Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இலங்கைக் கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடிக்கும் இந்திய மீனவர்களின் வலைகள் அழிக்கப்படுவதுடன், படகுகள் பறிமுதல் செய்யப்படும் என்று மீன்பிடித்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

இலங்கை - இந்திய மீனவப் பிரச்சினை தொடர்பில் தமிழ்நாட்டு முதலமைச்சர் ஜெயலலிதா ஜெயராமுடன் பேச்சு நடத்த தான் தயாரில்லாத போதும், இலங்கை மீனவ சங்க உறுப்பினர்கள் அவரை சந்திப்பதற்கு தடை விதிக்கப் போவதில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

“திருட்டு போவதைப் பற்றி திருடர்களுடன் பேசுவதில் அர்த்தமில்லை. அதே போன்று தான் அனைத்து விடயங்களையும் அரசியல் கண்ணோட்டத்தில் மாத்திரம் பார்க்கும் முதலமைச்சர் ஜெயலலிதா ஜெயராமுடன் பேச்சு நடத்துவது வீணானது. எனவே, நான் மீனவர்கள் விவகாரம் குறித்து இந்திய மத்திய அரசுடன் பேச்சு நடத்துவேனே தவிர ஜெயலலிதாவுடன் ஒரு வார்த்தைகூட பேச விரும்பவில்லை” என்றும் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினை குறித்து இலங்கை - இந்திய மீனவர் சங்கம் தமிழ் நாட்டின் முதலமைச்சர ஜெயலலிதாவுடன் பேச்சு நடத்த தீர்மானித்துள்ளனர். இந்நிலையில், இலங்கை மீன் பிடித்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தலைமையிலேயே முதலமைச்சருடனான சந்திப்பு நடைபெற வேண்டுமென சில மாவட்ட மீன்பிடி சங்க தலைவர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர். இது குறித்து அமைச்சரிடம் எழுப்பப்பட்ட கேள்வியொன்றுக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்ட விடயங்களைக் குறிப்பிட்டுள்ளார்.

“இந்திய மீனவர்களின் அத்துமீறலால் இலங்கை மீனவர்கள் சொல்லொணா துன்பத்தை அனுபவிக்கின்றனர். அத்துடன் எமது கடல் வளமும் சுரண்டப்படுகிறது. இது குறித்து தமிழ் நாட்டின் முதலமைச்சருடன் இலங்கை - இந்திய மீனவர்கள் சங்கம் சார்பில் பேச்சு நடத்தப்போவதாக சங்கத்தினர் என்னிடம் அனுமதி கோரினர். எனக்கு அவருடன் பேசுவதில் உடன்பாடு இல்லாத போதும் அவர்களின் பேச்சுவார்த்தைக்கு முழுமையான அனுமதி வழங்கியுள்ளேன்” என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறும் இந்திய மீனவர்களை தடை செய்யும் வகையில் தமிழ்நாட்டைச் சேர்ந்த மீன்பிடி உரிமையாளர்களுக்கெதிராகவே இலங்கை அரசாங்கம் அடுத்த கட்ட நகர்வுகளை முன்னெடுக்குமென்றும் அவர் கூறியுள்ளார்.

மஹிந்த அமரவீர மேலும் தெரிவித்துள்ளதாவது, “இந்திய மீனவர்களை கைதுசெய்து சிறை வைப்பதால் எந்தப் பிரயோசனமும் இல்லை. அவர்கள் நாட்கூலிக்கு வேலை செய்யும் அப்பாவிகள். எனவே, அவர்களை இலக்கு வைப்பதனை விடுத்து இதன் பின்னணியில் இருக்கும் உரிமையாளர்களுக்கு படிப்பினை ஊட்டுவதே சிறந்த தீர்வினை பெற்றுத் தரும். அதனடிப்படையில், இலங்கை கடல் எல்லைக்குள் வரும் இந்திய மீனவர்களின் வலைகள் வெட்டப்படுவதுடன், மீன்பிடி படகுகள் பறிமுதல் செய்யப்படவுமுள்ளன.

தமிழ்நாட்டின் அமைச்சர்களும் பிரபல வர்த்தகர்களுமே மீன்பிடி படகுகளின் உரிமையாளர்களாவர். இவர்களது படகுகளை நாம் பறிமுதல் செய்வோம். மீனவர்களை விடுவித்தாலும் எக்காரணம் கொண்டும் படகுகளை திருப்பி வழங்காத வகையில் சட்ட நடவடிக்கை எடுப்போம். தற்போது 71 இந்திய மீனவர்கள் இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அண்மையில் இந்திய பாடசாலை மாணவரொருவரும் கைதுசெய்யப்பட்டிருந்தார்.

அரசாங்கம் இவர்களை தடுத்து வைப்பது இப் பிரச்சினைக்கு முடிவு ஆகாது என்பதனால் விரைவில் அவர்களை விடுதலை செய்வது தொடர்பில் ஜனாதிபதியுடன் பேச்சு நடத்துவேன். மீன்பிடி படகுகளின் உரிமையாளர்களுடனேயே இனிமேல் இலங்கை அரசாங்கம் கொடுக்கல் வாங்கலை மேற்கொள்ளும். அவர்களது வலைகளும் படகுகளும் அழிக்கப்படும் அல்லது கூடுதல் தடை விதிக்கப்படும்” என்றுள்ளார்.

வலைகளை வெட்டவும் மற்றும் படகுகளை பறிமுதல் செய்யுமாறும் எதிர்வரும் வியாழக்கிழமை (ஒக்டோபர் 22) இலங்கை கடற்படை மற்றும் கரையோர பாதுகாப்பு படையினருக்கு அறிவுறுத்தப்படுமென்றும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். அதனைத் தொடர்ந்து இச்செயன் முறைகள் அமுலுக்கு வரும். இந்திய மீனவர்களின் வலைகளை வெட்டவும், படகுகளை பறிமுதல் செய்யவும் முழுமையான அதிகாரம் கரையோர பாதுகாப்பு படையினருக்கே வழங்கப்படவுள்ள நிலையில், அதற்கான பாதுகாப்பினை வழங்குமாறு கடற்படையினரிடம் கோரப்படுமென்றும் அமைச்சர் விளக்கமளித்துள்ளார்.

இவ்விவகாரம் குறித்து நாம் அடிக்கடி இலங்கையிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகருடன் பேச்சு நடத்தி வருகிறோம். உயர்ஸ்தானிகர், இந்திய மீனவர்களால் இலங்கை மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினையை பரந்த மனத்துடன் புரிந்துகொண்டுள்ளார். அவரூடாகவே நாம் இந்திய மத்திய அரசாங்கத்துக்கு எமது நிலைப்பாட்டினை தெரியப்படுத்தி வருகிறோம். அடுத்த வாரமும் இவ்விடயம் குறித்து உயர்ஸ்தானிகருடன் உரையாடவுள்ளேன் என்றும் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

0 Responses to அத்துமீறும் இந்திய மீனவர்களின் வலைகள் அழிக்கப்படும்; படகுகள் பறிமுதல் செய்யப்படும்: மஹிந்த அமரவீர

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com