ராஜபாளையம் ஜவஹர் மைதானத்தில் நாம் தமிழர் கட்சியின் சார்பில், ‘தமிழ் தேசிய இனமும் அது எதிர்கொள்ளும் சிக்கலும்’ என்ற தலைப்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் சீமான் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.
அவர் பேசும்போது, ‘’மேகதாது பகுதியில் கர்நாடகா அணை கட்டினால் தமிழ் நாட்டில் விவசாயம் பாதிக்கப்படும் என தமிழக விவசாயிகள் போராடினர். ஆனால் இங்குள்ள ஒற்றுமையின்மையால் அந்த போராட்டம் முழுவதுமாக வெற்றி பெறவில்லை. ஆனால் கர்நாடக அரசு அணை கட்டுவதை தமிழக அரசு தடுக்க கூடாது என வலியுறுத்தி கர்நாடகாவில் நடைபெற்ற கடை அடைப்பு போராட்டம் அங்குள்ள ஒற்றுமையால் வெற்றி பெற்றது.
இந்த போராட்டத்தில் காங்கிரசும், பா.ஜனதாவும் தங்கள் கட்சி கொடியை ஏந்தாமல் கர்நாடக மாநில கொடியை ஏந்தி போராட்டத்தில் கலந்து கொண்டன. தமிழர்களின் போராட்டத்தில் காங்கிரசும். பா.ஜ.க.வும் பங்கேற்குமா? என்ற கேள்வியை எழுப்புகிறேன்.
மற்ற மாநிலங்களில், மாநில பிரச்சினை என்று வரும் போது தேசிய கட்சிகள் மாநில கட்சிகளாக மாறி விடுகிறது. தமிழகத்தில் காங்கிரஸ், கம்யூனிஸ்டு, பா.ஜ.க. ஆகிய கட்சிகள் ஆளும் உயரத்தில் இல்லை என்பதால் தமிழக மக்களின் உரிமையை பற்றி அக்கட்சிகள் கவலைப்படவில்லை. உரிமைகளை புறந்தள்ளி வருகிறது.
எனவே அக்கட்சிகளை நாமும் புறக்கணிக்க வேண்டிய நிலையில் உள்ளோம். கச்சத்தீவு தமிழ் மன்னர் சேதுபதியின் சொந்த நிலம். அதை காங்கிரஸ் அரசு அவசரமாக இலங்கைக்கு விட்டுக் கொடுத்து விட்டது. தமிழர்களை கொன்றால் யாரும் கேட்க மாட்டார்கள் என்ற தைரியத்தில் ஆந்திர அரசு 20 பேரை சுட்டுக்கொன்றது. நிலம் கையகப்படுத்தும் அவசர சட்டத்தை நிறைவேற்ற மத்திய அரசு போராடி வருகிறது.
இந்த சட்டம் நிறைவேற்றினால் மக்களின் உரிமை பறிபோய் விடும். இழந்த நிலத்திற்கு உரிய தொகையை அரசு கொடுக்காமல், அரசு தரும் இழப்பீட்டை வாங்கி கொண்டு நிலத்தை பெரும் முதலாளிகளுக்கு விற்று விடுவதே இந்த சட்டம். ஆங்கில அரசு கொண்டு வந்த சட்டத்தை தற்போது மத்திய அரசு தொடர்கிறது. நாட்டை உலக நாடுகளுக்கு அடிமை ஆக்கும் சட்டம்.
இந்த சட்டத்தை நிறைவேற்ற வளர்ச்சி, வேலை வாய்ப்பு போன்ற இனிப்பான வார்த்தைகளை அரசு பயன்படுத்துகிறது. இனிப்பான வார்த்தைகள் தவிர இத்திட்டம் முழுவதுமாக ஏமாற்றும் வேலை. இந்தியாவில் நல்ல குடிநீர் மற்றும் தரமான கல்வி இல்லை. தற்போது கல்வி நிலையங்களை விட டாஸ்மாக் கடை அதிகம் உள்ளது. பேருந்துகள் தரமாக இல்லை என்பதால் போக்குவரத்து துறையில் ரூ. 44 ஆயிரம் கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதை சரி செய்ய அரசு ஏன் முயலவில்லை? தற்போது மருத்துவ கல்விக்கு விலை அதிகம் என்பதால், இலவச மருத்துவ கல்வி தரும் சீனாவிற்கு இந்திய மாணவர்கள் செல்கின்றனர்’’என்று தெரிவித்தார்.
0 Responses to தமிழ் தேசிய இனமும் அது எதிர்கொள்ளும் சிக்கலும் : சீமான் பேச்சு