Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இன்று சனிக்கிழமை காலை நேபாலைத் தாக்கிய 7.9 ரிக்டர் அளவுடைய பயங்கர நிலநடுக்கம் மற்றும் தொடர் அதிர்வுகள் காரணமாக அங்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதுடன் நேபாளத்தில் மட்டும் பலி எண்ணிக்கை 449 ஆகவும் பீகாரில் 14 ஆகவும் உயர்வடைந்துள்ளது. கடந்த 8 தசாப்தங்களில் நேபாளத்தைத் தாக்கிய மிக மோசமான இந்த நிலநடுக்கத்தை அடுத்து சுமார் 14 வலிமையான தொடர் அதிர்வுகள் பதியப் பட்டுள்ளன.

மேலும் தலைநகர் காத்மண்டுவில் உள்ள சர்வதேச விமான நிலையம் தற்காலிகமாக மூடப் பட்டுள்ளது. இதையடுத்து இந்தியாவில் இருந்து காத்மண்டுவுக்குச் செல்லவிருந்த பல விமானங்களின் பயணங்கள் ரத்து செய்யப் பட்டுள்ளன. இதனால் பயணிகள் சிரமத்தை எதிர்நோக்கியுள்ளனர். காலை 11.30 இற்கு நேபாலுக்குப் புறப்பட்ட ஓர் IndiGo விமானம் உட்பட இரு வேறு இந்திய விமானங்களது பயணங்களும் ரத்து செய்யப் பட்டுத் திருப்பப் பட்டுள்ளன. இதைவிட சவுதி அரேபியாவின் சார்ஜா இலிருந்து காத்மண்டுவுக்குப் புறப்பட்ட அல் அராபியா விமானம் ஒன்றும் திசை திருப்பப் பட்டு டெல்லியில் தரை இறக்கப் பட்டுள்ளது.

தலைநகர் காத்மண்டு மற்றும் அண்மைய பகுதிகளில் பல கட்டடங்கள் இடிந்து வீழ்ந்தும் பாதைகள் பிளவுற்றும் உள்ளன. நேபாளத்தின் நகரக் கட்டுமானத்தில் ஏற்பட்டுள்ள பலத்த சேதங்களைப் பிரதிபலித்து தற்போது இணைய ஊடகங்களில் வெளி வந்து கொண்டிருக்கும் புகைப் படங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக உள்ளன. முக்கியமாக தலைநகர் காத்மண்டுவில் யுனெஸ்கோவின் உலகப் பாரம்பரியக் கட்டடங்களில் ஒன்றான 19 ஆம் நூற்றாண்டில் கட்டப் பட்ட டுர்பார் சதுக்கக் கோபுரம் இந்த நிலநடுக்கத்தால் தரை மட்டமாகியுள்ளதும் குறிப்பிடத்தக்கது. மத்திய ஆசியாவின் தரைக்குக் கீழே செல்லும் எயூராசியான் டெக்டோனிக் நிலக்கீழ் தகடும் இந்திய டெக்டோனிக் தகடும் சந்திக்கும் பகுதிக்கு மேலே தான் இமய மலைத் தொடரும் நேபாளமும் அமைந்திருப்பதால் நேபாளம் உலகில் புவியீயல் ரீதியாக அதிக அதிர்வுகள் ஓர் வருடத்தில் ஏற்படக் கூடிய பகுதியில் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

0 Responses to நேபால் நிலநடுக்கத்தில் பலி எண்ணிக்கை 450 ஆக உயர்வு!:காத்மண்டு விமான நிலையம் மூடல்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com