Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இந்தக் கட்டுரை எழுதிக் கொண்டிருக்கும் நாள் வரையில் தமிழ் மக்களின் பிரதான அரசியல் சக்தியான தமிழ் தேசியக் கூட்டமைப்பு அதன் உத்தியோகபூர்வ முடிவை அறிவித்திருக்கவில்லை. கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுத் தலைவர் இரா. சம்பந்தன் தற்போது இந்தியாவில் தங்கியிருக்கின்ற நிலையிலேயே கூட்டமைப்பின் முடிவு தாமதமாகிவருகிறது அல்லது முடிவு திட்டமிட்டே தாமதப்படுத்தப்படுகிறது. சில வேளைகளில் தாமதப்படுத்தலும் கூட, ஒரு வகையான அரசியல் உக்திதான்.

நிலைமைகளை துல்லியமாக அவதானித்து இறுதியில் முடிவை எடுப்பதன் மூலம் வரக்கூடிய சில ஆபத்துக்களை தவிர்த்துக்கொள்ள முடியும். ஆனால், கூட்டமைப்பு நான்கு கட்சிகளின் கூட்டு என்னும் வகையில் தேர்தல் தொடர்பான தகவல்கள் அனைத்தும் கட்சித் தலைவர்களுடனும் பகிரப்பட்டிருக்க வேண்டும். அதுவே ஒரு அரசியல் அமைப்பிற்கான ஜனநாயக மரபாகும். ஆனால், ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் கூட்டமைப்பிற்குள் ஆகக் குறைந்தளவு கூட உள்ஜனநாயகம் பேணப்பட்டிருக்கவில்லை என்னும் ஆதங்கம் பங்காளி கட்சிகள் மத்தியில் காணப்படுகிறது. ஆரம்பத்திலிருந்தே ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் கூட்டமைப்பு எடுக்கவேண்டிய முடிவு தொடர்பில் பங்காளிக் கட்சிகள் மத்தியில் எந்தவொரு ஆக்கபூர்வமான கலந்துரையாடலும் இடம்பெற்றிருக்கவில்லை. கூட்டமைப்பிற்குள் பின்பற்றப்பட்டுவரும் வழமையான ஒரு கட்சி மேலாதிக்க – சம்பிரதாயமே நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தல் தொடர்பிலும் பின்பற்றப்பட்டிருக்கிறது.

அதாவது, தமிழரசு கட்சியே தேர்தல் விடயங்களை தனியாக கையாண்டுவருகிறது. தமிழரசு கட்சியென்று சொல்வதிலும் பார்க்க, அதன் சார்பில் இயங்கும் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரனே பிரதானமாக ஈடுபட்டுவருகின்றார். சுமந்திரன் கூட்டமைப்பின் சார்பில் பல்வேறு விடயங்கள் குறித்து எதிரணியைச் சேர்ந்த மைத்திரிபால சிறிசேன, சந்திரிக்கா குமாரதுங்க, ரணில் விக்கிரமசிங்க ஆகியோருடன் பேச்சுவார்த்தையிலும் ஈடுபட்டிருக்கின்றார். ஆனால், பேசப்பட்ட விடயங்களை சுமந்திரன் மூடிமறைக்காமல் ஏனைய கட்சித் தலைவர்களுடன் பகிரவில்லையென்னும் குற்றச்சாட்டு நிலவுகிறது. இந்தப் பின்னணியில்தான் மைத்திரிபால சிறிசேனவின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியாகியிருக்கிறது.

இந்தத் தேர்தல் விஞ்ஞாபனத்தில் தன்னுடைய பங்கும் முக்கியமானதென்றே சுமந்திரன் தெரிவித்திருக்கின்றார். ஆனால், இதிலுள்ள ஆச்சரியம் என்னவென்றால் இந்தத் தேர்தல் விஞ்ஞாபனத்தின் இறுதி வரைபை தான் பார்க்கவில்லை என்று சந்திரிக்கா குமாரதுங்கவும் ரணில் விக்கிரமசிங்கவும் தெரிவித்திருக்கின்றனர். கூட்டமைப்பின் தலைவர்களுடனான சந்திப்பின் போதே இந்தத் தகவலை தெரிவித்திருக்கின்றனர். உண்மையில் தேர்தல் விஞ்ஞாபன தயாரிப்பில் ஆரம்பத்தில் கலாநிதி ஜயம்பதி விக்கிரமவும் சட்டத்தரணி வெல்லியமுனவும் பங்களித்திருந்தனர். ஆனால், இறுதியில் குறித்த தேர்தல் விஞ்ஞாபனத்தின் இறுதி வரைபு ஜாதிக ஹெல உறுமயவினாலேயே பூர்த்தி செய்யப்பட்டிருக்கிறது. தன்னுடைய தேர்தல் விஞ்ஞாபனத்தைக் கூட சுயமாக தீர்மானிக்க முடியாதளவிற்கே மைத்திரிபால இருந்திருக்கின்றார். இந்த விஞ்ஞாபனத்தில் வடக்கு கிழக்கில் வாழும் தமிழ் மக்கள் தொடர்பில் எந்தவொரு வார்த்தையும் இல்லை. மிகவும் மேலோட்டமாகவும் பொதுமைப்படுத்தப்பட்டுமே பிரச்சினைகள் பார்க்கப்பட்டிருக்கின்றன. தமிழில் கூட இந்தத் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிடப்பட்டவில்லை.

இந்த நிலையில், மைத்திரிபாலவிற்கு ஆதரவளிக்குமாறு நாங்கள் எவ்வாறு தமிழ் மக்களை கோர முடியுமென்னும் கேள்வியை கூட்டமைப்பின் ஏனைய மூன்று கட்சித்தலைவர்களும் எழுப்பியிருந்தனர். இதனைத் தொடர்ந்து மைத்திரிபால, சந்திரிக்கா, ரணில் மற்றும் மங்கள சமரவீர ஆகியோரை கூட்டமைப்பின் அனைத்து தலைவர்களும் சந்தித்திருந்தனர். இந்தச் சந்திப்பிற்கான ஏற்பாட்டையும் சுமந்திரனே மேற்கொண்டிருந்தார். ஆனால், அங்கு கிடைத்த அனுபவத்தினால் கூட்டமைப்பின் தலைவர்கள் அதிர்ச்சியடைந்திருக்கின்றனர். இது தொடர்பில் அங்கு நடந்தவற்றை கூட்டமைப்பின் சிரேஸ்ட தலைவர் ஒருவர் என்னிடம் இவ்வாறு விபரித்தார். நாங்கள் சந்திரிக்காவை பார்த்துக் கேட்டோம்.

எங்கள் கேள்விக்கான பதிலாக சந்திரிக்கா ரணிலை பார்த்தார், ரணிலோ மைத்திரியை பார்த்தார், மைத்திரியோ, சந்திரிக்காவையும் ரணிலையும் பார்த்தார். நாங்கள் கேட்டது இதுதான் – சில விடயங்களை உங்கள் தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடுவதிலுள்ள நடைமுறைச் சிக்கல்களை நாங்கள் விளங்கிக் கொள்கின்றோம். ஆனால், வடக்கு – கிழக்கு தமிழ் மக்களின் காணி பிரச்சினைகள், வடக்கு கிழக்கிலுள்ள இராணுவ பிரசன்னம் ஆகியவற்றையாவது நீங்கள் குறிப்பிட்டிருக்கலாமே! ஆனால், இதற்கு மாறி மாறி முகங்களை பார்த்துவிட்டு, இறுதியில் சந்திரிக்கா குறிப்பிட்டார், என்னால் எந்தவொரு உத்தரவாதத்தையும் உங்களுக்குத் தரமுடியாது ஏனெனில், நான் அதற்கான அதிகாரமுள்ள ஒருவரல்ல. அனைத்திற்கும் மைத்திரிதான் பதில்சொல்ல வேண்டும்.

பின்னர் மைத்திரியை பார்த்து, மைத்திரி சொல்லுங்கள் அவர்கள் கேட்பதற்கு என்றார். ஆனால், மைத்திரியோ எதனையும் சொல்ல முடியாமல் தடுமாறினார். ஆனால், காணி பிரச்சினை தொடர்பில் பதிலளித்த ரணில் விக்கிரமசிங்க தேசிய பாதுகாப்பிற்குத் தேவையான காணிகளை தவிர ஏனையவற்றை மக்களிடம் ஒப்படைப்பதில் பிரச்சினைகள் ஒன்றுமில்லை என்றார். இதனைத்தான் கடந்த ஜந்து வருடங்களாக பாதுகாப்பு செயலர் கோட்டபாய ராஜபக்‌ஷவும் சொல்லி வருகின்றார். அவ்வாறாயின் இரண்டு தரப்பினருக்கும் இடையில் என்ன வேறுபாடு? இதிலிருந்து ஒருவிடயம் வெள்ளிடைமலையானது. அதாவது, தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் அவர்களிடம் எந்தவொரு பதிலும் இல்லை. பதில் இல்லாதவர்களிடம் எவ்வாறு பிரச்சினைகளுக்கான தீர்வை எதிர்பார்க்க முடியும்? எனவே, இந்த நிலையில் மைத்திரிபாலவிற்கு பகிரங்க ஆதரவை வழங்க முடியுமா என்னும் கேள்வியுடன் நாங்கள் அனைவரும் வெளியேறினோம். அதேவேளை, மேற்படி சந்திப்பின் போது பிறிதொரு விடயத்தையும் அவதானிக்க முடிந்தது. நாங்கள்தான் வலிந்து எங்களின் உதவி உங்களுக்குத் தேவையா என்று கேட்டோமே தவிர, அவர்கள் எங்களை பெரிதாக பொருட்படுத்தவில்லை. பின்னர் ஏன் நாங்கள் வலிந்து அவர்களின் காலில் விழ வேண்டுமென்றும் எனக்கு விளங்கவில்லை என்றும் அந்த தலைவர் குறிப்பிட்டார்.

இந்தத் தகவல்களின் அடிப்படையில் நோக்கினால் எதிரணி தொடர்பில் சந்தேகங்களே மேலிடுகிறது. எனவே, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் தமிழ் மக்கள் முன்னாலுள்ள சரியான தெரிவு என்ன? என்னும் கேள்வி எழுகிறது. ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் முன்னால் மூன்று தெரிவுகள்தான் உண்டு. ஒன்று, மஹிந்த ராஜபக்‌ஷவை ஆதரிப்பது. இரண்டு, மைத்திரிபால சிறிசேனவை ஆதரிப்பது. மூன்று இருவரையும் நிராகரிப்பது.

இதில், எது தமிழ் மக்களுக்கு நன்மையான முடிவாக இருக்க முடியும்? ராஜபக்‌ஷவை ஆதரித்தல் என்பது தமிழர் மனச்சாட்சிக்கு பொருந்தாத ஒன்று. எனவே, முதலாவது தெரிவு குறித்து விவாதிப்பதில் பொருளில்லை. இப்போது தமிழ் மக்கள் முன்னால் இருப்பது மிகுதியான இரண்டு தெரிவுகள் மட்டுமே! ஒன்றில் மைத்திரிபாலவை ஆதரிப்பது அல்லது கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ் தேசிய விடுதலை முன்னணி குறிப்பிடுவது போன்று தேர்தலை முற்றிலுமாக பகிஷ்கரிப்பது. இதிலுள்ள சாதக பாதகங்கள் என்ன? மைத்திரிபாலவை ஆதரிப்பதே சரியான முடிவு என்று வாதிடுவோர், ஆட்சி மாற்றத்தின் மூலம் நாட்டில் சீர்கெட்டுள்ள ஜனநாயகம் மற்றும் நல்லாட்சியை மீட்டெடுக்க முடியுமென்று வாதிடுகின்றனர். அதாவது, மஹிந்த ராஜபக்‌ஷவின் குடும்ப செல்வாக்கிலிருந்து இலங்கை அரசியலை மீட்டெடுப்பதன் மூலம் இலங்கையில் ஜனநாயகம் மற்றும் நல்லாட்சி என்பற்றை மீட்டுவிடலாம் என்பதே அவர்களின் வாதமாகும்.

ஏனெனில், ராஜபக்‌ஷாக்களை வீழ்த்துதல் என்பதே எதிரணியில் இணைந்திருக்கும் அனைவரதும் ஒரேயொரு இலக்காகும். எனவே, எதிரணியினரின் இந்த நோக்கத்திற்காக தமிழ் மக்கள் வாக்களிக்க வேண்டும் என்பதே அவர்களின் எதிர்பார்ப்பு. ஆனால், எதிரணியினர் விரும்புவது போன்றே ராஜபக்‌ஷவை வீழ்த்திவிட்டால் அடுத்து இத்தீவில் தமிழ் மக்களின் வாழ்வில் ஏற்படப்போகும் மறுமலர்ச்சிதான் என்ன? இதற்கு எவரிடமும் பதிலில்லை. இதுதான் மைத்திரிபாலவிற்கு வாக்களிக்குமாறு கோருவோரிடமுள்ள அரசியல் பலவீனமாகும்.

இன்று தமிழ் மக்களுக்கு அழைப்புவிடும் தமிழ் தேசியவாத அமைப்புக்கள் அனைத்தும் மைத்திரிபால சிறிசேனவிற்கு வாக்களிக்குமாறு பகிரங்கமாக கோரவில்லை. உண்மையில் அவர்கள் எவராலும் அப்படியொரு பகிரங்க அழைப்பைவிட இயலவில்லை. ஏனெனில், மைத்திரிபாலவை பகிரங்கமாக ஆதரிக்குமளவிற்கு அவர் தமிழ் மக்கள் குறித்து எந்தவொரு சாதகமான அபிப்பிராயத்தையும் கொண்டிருக்கவில்லை.

ஆனால், யாழ்ப்பாணத்தை தளமாகக் கொண்டியங்கிவரும் தமிழ் சிவில் சமூகம் தமிழ் மக்கள், தங்கள் மனச்சாட்சிக்கும், நீண்டகால நோக்கில் தங்களுக்கு உகந்த முடிவு எது என்பதையும் சிந்தித்து முடிவெடுக்குமாறு அறிவுறுத்தியிருக்கிறது. இந்த இடத்தில் தமிழரின் மனச்சாட்சி என்ன என்னும் கேள்வி எழுகிறது. இன்று தெற்கில் இடம்பெறும் பிரச்சாரங்களை உற்று நோக்கினால் ஒரு விடயம் வெள்ளிடைமலையாகும். அதாவது, தமிழீழ விடுதலைப் புலிகளை தோற்கடித்தமைக்கான பெருமை யாருக்குரியது என்பதில் அனைவருமே போட்டியிடுவதை காண முடிகிறது.

அதாவது, முள்ளிவாக்காலில் பெருந்தொகையான மக்களுடன் பிரபாகரனை வீழ்த்திய பெருமை யாருக்குரியது? ராஜபக்‌ஷ சொல்லுகின்றார் அதற்கான ஏகபோக உரிமை தனக்கு மட்டுமே உரியதென்று. ஆனால், சந்திரிக்காவோ, இல்லை, புலிகளை 75 வீதம் அழித்தது நானே என்கிறார். ஆனால், ரணிலோ இல்லை நானே பேச்சுவார்த்தை என்னும் பொறிக்குள் அவர்களை சிக்கவைத்து, கிழக்கில் பிளவை ஏற்படுத்தி பிரபாகரனின் முடிவுக்கு சரியானதொரு அடித்தளத்தை இட்டேன் என்கிறார். சரத் பொன்சேகாவோ, இல்லை புலிகளை அழித்ததில் எனது பங்குதான் அதிகம் என்கிறார்.

இதில் யார் சொல்லுவது உண்மை என்பதை ஆராய வேண்டிய தேவை தமிழ் மக்களுக்கு இல்லை. இப்பொழுது தமிழ் மக்கள் தங்களின் மனச்சாட்சிப்படி இதில் எவரை ஆதரிக்க முடியும்? இதில் எவரையேனும் தமிழ் மக்கள் ஆதரித்தால் உண்மையிலேயே தமிழ் மக்கள் மனச்சாட்சி உள்ளவர்களாக கருதப்படுவார்களா? ஒரு புறம் ராஜபக்‌ஷாக்களின் வெற்றியணி, இன்னொருபுறம் இல்லை நாங்கள்தான் புலிகளை அழித்தோமென்று மார்தட்டும் எதிரணி. இதில் தமிழ் மக்கள் அவர்களது மனச்சாட்சிப்படி எவரை தெரிவு செய்ய முடியும்? மைத்திரிபாலவிற்கு தமிழ் மக்களை வாக்களிக்குமாறு கோருவோர் உண்மையிலேயே தமிழ் மக்களை மனச்சாட்சியற்றவர்கள் என்று கருதுகின்றனரா?

யுத்தம் நிறைவுற்ற பின்னரும் கூட மஹிந்த ராஜபக்‌ஷ தமிழ் மக்களில் நியாயமான பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் எதனையும் மேற்கொள்ளவில்லை. மாறாக, வெற்றிதரும் குதூகலத்தில் தன்னை மறந்து செயற்பட்டார். சர்வதேச சமூகத்தின் கோரிக்கைகளை புறம்தள்ளினார். இந்திய மற்றும் அமெரிக்க ஆலோசனைகளை அசட்டை செய்தார். இதன் விளைவாக அவர் மீதான சர்வதேச அழுத்தங்கள் மெது மெதுவாக படர ஆரம்பித்தது.

இந்தப் பின்னணியில்தான் அமெரிக்கா, தனது இராஜதந்திர அழுத்தங்களை சர்வதேச மயப்படுத்தும் நேக்கில், இலங்கை பிரச்சினையை ஜ.நாவிற்குள் கொண்டு சென்றது. அந்த நோக்கத்திற்காகவே அமெரிக்கா ஜ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கை மீது பிரேரணைகளை கொண்டுவந்தது. இதனைத் தொடர்ந்துதான், அதுவரை வெறும் பயங்கரவாத பிரச்சினையாக பார்க்கப்பட்ட தமிழர் விவகாரமானது, ஒரு மனித உரிமைசார் விவகாரமாக சர்வதேசத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. எனினும், ராஜபக்‌ஷ சர்வதேச அழுத்தங்களுக்கு வளைந்து கொடுக்கவில்லை.

மாறாக, அமெரிக்காவின் அழுத்தங்களை எதிர்கொள்ளும் ஓர் உபாயமாக ஆசியாவில், அமெரிக்க மற்றும் அதனுடன் பாதுகாப்பு ஒத்துழைப்புக்களை பேணிவரும் நாடுகளுக்கு சிம்மசொப்பனமாக திகழும் சீனாவுடன் வலுவான உறவுகளை பேணிக் கொண்டார். இதன் மூலமாக ஜக்கிய நாடுகள் சபையின் அதிகார எல்லைக்குள் இலங்கையின் மீது நடவடிக்கைகள் எடுக்கமுற்படும் அமெரிக்க நகர்வுகளுக்கு ராஜபக்‌ஷ முட்டுக்கட்டையிட்டார். எனினும், ஜ.நாவின் மனித உரிமைகள் பேரவையின் எல்லைக்குள் இருக்கும் சில வாய்புக்களைப் பயன்படுத்தி இலங்கையின் மீதான ஒரு விசாரணைக்கு அமெரிக்கா அடித்தளமிட்டது.

இந்த விசாரணையினால் ராஜபக்‌ஷவை தண்டிக்க முடியாவிட்டாலும், அதனால் உலகிற்கு சில சிபார்சுகளை வழங்க முடியும். இறுதியில் இலங்கை விவகாரம் ஜக்கிய நாடுகள் பொதுச் சபைக்கு கொண்டு செல்லப்படும். இதன் மூலம் ராஜபக்‌ஷவிற்கு தொடர்ச்சியான நெருக்கடிகளை கொடுத்து அவரை ஒரு வழிக்குக் கொண்டுவர முடியும். இப்படியொரு பின்னணியில்தான் இலங்கையில் ஒரு ஜனாதிபதித் தேர்தல் இடம்பெறுகிறது.

ஆரம்பத்தில் மிகவும் இலகுவானதொரு வெற்றியாக கணிக்கப்பட்ட ராஜபக்‌ஷவின் வெற்றி தற்போது ஓரளவு கேள்விக்குறியுடன் நோக்கப்படுகிறது. ஆனால், இங்கு தமிழர் கவனிக்க வேண்டிய விடயம் ராஜபக்‌ஷ தேர்தல் முறையின் ஊடாக அதிகாரத்திலிருந்து அகற்பட்டால், இதுவரை இலங்கை ஆட்சியாளர்கள் மீது தொடர்ந்துவந்த அழுத்தங்களுக்கு என்ன நிகழும் என்பதே! இங்கு தமிழ் மக்கள் ஒரு விடயத்தை மிகவும் ஆழமாக அவதானிக்க வேண்டியவர்களாக இருக்கின்றனர்.

ராஜபக்‌ஷ ஒரு வேளை தோல்வியடைந்து வெளியேறினால், இலங்கையில் இடம்பெற்றதாகக் கருதப்படும் போர்க்குற்றங்கள் மற்றும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் அனைத்தும் வெறும் ராஜபக்‌ஷ, அவரது சகோதரர் கோட்டாபய ராஜபக்‌ஷ மற்றும் சில இராணுவ தளபதிகளின் தனிப்பட்ட விவகாரமாக மாறிவிடும். இவர்கள் ஒரு வேளை தண்டிக்கவும் படலாம். ஆனால், ஒரு சிலர் தண்டிக்கப்படுவதால் இனவாத சிந்தனைகளால் வனையப்பட்டிருக்கும் இலங்கை அரச இயந்திரத்தில் எத்தகைய மாற்றம் நிகழ்ந்துவிடும்? உண்மையில் கடந்த ஜந்து வருடங்களாக ராஜபக்‌ஷ மீது மேற்கொள்ளப்பட்டுவரும் சர்வதேச அழுத்தங்கள் என்பவை வெறும் ராஜபக்‌ஷ மீதான அழுத்தமல்ல. மாறாக, இலங்கை இனவாத இயந்திரத்தின் மீதான அழுத்தமாகும்.

இப்படியொரு பின்னணியில் மேற்படி சர்வதேச அழுத்தம் வெறும் நபர்கள் மீதான அழுத்தமாக சுருங்குமாயின், தமிழ் மக்களின் பிரச்சினை குப்பைத் தொட்டிக்கு அனுப்பப்படும். எனவே, தமிழ் மக்களின் பிரச்சினை இன்றும் நீர்த்துப் போகாமல் இருப்பதற்கு ராஜபக்‌ஷ மேற்குலகுடன் குறிப்பாக அமெரிக்காவுடன் ஒத்துப்போகாமல் இருப்பதே காரணமாகும். ஆனால், ஆட்சி மாற்றத்தின் பின்னர் வரவிருக்கும் மைத்திரிபாலவிற்கு அப்படியான எந்தவொரு கடப்பாடும் இல்லை. சில மாதங்களுக்கு முன்னர் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் அவர்கள் என்னுடன் பேசிக்கொண்டிருக்கும் போது, ஒரு முக்கியமான விடயத்தை குறிப்பிட்டார். அதாவது, மஹிந்த ராஜபக்‌ஷவின் கடும்போக்கான நிலைப்பாடுதான் எங்களுடைய அரசியல் நகர்வுகளுக்கு சாதகமாக இருக்கிறது. சம்பந்தன் அவர்களது தற்போதைய நிலைப்பாடு என்னவென்று தெரியவில்லை. ஆனால், அந்த (மஹிந்த) கடும்போக்கிலிருந்து இலங்கையின் முகம் சடுதியாக மாறுமாயின், தமிழர் பிரச்சினையின் முக்கியத்துவமும் அல்லவா மாறிவிடும்.

மஹிந்த ராஜபக்‌ஷ தமிழ் மக்களின் முன்னால் எந்தவகையிலும் ஒரு தெரிவல்ல என்பதில் தடுமாறுவதற்கும், விவாதிப்பதற்கும் எதுவுமில்லை. ஆனால், ராஜபக்‌ஷவை எதிர்த்துப் போட்டியிடும் மைத்திரிபால சிறிசேனவும் தமிழ் மக்கள் முன்னால் ஒரு சரியான தெரிவல்ல. இங்கு தமிழ் மக்கள் முக்கியமாக கவனிக்க வேண்டிய விடயம், சிங்கள இனவாதம் மைத்திரிபால சிறிசேனவை ஒரு கருவியாகக் கொண்டு மிகவும் நுட்பமாக செயலாற்றி வருக்கிறது.

மைத்திரிபால சிறிசேன, ஜாதிக ஹெல உறுமயவுடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தில் தமிழ் மக்களின் சமஷ்டிக் கோரிக்கையை தான் ஒரு போதும் ஏற்றுக்கொள்ள மாட்டேனென்று, அவர் அழுத்தம் திருத்தமாக தெரிவித்திருக்கின்றார். மைத்திரி மிகவும் நேர்மையாகவே தன்னுடைய நிலைப்பாட்டை தெரிவித்திருக்கின்றார். ஆனால், இங்கு பலரும் கவனிக்கத் தவறுகின்ற பிரச்சினை, மைத்திரிபாலவின் வெற்றிக்கு தமிழ் மக்கள் பங்களிப்பார்களாயின், அதன் பொருள் தமிழ் மக்கள் வரலாற்று ரீதியாக முன்வைத்துவரும் சமஷ்டிக் கோரிக்கையை தாங்களாகவே நிராகரித்துவிடும் நிலையல்லவா உருவாகும்.

இங்கு மைத்திரிபால வெல்லுவது இந்தக் கட்டுரையாளரை பொறுத்தவரையில் ஒரு விடயமல்ல. ஆனால், அவர் தமிழ் மக்களின் பெரும்பான்மையான ஆதரவை பெற்று வெற்றிபெற்றுவிடக் கூடாது. அவ்வாறு மைத்திரிபால வெற்றிபெறுவாராயின் அவரது சமஷ்டி நிராகரிப்புக் கோரிக்கையையும் தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்வதாகவே பொருள்படும். இந்த இடத்தில்தான் தெற்கின் இலட்சிய இனவாத அமைப்பான ஜாதிக ஹெல உறுமய மிகவும் நுட்பமாக காய்நகர்த்தியிருக்கிறது. இதன் மூளை பாட்டளி சம்பிக்க ரணவக்க ஆவார். ஆனால், சம்பிக்கவின் நுட்பமான இந்த காய் நகர்த்தலை தமிழ் தேசியக் கூட்டமைப்பிலுள்ள எவராவது புரிந்துகொண்டார்களா என்பது கேள்வியே! எனவே, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் மைத்திரிபாலவிற்கு தமிழ் மக்கள் பெரும்பான்மையாக வாக்களிப்பதானது, இறுதியில் தமிழ் மக்கள் தங்களின் தலையில், தாங்களே மண்ணைவாரிப் போட்டுக்கொள்வதற்கு ஒப்பாகும்.

எனவே, இப்போது தமிழ் மக்கள் முன்னால் எஞ்சியிருக்கும் அந்த ஒரேயொரு தெரிவு எது? ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் இன்றைய சூழலில் தமிழ் மக்கள் முன்னாலுள்ள ஒரேயொரு கடமை, தங்கள் மனச்சாட்சிக்கு விடுக்கப்படும் சவாலை வெற்றிகொள்வது ஒன்றேயாகும்.

 -யதீந்திரா-

0 Responses to ஜனாதிபதி தேர்தல் 2015: தமிழ் மக்களுக்கு நன்மையான தெரிவு எது?

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com