தமது விடுதலை தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உறுதியான முடிவொன்றை அறிவிக்கும் வரையில் உண்ணாவிரதப் போராட்டத்தை கைவிட முடியாது என்று தமிழ் அரசியல் கைதிகள் திட்டவட்டமாக அறிவித்துள்ளனர்.
நாடு பூராவுமுள்ள சிறைகளில் நீண்ட காலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் தமது விடுதலையை வலியுறுத்தி கடந்த திங்கட்கிழமை முதல் உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். இன்று வெள்ளிக்கிழமை ஐந்தாவது நாளாக தொடரும் போராட்டத்தினால் பாதிக்கப்பட்டு 10க்கு மேற்பட்டவர்கள் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ, சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் உள்ளிட்ட குழுவினர் மகசின் சிறைச்சாலைக்குச் சென்று உண்ணாவிரதப் போராட்டம் நடத்திவரும் தமிழ் அரசியல் கைதிகளை நேற்று வியாழக்கிழமை சந்தித்திருந்தனர். இதன்போது உண்ணாவிரதப் போராட்டத்தை கைவிடுமாறு கைதிகளிடம் அவர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.
எனினும், இந்த குழுவினர் எந்தவிதமான உறுதியான முடிவொன்றையும் வழங்கவில்லை. அவர்களின் நிலைப்பாட்டில் புதிதாக ஒன்றும் இல்லையென்பதால் ஜனாதிபதி தமது விடயத்தில் தலையிட்டு தீர்வொன்றை வழங்கவேண்டும் என்பதே தமது உறுதியான நிலைப்பாடு என்றும் தமிழ் அரசியல் கைதிகள் தெரிவித்துள்ளனர்.
தம்மை சந்தித்த குழுவினர் வழக்குகளை ஆராய்ந்து அவற்றை சட்டரீதியாக விசாரிப்பதற்கு ஒருவருட காலம் அவகாசம் வழங்குமாறு கோரியிருந்தனர். அதுவரை உண்ணாவிரதத்தைக் கைவிடுமாறு கேட்டிருந்தனர். எனினும், அவர்களுடைய கோரிக்கை ஏற்றுக்கொள்ளும் வகையில் அமையவில்லையென தமிழ் அரசியல் கைதிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
ஏற்கனவே 8 முதல் 15ற்கும் அதிகமான வருடங்கள் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தாம், நீதித்துறை மீது நம்பிக்கை இழந்திருப்பதாகவும், இவ்வாறான நிலையில் மீண்டும் ஒரு வருடத்துக்கு நீதித்துறையை நம்பத் தயாராக இல்லையென்றும் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள கைதிகள் தெரிவித்துள்ளனர்.
நீதித்துறையின் மீது நம்பிக்கை இல்லாததாலேயே ஜனாதிபதி தமது விடயத்தில் நேரடியாகத் தலையிட்டு தீர்வொன்றை வழங்கவேண்டும் என வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட் டத்தை ஆரம்பித்துள்ளோம். தீர்க்கமான முடிவு கிட்டும்வரை உண்ணாவிரத போராட்டத்தை கைவிடப் போவதில்லை என்று தமிழ் அரசியல் கைதிகள் உறுதியாக குறிப்பிட்டுள்ளனர்.




0 Responses to ஜனாதிபதி உறுதியான முடிவை அறிவிக்கும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தை கைவிட முடியாது: தமிழ் அரசியல் கைதிகள்