளை சிங்கள மக்களுக்கெதிராகவும் மாறும். வெலிவேரியாவில் தண்ணீர் கேட்ட மக்களுக்கு இலங்கை இராணுவம் கொடுத்த பரிசு என்ன என்பதை சற்று சிந்தித்துப் பாருங்கள்” என்றுள்ளார்.

0 Responses to மக்களின் காணிகளில் இராணுவம் ஹோட்டல்களையும், கோல்ப் மைதானங்களையும் அமைக்கிறது: சுரேஷ்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com