நீண்ட காலமாக தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க மாட்டோம் எனும் நிலைப்பாட்டில் இருப்பது இனவாத சிந்தனையாகவும், கருத்தாகவும் நோக்கப்படும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் பேசும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறியுள்ளதாவது, “ நாடு பூராவுமுள்ள சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகள் தங்களை விடுவிக்குமாறு பல கோரிக்கைகளை முன்வைத்துள்ளார்கள். பல்வேறு சந்தர்பங்களில் பல்வேறுபட்ட போராட்டங்களை நடாத்தியுள்ளார்கள். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் வெளியிட்டுள்ள அறிக்கையிலும் அரசியல் கைதிகள் விடுவிக்கப்பட வேண்டும் என கூறப்பட்டு உள்ளது.
இப்போதும் தம்மை விடுவிப்பதற்கு இலங்கை அரசாங்கம் எந்தவிதமான நடவடிக்கைகளும் எடுக்கவில்லை என சிறையில் உள்ள அரசியல் கைதிகள் கடந்த நான்கு நாட்களாக உண்ணாவிரத போராட்டத்தினை நடாத்தி வருகின்றார்கள். ஆனால், நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ இது தனது கட்டுபாட்டில் இல்லை என கூறுகின்றார்.
சட்டம் ஒழுங்கு அமைச்சர் திலக் மாரபன இது தனது அமைச்சின் கீழ் இல்லை. நீதி அமைச்சுக்குள் தான் வருகின்றது என்கிறார். இவ்வாறு ஒவ்வொரு அமைச்சர்களும் மாறி மாறி அவர் செய்யவேண்டும் இவர் செய்ய வேண்டும் என கூற கூடாது. இவர்கள் அனைவரும் பொது மன்னிப்பின் கீழ் விடுவிக்கப்படவேண்டும்.
பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்கள் எல்லோரும் அரசியல் நோக்கத்திற்காகவே கைது செய்யப்பட்டார்கள். இங்கு அரசியல் கைதிகள் இல்லை பயங்கரவாத கைதிகள் தான் இருக்கின்றார்கள் என்பது அமைச்சரின் கருத்தாக இருக்கலாம், அந்த கருத்தினை யாரும் அந்த கருத்தை ஏற்று கொள்ளவில்லை. அவர்கள் ஒரு கோரிக்கைக்காக போராடியவர்கள் அரசியல் தேவைக்காக கைது செய்யப்பட்டவர்கள். எனவே அவர்கள் அனைவரும் விடுவிக்கபப்டவேண்டும்.” என்றுள்ளார்.




0 Responses to தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை தடுப்பது இனவாத சிந்தனையாகும்: சுரேஷ் பிரேமச்சந்திரன்