Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆகிய இருவரும் சந்தித்து நடத்தும் பேச்சுவார்த்தையை பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை விரட்டியடிக்கும் ஒரு முயற்சி என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பேச்சாளர் டிலான் பெரேரா சொல்லியுள்ளார். இந்த சந்திப்பின் நோக்கம் இதுவென்றால் இதற்கு நாம் ஒருபோதும் உடன்பட முடியாது என்று தேசிய நிறைவேற்று சபை உறுப்பினரும், ஜனநாயக மக்கள் முன்னணி தலைவருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

மஹிந்தவின் காலம் முடிந்து விட்டது. அவர் இனி ஓய்வுபெற்று வீடு போக வேண்டும். மஹிந்த இல்லாத சுதந்திரக் கட்சியுடன் இணைந்து செயற்பட நாம் தயார். ஆனால், மஹிந்த ராஜபக்ஷ உள்வாங்கப்படும் எந்த ஒரு ஏற்பாட்டுக்கும் இந்நாட்டில் வாழும் தமிழ் பேசும் மக்கள் உடன்படமாட்டார்கள். எனவே இந்தப் பேச்சுவார்த்தையின் நோக்கம் ஒருமுறை பிரதமராகவும், இரு முறை ஜனாதிபதியாகவும் பதவி வகித்த மஹிந்த ராஜபக்ஷவை வீட்டுக்கு அனுப்பும் பேச்சுவார்த்தையாகவே இருக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதிகாரத்தை பகிர்ந்து ஐக்கியப்படும் இயக்கத்தின் ஊடக மாநாடு இன்று புதன்கிழமை கொழும்பில் இடம்பெற்றது. அதில் கலந்து கொண்டு பேசும் போதே மனோ கணேசன் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

மனோ கணேசன் கூறியுள்ளதாவது, “ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை தங்களது கட்சி தலைவர் என்று உரிமை கொண்டாடும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி அரசியல்வாதிகளுக்கு ஒன்றை கூறி வைக்க விரும்புகிறேன். அவரை உங்கள் கட்சி தலைவராக நீங்கள் ஆக்க முன், நாங்கள் அவரை இந்த நாட்டின் ஜனாதிபதியாக ஆக்கிவிட்டோம்.

நாம் அவரை ஜனாதிபதியாக ஆக்கிய பின்னரே நீங்கள் வேறு வழியில்லாமல் அவரை உங்கள் கட்சி தலைவர் ஆக்கியுள்ளீர்கள் என்பதை மறந்து விட வேண்டாம். நாங்கள் பல்லாண்டுகளாக போராடி மஹிந்தவை ஆட்சி கட்டிலில் இருந்து அகற்றினோம். அவரை ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மீண்டும் குறுக்கு வழியில் உள்ளே கொண்டு வர நாம் இடந்தர முடியாது.

நாங்கள் இந்த அரசாங்கத்தில் இடை நடுவில் வந்து குடிபுகுந்தவர்கள் அல்ல. துப்பாக்கி குண்டுகளுக்கு மத்தியில், வெள்ளை வான்களுக்கு மத்தியில், கல்லடிகளுக்கு மத்தியில், சொல்லடிகளுக்கு மத்தியில், பதவி, வரப்பிரசாதங்களை நிராகரித்துவிட்டு பல்லாண்டுகளாக போராடி வெற்றி கண்டவன், நான். பதவிகளுக்காக சோரம்போன கழிசடையல்ல, நான். எனவே இதை சொல்வதற்கு எங்களுக்கு முழுமையான உரிமை இருக்கிறது.

இந்த நாட்டிலே வாழும் தமிழ், முஸ்லிம் மக்களுக்கு மஹிந்த ராஜபக்ஷ இழைத்த சொல்லொணா கொடுமைகளை நாம் மறக்கவில்லை. மைத்திரிபால சிறிசேன அவர்களை ஜனாதிபதியாக்க நாம் கடுமையாக உழைத்தோம். இது ஜனாதிபதிக்கு தெரியும்.

எனவே மைத்திரி-மஹிந்த பேச்சுவார்த்தையை வெறுமனே ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி என்ற கட்சி மட்ட பேச்சுவார்த்தை என நாம் கருதிவிட முடியாது. இது ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உள்விவகாரம் என்றும் நாம் சும்மா இருக்க முடியாது. வாக்களித்த எங்கள் மக்களுக்கு நாம் பதில் சொல்ல கடமைப்பட்டுள்ளோம். இதை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன புரிந்து கொண்டுள்ளார் என நாம் நம்புகிறோம்.” என்றார்.

0 Responses to மைத்திரி- மஹிந்த இணைந்து ரணிலை விரட்ட அனுமதிக்க முடியாது: மனோ

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com