Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

புலம் பெயர் அரசியல் அமைப்புக்களால் முன்னெடுக்கப்பட்டு வரும் அரசியல் செயற்பாடுகளில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினால் சிறிலங்காவை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தின் முன் நிறுத்தக் கோரும் ஒரு மில்லியன் கையெழுத்து இயக்கம் கவனத்தை ஈர்ப்பதாக உள்ளது.

இக் கையழுத்து வேட்டை நமது கவனத்தை ஈர்ப்பதற்கு நான்கு காரணங்களை நாம் இனம் காணலாம்.

முதலாவது காரணம் இக் கையெழுத்து இயக்கத்தின் காலப் பொருத்தமும் அதன் கோரிக்கையும் சார்ந்தது.

எதிர்வரும் செப்டம்பர் மாதம் வெளியாக இருப்பதாகக் கருதப்படும் ஐக்கிய நாடுகள் அறிக்கையில் யுத்த மீறல்கள் தொடர்பாக அனைத்துலக நிபுணர்கள் பங்கு பற்றும் உள்நாட்டு விசாரணைக்கான பரிந்துரை முன்வைக்கப்படலாம் என்ற எதிர்வுகூறல் முன்வைக்கப்பட்டுள்ள ஒரு சூழலிலேயே இக் கையெழுத்து இயக்கம் நடைபெறுகிறது.

ஒரு உள்நாட்டு விசாரணையோ அல்லது உள்நாடும் ஐக்கிய நாடுகள் சபையும் இணைந்த கலப்பு விசாரணை முறையோ ஏன் நீதியை நிலைநிறுத்தாது என்பதற்கான காரணங்களும் சுருக்கமாகக் கையழுத்து இயக்க மனுவுடன் இணைக்கப்பட்டுள்ளன.

இரண்டாவது இக் கையெழுத்து இயக்கத்தின் அளவுப்பரிமாணம் தொடர்பானது. புலம் பெயர் அமைப்புக்களால் முன்னரும் கையெழுத்து இயக்கங்கள் நடைபெற்றிருக்கின்றன. ஆனால் ஒரு கோரிக்கையை முன்வைத்து ஒரு மில்லியன் கையெழுத்து இயக்கமாக ஒரு திட்டம் முன்னெடுக்கப்படுவது நான் அறிந்தவரை இதுதான் முதற்தடவையாக இருக்கிறது.

இத் திட்டம் அறிவிக்கப்பட்டவுடன் இதன் நடைமுறைச் சாத்தியம் தொடர்பாக சந்தேகங்கள் பல மட்டங்களில் இருந்ததையும் அவதானிக்க முடிந்தது. எனினும் தற்போது (இப் பத்தியை எழுதும் போது) கையழுத்து இயக்கம் 'சூடு பிடித்து' ஐந்து இலட்சம் கையெழுத்துக்களை நெருங்கி விட்டது.

மூன்றாவது காரணம் இது உலகத் தமிழர்கள் அனைவரையும் ஈழத் தமிழ் மக்களுக்கு நீதி கோரும் உணர்வு நிலையில் ஒருங்கிணைக்கும் ஒரு அரசியல் இயக்கமாக அமைந்திருப்பது.

இதுவரை இக் கையெழுத்து இயக்கத்துடன் இணைந்திருப்பவர்களின் வாழ்விடங்களை நோக்கின் முதலாவது இடத்தில் இந்தியாவும் இரண்டாவது இடத்தில் இலங்கையும் இருக்கின்றன.

இப் பத்தியை எழுதும்போது இந்தியாவில் இருந்து ஏறத்தாழ 60 வீதமானோரும் இலங்கையில் இருந்து 10 வீதமானோரும் ஏனைய நாடுகளில் இருந்து 30 வீதமானோரும் இவ் இயக்கத்துடன் தம்மை இணைத்துக் கொண்டுள்ளனர்.

நான்காவது, அனைத்துலக சமூகத்திடம் நீதி கோரும் தமிழ் மக்களின் போராட்டத்துக்கு தார்மீக அடிப்படையிலான ஒரு வலுவான கருவியாக இக் கையெழுத்து இயக்கம் அமைவது.

இவ்வாறாக இக் கையெழுத்து இயக்கம் கவனத்தை ஈர்க்கின்ற போதும் இதன் பயன் குறித்து நம்பிக்கையீனம் வெளிப்படுத்துவோரும் உள்ளனர். ஒரு நாட்டை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தின் முன்நிறுத்துவது என்பது அனைத்துலக அரசுகளின் நலன்களுடன் தொடர்புபட்டது.

இக் கையெழுத்து இயக்கத்தின் கோரிக்கை அனைத்துலக அரசுகளின் நலன்களுக்கு முரணானது. எனவே இக் கோரிக்கை நடைமுறைச் சாத்தியப்படப் போதில்லை என்பதே இவர்கள் வைக்கும் பிரதான வாதம்.

சிறிலங்கா அரசு குற்றவியல் நீதிமன்ற விசாரணைகள் எதனையும் தடுக்கும் வகையிலான அனைத்துலக நண்பர்களைக் கொண்டுள்ளது என்பதும் இவர்களின் வாதத்தின் ஒரு பகுதி.

இத்தகைய கருத்துக்கள் தொடர்பாக இக் கையெழுத்து இயக்கத்தை முன்னெடுத்துவரும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்ரகுமாரனுடன் தொடர்பு கொண்டு அவரது கருத்தைப் இப் பத்திக்காக அறிய முனைந்தேன். உரையாடலின்போது அவர் தெரிவித்த கருத்துக்களை நோக்கும்போது அரசுகளின் நலன்கள் தொடர்பான தெளிவான புரிதல் அவருக்கு இருப்பதாகவே பட்டது.

அரசுகளின் நலன்கள் எவ்வாறாக இருந்தாலும் உலக மனிதாபிமான விழுமியங்களின் அடிப்படையிலும் அறத்தின் அடிப்படையிலும் அரசுகளால் நிராகரிக்க முடியாத கோரிக்கையினை வலுவான மக்கள் ஆதரவுடன் ஐக்கிய நாடுகள் சபையின் முன் கொண்டு செல்வது தமிழ் மக்களின் நீதிக்கான போராட்டத்துக்கு வலுச் சேர்க்கும் என அவர் கருதுகிறார்.

மேலும் தற்போதய உலகச் சூழலில் அரசுகளின் அனைத்துலக உறவுக் கொள்கைளில் தாக்கத்தை ஏற்படுத்துக்கூடிய ஆற்றல் உலக மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட அறந் தழுவிய விழுமியங்களைப் பாதுகாப்பதற்காக தம்மை ஒழுங்கமைத்துள்ள உலக சிவில் சமூகத்துக்கு அதிகரித்து வருவதாகத் தெரிவித்த அவர்,

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையினால் உள்நாட்டு விசாரணைக்கோ அல்லது கலப்பு விசாரணைப் பொறிமுறைக்கோ பரிந்துரை செய்யப்பட்டால் இக் கையெழுத்து இயக்கம் தரும் அரசியல், தார்மீகப் பலத்துடன் உலக சிவில் சமூகத்தின் ஆதரவைத் திரட்டி தமிழ் மக்களின் நீதிக்கான போராட்டத்தை நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தொடரும் எனவும் தெரிவித்தார்.

இக் கையெழுத்து இயக்கத்தின் பயன்பாடு என்பதனை அரசுகள் எடுக்கும் முடிவுகளில் இருந்து மட்டும் மதிப்பிடக்கூடாது என்பதனை வலியுறுத்திய உருத்திரகுமாரன் தமிழ் மக்களின் நீதிக்கான போராட்டத்தை மேலும் அனைத்துலக மயப்படுத்தவும் இப் போராட்டத்துடன் உலகத் தமிழ் மக்களை உணர்வுரீதியாக நெருக்கமாக இணைத்து வைப்பதற்கும் இக் கையெழுத்தியக்கம் மிகவும் பயன்பட்டு வருவதாகவும் சுட்டிக் காட்டினார்.

ஈழத் தமிழ் மக்களின் நீதிக்கான போராட்டம் வெற்றி பெறுவதற்கு உலகத் தமிழ் மக்கள் ஒரு வலுமையமாக ஒன்றிணைவது அவசியம் எனவும் ஈழத் தமிழ் மக்களின் நீதிக்கான போராட்டத்துடன் உலகத் தமிழ் மக்களும் உலக சிவில் சமூகமும் கைகோர்த்துக் கொள்வதற்கான வாய்ப்பையும் இக் கையெழுத்தியக்கம் தருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

உருத்திரகுமாரனின் கருத்துக்கள் நான் கடந்த பத்தியில் குறிப்பிட்ட, தமிழ் டாயஸ்பொறா தாம் வாழும் நாடுகளில் தமது அரசுகள் உலகப் பொது விழுமியங்களை மீறிச் செயற்படுவதைத் தடுக்கும் வகையில் வியூகம் அமைத்துச் செயற்படும் வாய்ப்புக்களைக் கொண்டுள்ளது என்ற கருத்தை நினைவுபடுத்தியது.

அரசுகள் தமது நலன்களை நிறைவேற்றுவதற்கு தம்மை ஒரு கருவியாகப் பயன்படுத்துவதற்கு இடம் கொடுக்காது, அதேநேரம் அரசுகளின் முடிவுகளில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய அணுகுமுறைகள் குறித்து நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் சிந்திப்பதாகவேபடுகிறது. இது உலகத் தமிழர் பேரவை எடுத்துள்ள அணுகுமுறைக்கு மாறுபட்டதாக அமைகிறது.

இவ் இரண்டு அணுகுமுறையில் எது சாதகமான விளைவுளை ஏற்படுத்தப் போகிறது என்பதனை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். ஆனால் உலகத் தமிழர் பேரவை எடுத்துள்ள அணுகுமுறையின் ஆரம்பப் பெறுபேறுகள் தமிழ் டாயாஸ்பொறா சிறிலங்கா டயாஸ்பொறாவாக மாறியதில் முடிவடைந்திருக்கிறது.

உலகத் தமிழ்ப் பேரவை மீது தமிழ் டயாஸ்பொறா மத்தியில் எதிர்ப்பும் சந்தேகமும் அதிகரிக்கும் நிலையும் தோற்றம் பெற்றுள்ளது. இந் நிலைமைகளின் வளர்ச்சி தமிழ் டயாஸ்பொறா அரசியலில் ஏற்படுத்தும் தாக்கம் அடுத்த சில மாதங்களில் வெளிப்படும்.

சிறிலங்கா அரசு நடாத்திய தமிழன அழிப்புப் போர் நடவடிக்கை நன்கு திட்டமிடப்பட்ட போர் உபாயம் எனவும், அது போராளிகளை அழிப்பதை மட்டுமின்றி தமக்குச் சவாலாக அமையும் இனக்குழுமங்களை அழிப்பதையும் நோக்காகக் கொண்டது எனவும்,

அதனால் இத்தகைய திட்டங்கள் உலகின் ஏனைய மக்கள் மீது ஏனைய ஒடுக்குமுறை ஆட்சியாளர்களால் பயன்படுத்தப்படால் தடுக்கப்படவும் மகிந்த ராஜபக்ச ஆட்சிக் காலத்தில் தமிழன அழிப்பு இராணுவ நடவடிக்கைகளுக்குப் பொறுப்பாக இருந்தவர்கள் அனைத்துலக விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுத் தண்டிக்கப்பட வேண்டும் என்ற கருத்து சில மனித உரிமைச் செயற்பாட்டார்களால் முன் வைக்கப்படுகிறது.

இத்தகையதொரு பின்னணியில் ஒட்டுமொத்தமாக நோக்கின், சிறிலங்கா மீது அனைத்துலக விசாரணை வேண்டும் என்ற கோரிக்கையினை நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஒரு மில்லியன் கையெழுத்து இயக்கம் வலுப்படுத்துவதாகவேபடுகிறது.

0 Responses to ஐ.நா. நோக்கிய ஒரு மில்லியன் கையெழுத்து வேட்டை பயன் தருமா? - கலாநிதி சர்வேந்திரா

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com