Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் போராளிகள், ஆதரவாளர்கள் மற்றும் பிரதிநிதிகளை உள்ளடக்கி ‘ஜனநாயகப் போராளிகள் (Crusaders for Democracy)’ கட்சி அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தில் இன்று வெள்ளிக்கிழமை காலை கூடிய முன்னாள் போராளிகள் மற்றும் பிரதிநிதிகள் குழு, பொதுத்தேர்தல் நெருங்கி வரும் தற்போதைய அரசியல் சூழ்நிலையில் தாம் ஆற்றக்கூடிய - ஆற்றவேண்டிய - ஜனநாயக பங்குபணி குறித்து சுமார் மூன்று மணி நேரம் ஆராய்ந்தனர்.

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், வவுனியா, மட்டக்களப்பு மாவட்டங்களைச் சேர்ந்த சிரேஷ்ட போராளிகள் பலர் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டு, பல்வேறு விடயங்கள் குறித்து ஆராய்ந்து தீர்மானங்களை எடுத்தனர்.

இன்றைய கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய தீர்மானங்கள் வருமாறு:-

* முன்னாள் போராளிகள், அவர்களின் ஆதரவாளர்கள், நலன்விரும்பிகள் ஆகியோரை ஒன்றிணைத்து 'ஜனநாயகப் போராளிகள்' (Crusaders for Democracy) கட்சி என்ற அமைப்பில் அரசியல் செயற்பாடுகளில் முழு மூச்சாக ஈடுபடுவது. ஈடுபாடுடைய பேராளிகளையும் ஆதரவாளர்களையும் ஐக்கியப்படுத்தி ஒரு புதிய கட்டுறுதியான அமைப்பை ஏற்படுத்துவது. அதுவரை அமைப்பின் ஒருங்கிணைப்பாளராக என்.வித்தியாதரன் செயற்படுவார்.

* தமிழ்பேசும் மக்களின் ஒட்டுமொத்த நலன்களை வென்றெடுப்பதற்காக அதிர்வுள்ள வகையில் செயற்படும் ஒரு புதிய ஜனநாயக அரசியல் கலாசாரத்தை முன்னெடுக்க வேண்டிய தேவை எழுந்துள்ளது. இதனை நோக்கமாகக் கொண்டு முன்னாள் போராளிகளும் அவர்களுக்கு உரித்தான பங்களிப்பை இவ்விடயத்தில் வழங்குவதற்கு வகை செய்யும் விதத்தில், எதிர்வரும் பொதுத் தேர்தலில் வடக்கு, கிழக்கு தேர்தல் மாவட்டங்கள் தோறும் தமது வேட்பாளர் பட்டியல்களில் விடுதலைப் புலிகளில் இயங்கிய தலா இரு முன்னாள் போராளிகளையாவது இணைத்துக்கொள்ளும்படி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமையைக் கேட்டுக்கொள்வது.

* தமிழர்களின் உரிமைகளை ஈட்டுவதற்கான ஜனநாயக நடவடிக்கைகளில் அர்த்தமுள்ள வகையில் நேர்மையுடனும் நெஞ்சுரத்துடனும் ஈடுபட்டு, ஒரு முறையான அரசியல் தலைமைத்துவத்தை தமிழர்கள் மத்தியில் நிலைநிறுத்துவது.

* கடந்த கால இழப்புகளினால் பாதிக்கப்பட்ட நமது மக்களின் வாழ்வாதார வளங்களைக் கட்டி எழுப்பி, புனர்வாழ்வு, புனரமைப்புப் பணிகளை உத்வேகத்துடன் முன்னெடுத்து, அரசியல் கைதிகளின் விரைந்த விடுதலைக்கு அழுத்தம் தந்து அர்த்தமுள்ள வகையில் பங்களிப்பது.

* நீதி, நியாயமான ஜனநாயக நடவடிக்கைகளில் அர்த்த சுத்தியுடன் பங்களிப்பதன் மூலம், தமிழ்ப்பேசும் மக்களின் இனப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வுகாண்பதற்கு தமிழர்களுக்கும் தென்னிலங்கையின் நியாயமான அரசியல் தலைமைகளுக்கும் இடையில் பலமான இணைப்புப் பாலமாக விளங்கத்தக்க வகையில் வினைத்திறனுடனும் செயற்படுவது. இத்தீர்மானங்களுடன், பொதுத் தேர்தலை ஒட்டி மேற்கொண்டு எடுக்கவேண்டிய தந்திரோபாய உத்திகள் குறித்தும் ஆராய்ந்து திட்டங்கள் வகுக்கப்பட்டன.

0 Responses to முன்னாள் போராளிகளை ஒருங்கிணைத்து ‘ஜனநாயகப் போராளிகள்’ கட்சி!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com