Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

மலையகத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வட-கிழக்கில் காணிகளை வழங்க தயாராக இருப்பதாக கூட்டமைப்பு அறிவித்துள்ளது. ஏற்ற மாற்றுத் திட்டங்களை அரசு முன்னெடுக்காவிட்டால் அவர்களுக்கு வடக்கு - கிழக்கில் இடம் இருக்கின்றது என்பதை மீண்டும் வலியுறுத்தியுள்ள தமிழ்த் தேசிய கூட்டமைப்பு, எங்களுடைய பயணம் என்பது எந்தவித அரசியல் நோக்கமும் கொண்டதல்ல. மலையக மக்களிடம் நாங்கள் வாக்குகேட்டு வரப்போவதுமில்லை என்றும் குறிப்பிட்டுள்ளது.

குறித்த பிரதேசத்தில் மண்சரிவு அபாயம் உள்ளதென ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த போதிலும் ஊவா மாகாண அமைச்சராக இருக்கும் செந்தில் தொண்டமானும் சரி, ஏனைய அமைச்சர்களும் சரி இந்த மக்கள் தொடர்பாக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் கூட்டமைப்பு கேள்வி எழுப்பியுள்ளது.

கொஸ்லந்தை, மீரியாபெத்தயில் இடம்பெற்ற மண்சரிவினால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சென்று பார்வையிட்ட தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், பாதிக்கப்பட்ட மக்களுக்கு வடக்கு – கிழக்கில் வீடுகள் வழங்கத் தயாராக இருப்பதாக அறிவித்திருந்தனர்.

அவர்களின், இந்த கருத்து தொடர்பில் அரசியல்வாதிகள் பல்வேறு கருத்துக்களை வெளியிட்டு வருவதுடன், ஊடகங்களிலும் இது தொடர்பில் செய்திகள் வெளியாகி வருகின்றன. இந்நிலையில், அரசியல்வாதிகளின் இந்த மாற்றுக் கருத்துக்களுக்கு பதிலளிக்கும் வகையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் ஊடகப் பேச்சாளருமான சுரேஷ்பிறேமசந்திரன் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், பதுளை - கொஸ்லந்தைக்கு போனதென்பது, இயற்கை அனர்த்தத்தினால் பாரியளவில் பாதிக்கப்பட்டு தமது உறவுகள், உடமைகளை இழந்த மக்களுக்கு, வட - கிழக்கு தமிழ் மக்களின் அனுதாபங்களையும் அவர்களது துன்பங்களில் நாங்களும் பங்கெடுக்கின்றோம் என்பதையும் தெரிவிக்கும் நோக்கத்திலாகும்.

வடக்கு - கிழக்கில் பல்வேறுபட்ட கால கட்டங்களில் ஏற்பட்ட கலவரங்கள் காரணமாக இடம்பெயர்ந்து வந்து, வடக்கு - கிழக்கில் குடியேறிய பல்லாயிரக்கணக்கான மலையக மக்கள் கிளிநொச்சி, வவுனியா, முல்லைத்தீவு மற்றும் கிழக்கு மாகாணத்தின் பல பகுதிகளிலும் வசிக்கின்றார்கள்.

பாதிக்கப்பட்டவர்களில் அவர்களுடைய உறவுகளும் இருப்பார்கள் என்பதும், அவர்கள் தொடர்பாக அக்கறைப்பட வேண்டிய கடமைப்பாடு அம்மக்களால் தெரிவு செய்யப்பட்ட எமக்கு இருக்கின்றது என்பதையும் எமக்கு எதிரான கருத்துக்களை முன்வைத்துள்ள செந்தில் தொண்டமான் புரிந்துகொள்ள வேண்டும்.

2005ஆம் ஆண்டிலும், 2011ஆம் ஆண்டிலும் மண்சரிவுகள் ஏற்படக்கூடிய அபாயங்கள் இருக்கின்றன என்பதை இலங்கை அரசாங்கம் தெரிவித்ததாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸே தெரிவித்துள்ளது. அப்படி கூறப்பட்டிருப்பின், ஊவா மாகாண அமைச்சராக இருக்கும் செந்தில் தொண்டமானும் சரி, ஏனைய அமைச்சர்களும் சரி இந்த மக்கள் தொடர்பாக என்ன நடவடிக்கை இதுவரை எடுத்திருக்கின்றீர்கள் என்று கேட்கிறோம்.

பாரிய அழிவுகள் ஏற்பட்ட பின்பும், ஆளும் கட்சியில் இருக்கின்றோம் என்பதற்காக ஏனையோரில் குற்றம் காணுவதில் எந்தவித அர்த்தமும் இல்லை. அதுமாத்திரமல்ல, மலையகத்துக்கான எங்களுடைய பயணம் என்பது எந்தவித அரசியல் நோக்கமும் கொண்டதல்ல. மலையக மக்களிடம் நாங்கள் வாக்குகேட்டு வரப்போவதுமில்லை.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பென்பது அடக்கப்பட்ட மக்களின் பிரதிநிதிகளாக செயற்படுபவர்கள். ஆகவே அடக்கப்பட்ட, பாதிக்கப்பட்ட மக்கள் மலையகத்தில் இருந்தாலும், வேறு எங்கிருந்தாலும் குரல் கொடுக்க வேண்டியது எங்கள் கடமை. ஆகவே அவ்வாறு பேசக் கூடாதென்று யாரும் எமக்கு தடையுத்தரவு போடமுடியாது.

செந்தில் தொண்டமான் கண்டனம் தெரிவிக்கும் அளவுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒன்றும் பிழையாக நடக்கவில்லை. ஏற்கனவே பல்லாயிரக்கணக்கான மலையக தமிழ் மக்களுக்கு காணிகள் வழங்கி அவர்கள் நிரந்தர குடிகளாக இருப்பதை உறுதிப்படுத்தியவர்கள் நாங்கள்.

யுத்தத்தினால் நாங்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றோம் என்பதும், எமது மக்களின் காணிகளை இராணுவம் பறித்தெடுக்கின்றது என்பது உண்மை. ஆனால் அவற்றை நாங்கள் பெற்றுக்கொள்ள இறுதிவரை போராடுவோம் என்பதையும், மலையகத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஏற்ற மாற்றுத் திட்டங்களை அரசு முன்னெடுக்காவிட்டால். அவர்களுக்கு வட கிழக்கில் இடம் இருக்கின்றது என்பதையும் மீண்டும் வலியுறுத்தி கூற விரும்புகின்றேன்.

தலைவர் சௌமியமூக்த்தி தொண்டமான் அவர்கள் மலைய தமிழ் மக்களுக்கு மாத்திரமல்லாமல் வட, கிழக்கு தமிழ் மக்களுக்கும் அவர் தலைவராக இருந்தார் என்பதையும் அவரது பேரனாக இருக்ககக் கூடிய செந்தில் தொண்டமான் அவர்கள் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதுடன், அவரது பாதையில் பயணிப்பார் எனவும் எதிர்பார்க்கிறோம் கூட்டமைப்;பு சார்பாக அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

0 Responses to மலையக மக்களிற்கு வட- கிழக்கில் வீடு வழங்க தயார்! மீண்டும் கூட்டமைப்பு அறிவிப்பு!!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com