Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இலங்கையின் 225 பேர் கொண்ட பாராளுமன்றத்தில் 196 பிரதிநிதிகளை நேரடியாக தெரிவுசெய்வதற்காக வரம் ஒகஸ்ட் 17ஆம் திகதி நடத்தப்படவுள்ள பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்கென 6 ஆயிரத்து 151 வேட்பாளர்கள் களத்தில் குதித்துள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

இவர்களில் அரசியல் கட்சிகள் சார்பாக 3 ஆயிரத்து 653 வேட்பாளர்களும், சுயேச்சை குழுக்கள் சார்பாக 2 ஆயிரத்து 498 வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர்.

அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக்குழுக்கள் சார்பில் 22 தேர்தல் மாவட்டங்களிலும் மொத்தமாகத் தாக்கல் செய்யப்பட்ட 537 வேட்பு மனுக்களுள் 501 வேட்பு மனுக்கள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்பட்டன. எஞ்சிய 36 வேட்பு மனுக்களும் மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரிகளால் நிராகரிக்கப்பட்டுள்ளன.

தேர்தல் மாவட்டங்களில் அரசியல் கட்சிகள் சார்பாக 312 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இவற்றுள் 300 வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டதுடன், 12 வேட்பு மனுக்கள் நிராகரிக்கப் பட்டன. இதேவேளை சுயேச்சைக் குழுக்கள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட 225 வேட்பு மனுக்களில் 201 வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டதுடன் எஞ்சிய 24 வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.

கொழும்பு மாவட்டத்தில் ஒரு அரசியல் கட்சியும், ஒரு சுயேச்சையும் நிராகரிக்கப்பட்டுள்ளன. கம்பஹாவில் ஒரு அரசியல் கட்சி மாத்திரமே நிராகரிக்கப்பட்டுள்ளது. களுத்துறை மாவட்டத்தில் 2 அரசியல் கட்சிகளும், ஒரு சுயேச்சைக் குழுவும் நிராகரிக்கப்பட்டுள்ளன. மாத்தளையில் ஒரு சுயேச்சைக்குழு மாத்திரம் நிராகரிக்கப்பட்டுள்ளது. ஹம்பாந்தோட்டையில் ஒரு சுயேச்சைக்குழு மாத்திரம் நிராகரிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தில் 2 அரசியல் கட்சிகளும், 6 சுயேச்சைக் குழுக்களும் நிராகரிக்கப்பட்டுள்ளன. வன்னியில் ஒரு அரசியல் கட்சியும் ஒரு சுயேச்சைக் குழுவும் நிராகரிக்கப்பட்டுள்ளன. திகாமடுல்லவில் ஒரு அரசியல் கட்சியும் மூன்று சுயேச்சைக் குழுக்களும் நிராகரிக்கப்பட்டுள்ளன. திருகோணமலையில் 2 சுயேச்சைக் குழுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.

குருநாகலில் ஒரு சுயேச்சைக்குழு நிராகரிக்கப்பட்டுள்ளது. புத்தளத்தில் மூன்று சுயேச்சைக் குழுக்களும், பொலன்னறுவையில் இரண்டு அரசியல் கட்சிகளும், 2 சுயேச்சைக் குழுக்களும் நிராகரிக்கப்பட்டுள்ளன. பதுளை தலா ஒரு கட்சியும் ஒரு சுயேச்சைக் குழுவும் நிராகரிக்கப்பட்டுள்ளன. மொனராகலையில் ஒரு அரசியல் கட்சியும், கேகாலையில் ஒரு சுயேச்சைக்குழுவும் நிராகரிக்கப்பட்டுள்ளன.

அதேநேரம், கண்டி, நுவரெலியா, காலி, மாத்தறை, அநுராதபுரம், இரத்தினபுரி, மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களில் எந்தவொரு வேட்புமனுவும் நிராகரிக்கப்படவில்லை.

பொதுத் தேர்தலுக்கான வேட்புமனுக்களைத் தாக்கல் செய்யும் இறுதி தினம் நேற்று திங்கட்கிழமை நண்பகல் 12.00 மணியுடன் முடிவுக்கு வந்தது. தேர்தல் நடைபெறவுள்ள 22 மாவட்டங்களிலும் வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.

கடந்த 06ஆம் திகதி முதல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களிடமிருந்து மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலகங்களில் வேட்புமனுக்கள் பெற்றுக் கொள்ளப்பட்ட போதும் இறுதி நாளான நேற்று பிரதான கட்சிகள் சுபநேரத்தில் தமது வேட்புமனுக்களை தாக்கல் செய்தன.

நண்பகல் 12.00 மணியுடன் வேட்பு மனுத் தாக்கல் முடிவடைந்ததைத் தொடர்ந்து பிற்பகல் 01.30 மணிவரை ஆட்சேபனை தெரிவிக்கும் நேரமாக ஒதுக்கப்பட்டிருந்தது. இக்காலப் பகுதிக்குள் தேர்தல் சட்டவிதிகளுக்குப் பொருந்தாத மனுக்கள் நிராகரிக்கப் பட்டன.

அங்கீகரிக்கப்பட்ட வேட்பு மனுக்களுக்கு அமைய வேட்பாளர்களுக்கு போட்டி யிடுவதற்கான இலக்கங்களை வழங்க தேர்தல்கள் ஆணையாளர் நடவடிக்கை எடுத்துள்ளார்.

பாராளுமன்றம் ஜூன் 26ஆம் திகதி நள்ளிரவு பன்னிரண்டு மணியுடன் கலைக்கப்பட்டது. ஜூலை 06ஆம் திகதி முதல் 13ஆம் திகதிவரை நண்பகல் 12.00 மணிவரை வேட்புமனு தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் வழங்கப்பட்டது. இதற்கமைய கடந்த 06ஆம் திகதி முதல் தேர்தல் பிரசாரங்கள், போஸ்டர்கள், கட்டவுட்களுக்கு தடைவிதிக்கும் தேர்தல் சட்டங்கள் நடைமுறைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளன.

பொதுத் தேர்தலுக்கான தபால்மூல வாக்களிப்பு ஓகஸ்ட் 5 மற்றும் 6ஆம் திகதிகளிலும் பாடசாலை ஆசிரியர்களுக்கு மாத்திரம் ஓகஸ்ட் மாதம் 3ஆம் திகதி நடத்தவிருப்பதாகவும் அறிவிக்கப்பட் டுள்ளது.

0 Responses to பொதுத் தேர்தல் 2015: 196 ஆசனங்களுக்காக 6151 பேர் களத்தில்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com